இலங்கையில் அனைத்து சமூகமும் ஒற்றுமையாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்குப் பிரதான கட்சிகள் இரண்டும் பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி வித்தியாசங்களை மறந்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப இணைந்து செயற்படவேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்குத் தற்பொழுது கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
“பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகப் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நாம் நினைவுகூறவேண்டும். இதனைவிட அரசியல் தலைவர்கள் உட்படப் பலர் இந்தப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் ஆட்சிசெய்த அரசியல் தலைவர்களும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்தி வந்தனர்” எனவும் அவர் கூறினார்.
“பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகண்டுள்ளார் அவருக்கு எனது பாராட்டுக்கள். ஆனால் நாட்டில் ஒற்றுமை ஏற்படுத்தப்படவேண்டும். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அரசியல் தீர்வொன்று மிக விரைவில் முன்வைக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதனை நடைமுறைப்படுத்தி, இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீளக்குடியர்த்துவது அவசியம்” என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு மனிதநேயப் ணியாளர்கள் சென்று பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
No comments:
Post a Comment