கசிவு -வம்சிகன்-
கந்தகம் கொட்டிக்
கருக்கிய பூமியில்
வெந்து வெதும்பி
வேதனை தின்று
மிஞ்சிய உடலில்
ஒன்பது வாசலும்
ஒடுங்கிய நிலையில்-ஒரு
ஊசி முனையளவு
உயிர்த்திரி எரியும்!
நெஞ்சு முட்டும்
தண்ணிக்குள் நடந்து
இடறி விழுந்து
விசும்பி எழுந்து
மரணம் வந்து
தலையில் விழுமோ
முதுகில் விழுமோ என
பல்லாயிரம் முறை
செத்துப் பிழைத்து
கரையினைத் தொடும்
இடைவெளி இன்னும்
நகத்துளியிருக்க
சுருங்கிய
உயிர்க்குமிழ்
உடைவதற்குள்ளாய்
தன்னை மீட்ட
மணிக்கரம் தொட்டுக்
கேட்கிறது!
தப்பி வந்த
மனிதம் ஒன்று
என்னைப்போலவே
எஞ்சியவரையும்
காப்பாற்று.
2009-05-16
0 comments :
Post a Comment