நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனர்: பாலித கொஹண
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டபோது விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைவது தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் மின்னஞ்சல்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
இதற்கமைய நடேசனும், புலித்தேவனும் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய முற்பட்டபோதே இராணுவத்தினர் அவர்களைச் சுட்டுகொன்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இதனை மறுத்திருக்கும் இலங்கை அரசாங்கம், புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைய முற்பட்டபோது அவர்கள் புலி உறுப்பினர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. இதில் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.
நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியார் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிலிருந்தும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக பாலித கொஹண பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார்.
“இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில வெள்ளைக் கொடியுடன் பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடையவேண்டும் என நான் கூறியிருந்தேன்” என்று கொஹண தெரிவித்தார்.
அவ்வாறு அவர்கள் சரணடைந்தால் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது தானே என நோர்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் பாலித கொஹண அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார்.
ஆனால், அவ்வாறு சரணடைய முற்பட்ட விடுதலைப் புலித் தலைவர்கள் இருவரையும் விடுதலைப் புலிகளே சுட்டுக்கொன்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார். Thanks.Inllanka
0 comments :
Post a Comment