Friday, May 1, 2009

நாரும் தொடுப்பும். -வம்சிகன்-


உழைத்து வாழுகின்ற
வெளிநாட்டுத் தமிழர்களின்
முதுகெலும்புகள்
அங்கு
முறித்தெடுத்து
இங்கு
ஆயுதங்களாக
அடுக்கப்பட்டிருப்பதால்
அவர்கள்
கூன்விழுந்தவர்களாய்...

முறித்தவர்கள்
ஒன்றுக்கு மூன்று
எலும்பினராய்
திமிர்ந்தபடி
வெளிநாட்டில்..

வெளிநாடுகளில்
சுய முகம்
தேடிக்களைத்தவருக்கு
நிஜ முகம்
இப்போது
நினைவில்லை
ஒப்பிட்டுப் பார்க்க.

எலும்பும் விறைக்கும்
பனியுறைவில்
பயின்(pine) மரக்காடுகளுக்குள்ளிருந்து
மயிலும் மானும்
பல நேரங்களில்
ஒட்டகங்களும்
பிடித்துவரும்
நாகரீக உடையணிந்த
ஊடக வேடுவரின்
ஈட்டி முனையில்
உண்மைகள்
குற்றுயிராய்..

விரலால்
சுட்டிக்காட்டும்
வானத்தைத்
தொட்டுக்காட்டும்
வெறுமைக்குள்
மனிதத் தூசுகளாய்
உழைப்பவர்கள்..

அந்நியர்
இறைத்துவிடும்
இந்த
ஆயுத இருட்டுக்குள்ளிருந்து
எமக்கான வெளிச்சத்தைப்
பிழியமுடியாது.

நமக்குள்
இருந்தால் மட்டுமே
வெளியில் கசியும்
வெளிச்சம்.

வாழ்ந்த பரம்பரை
மீண்டும் பலமுறை
வாழ நினைப்போம்
இலங்கையராய்
எல்லோரும் அறிவோம்
நாக மரம்!
காட்டுக் கோழி!
நீலோற்பல மலர்!


-வம்சிகன்-
2009-04-30. VII

No comments:

Post a Comment