Monday, May 25, 2009

மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு ஆனந்தசங்கரி அவர்களின் மடல்


24.05.2009
மேஜர் ஜெனரல் சந்திரசிறி
தகுதிவாய்ந்த அதிகாரி - இடம்பெயர்ந்தோர் முகாம்
இராணுவத் தலைமையகம் - வவுனியா.

அன்புள்ள தளபதி

கர்ப்பிணி தாய்மார்களினதும் குழந்தை பெற்ற தாய்மார்களினதும் பரிதாப நிலை

இடம் பெயர்ந்தோர் மத்தியில் மேலே கூறப்பட்ட தாய்மார்களின் பரிதாப நிலையை மிக அனுதாபத்துடன் பரிசீலித்து அவர்களை குறிப்பிட்ட சில காலத்திற்கு வெளியில் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முள்ளிவாய்க்காலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்படும் வரை அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றி நான் கூறத்தேவையில்லை. போதிய உணவும் ஓய்வும் இன்றி மிகக் குறுகிய அளவு திரிபோசாவுடன் போசாக்கின்றி நலிந்து வாழ்கின்றார்கள். தமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை முகாமுக்கு வரும் வரை அவர்களால் அணுக முடியவில்லை.

அத்தகையோரில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வவுனியா, மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் வடக்கே உறவினர்களும் நண்பர்களும் நிறைய இருக்கின்றனர். நிறைமாத கர்ப்பிணிகள் குழந்தை பெற்றவர்கள் குழந்தைகளுக்கும் முப்பத்தொரு நாட்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது நீங்கள் அறியாததல்ல. இக் கட்டத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்களேயானால் பல அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவையாவன

தாயோ பிள்ளையோ அல்லது இருவருக்கும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. பிள்ளைக்கு அங்க குறைபாடு ஏற்படலாம். குழந்தைகளுக்கு தொற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படலாம். அத்துடன் குறைப்பிரசவம் கூட ஏற்படலாம், தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சம்பிரதாயமான முறையில் வைத்தியங்களும் செய்யப்படுவதுண்டு. அத்துடன் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் பலர் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றனர். இத்தகையோரால் பாதுகாப்புக்கு எதுவித அச்சுறுத்தலும் இருக்காது. ஆகவே குழந்தை பெற்ற தாய்மார்களையும், நிறைமாத கர்ப்பிணிகளையும் உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் அவர்கள் கையேற்க தயாரெனில் நீங்கள் கணிக்கின்ற குறிப்பிட்ட சில நாட்களுக்கு அவர்களை கையளிப்பீர்களேயானால் நன்றியுடையவனாக இருப்பேன்.


நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com