ஆனந்தசங்கரி அவர்கள் ஜனாதிபதி மடல்
19-05-2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
அன்புடையீர்,
முள்ளிவாய்க்காலில் உணவு, மருந்து நெருக்கடி
விடுதலைப் புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதன் மூலம் நாட்டில் சமாதானத்தை கொண்டு வந்தமைக்காக உங்களை வாழ்த்துகிறேன். இந் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் பயங்கரவாதம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக வைத்திருந்தமையை யாரும் மறுக்கமாட்டார்கள். விடுதலைப் புலிகளின் தோல்விக்காக உழைத்த ஒவ்வொருவரையும் நன்றியுடன் நினைவு கூர வேண்டும் நீங்கள் இந்த நாட்டின் துப்பாக்கிக் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். சட்ட விரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சொத்து பறிமுதல் போன்ற தண்டனை உட்பட. விளையாட்டு துப்பாக்கி விற்பனை கூட தடை செய்யப்பட்டு சந்தையில் உள்ளவை வாபஸ் பெறப்பட வேண்டும்.
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க எத்தகைய ஒத்துழைப்புக்களை நான் உங்களுக்கு தந்தேன் என நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் தூரதிஷ்டவசமாக இது சம்பந்தமாக எந்த கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாமல் இருக்கின்றேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய மாவட்ட மக்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுணியா ஆகிய பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் ஆகியோர் மீது கொண்ட அக்கறையால் அதனை செய்ய முடியவில்லை. கடைசியாக மிஞ்சியுள்ள இடம் பெயர்ந்த மக்களே மிக்க அபாக்கியவான்கள். அவர்களே மிக்க புறக்கணிக்கப்பட்டவர்களுமாவர். நான் அவ்வாறு கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். இறுதியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முள்ளி வாய்க்காலில் இருந்து பல மிக துயரமான செய்திகள் வருகின்றன. எனது நல்ல நண்பர்கள், உறவினர்கள் பலர் காயப்பட்டும், இறந்தும், பலரை காணவில்லை என்று நண்பர்கள் மூலமாக அறிகிறேன்.
உண்மையற்ற கதைகளை கூறி நான் உங்களைத் தப்பாக வழி நடத்துபவன் அல்ல. நான் உண்மையென நம்புவதையே கூறுவேன். தூரதிஷ்டவசமாக நான் அறிந்த நம்பக் கூடிய ஓர் செய்தி யாதெனில் புலிகள் யுத்தத்தில் காயமடைந்த தம் போராளிகளாக இருந்தவர்களை ஒன்றுகூட வைத்து கொன்றும் உள்ளனர். அவர்களில் சிலர் தப்பி இருக்கக்கூடும். மேலும் பொது மக்கள் பங்கர்களில் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டனர். அவர்களில் சிலர் பங்கர்களுக்குள் அகப்பட்டிருக்கலாம். பல குடும்பங்கள் புதைந்து மடிந்தும் விட்டனர்.
யுத்தத்தின் கடைசி கட்டத்தில் ஒரு சமயம் அரச நிர்வாகம் சீர் குலைந்தும், வைத்தியர் தம் கடமையை நிறுத்தியும், உணவு கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்க சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்ததும் தொடர்ந்து செல் அடிக்கப்பட்ட ஒரே காரணத்தினால்தான். அத்தோடு நோயாளிகள் கூட புல்மோட்டைக்கு ஏற்றிச் செல்லப்பட வில்லை. அதன் விளைவு முள்ளிவாய்க்காலுக்கும் உணவு எடுத்துச் செல்லப்படவில்லை. சொற்ப உணவு மிஞ்சி இருந்தால் அதை பங்கிட்டு கொடுக்க அரச நிர்வாகமும் இல்லை. காயமுற்று வைத்தியத்துக்காக காவல் இருந்த மக்களுக்கு வைத்திய வசதிகள் இல்லை. முதலுதவி கொடுக்ககக்கூட ஒருவரும் இல்லை. இந்நிலையில்தான் முள்ளியவாய்க்காலை அரச படைகள் கைப்பற்றின.
இக்கட்டத்தில் அங்கே ஒரு இலட்சம் மக்களுக்கு மேல் இருந்தனர். ஆனால் அத்தியாவசிய ஆணையாளர் நாயகம் 20,000 மக்கள் மட்டும்தான் அங்கே இருக்கின்றார்கள் என்றும் நான் கூறிய ஒரு லட்சம் தப்பான கணக்கெனவும் கூறினார். ஆனால் முள்ளிவாய்க்கால் கைப்பற்றப்பட்ட பின்பு 70,000 இற்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் வெளியே வந்ததோடு பலர் மேலும் வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த எண்ணிக்கைக்கூட ஒரு இலட்சத்தை தாண்டியிருக்கும் அங்கு இன்னும் பல மக்கள் கைவிடப்பட்டுள்ளனர் என நான் நம்புகிறேன். அவர்களில் காயமுற்றும், பட்டினியால் மரணத்தையும் எதிர் கொண்டுள்ளனர். நான் அறிந்தமட்டில் இதுதான் அங்கே உள்ள நிலை.
ஆகவே மிக விரைவாக ஓர் மருத்துவர் குழுவையும் காயமுற்றோரையும், பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களை தேடி பிடிக்க போதியளவு தொண்டர்களையும் அவர்களுடன் போதிய உணவு பொட்டலங்களையும் அனுப்புமாறு மிக்க பணிவாக வேண்டுகிறேன்.
இச் செய்தி உங்களுக்கும குழப்பத்தை உண்டு பண்ணலாம். உடன் நடவடிக்கைக்காக இச் செய்தியை நான் உங்களுக்கு தெரிவிக்க தாமதித்தால் அது மேலும் நஸ்டத்தையே உண்டு பண்ணும். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம் யாரோ செய்த பாவத்திற்கு நீங்கள் பரிகாரம் தேடிய பெருமையை அடைவீர்கள். முன்னோடியாக களநிலைமை அறிந்து வர ஓர் குழுவை முள்ளிவாய்க்காலுக்கு உடன் அனுப்பி வையுங்கள்.
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ
0 comments :
Post a Comment