இலங்கையில் தலைநகர் கொழும்பில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஈழத்தமிழ் சிறுவர் -சிறுமியர்களுக்கான மறுவாழ்வு முகாம் உள்ளது.
அங்கு 17 முதல் 25 வயதுக்குட்பட்ட 54 தமிழ் இளைஞர்களும், 40 இளம் பெண்களும் டெய்லரிங், வெல்டிங், கார்பெண்டரி, மெக்கானிக் உள்பட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
அந்த முகாமில் உள்ள சிறுவர்களில் கணேசலிங்கம் தயாளன் என்ற சிறுவன் மற்ற சிறுவர்- சிறுமியரிடம் இருந்து வித்தியாசப்பட்டு காணப்படுகிறான். விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை பிரிவான கரும்புலிகள் அமைப்பில் இவன் உறுப்பினராக இருந்துள்ளான். புலிகள் அளித்த பயிற்சி பற்றி அவன் கூறியதாவது:-
வவுனியா அருகில் உள்ள பண்டரிக்குளம் என் சொந்த ஊர். சிங்களராணுவ தாக்குதலில் என் தாய், தந்தை இருவரும் செத்துப்போனார்கள். ஆதரவற்ற என்னை ஒரு பாட்டி வளர்த்தார்.
10 வயதில் வன்னியில் உள்ள செஞ்சோலை ஆதரவற்றோர் இல்லத்தில் என்னை சேர்த்தனர். அங்கு படித்து வந்தபோது 12 வயதில் விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்டேன். மன்னாரில் உளவு பார்க்கும் பணிதான் எனக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை.
பிறகு ஆயுதங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் வேலை பார்த்தேன். 2007-ம் ஆண்டு நொச்சிக் கிடாவில் சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் ஈடுபடுத்தப்பட்டேன். என் கால், கைகளில் காயம் அடைந்தேன்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் தாய்ப்பாசம் பற்றி எனக்குத் தெரியாமலே போய்விட்டது. இந்த நிலையில் அச்சுதன் மாஸ்டர் கொடுத்த பயிற்சியில் நான் ஈர்க்கப்பட்டேன். அவர் அறிவுரையின் பேரில் கரும்புலிகள் படையில் என்னை இணைத்துக்கொண்டேன்.
தற்கொலை தாக்குதல் நடந்த மனவலிமை வேண்டும். அதற்காக யோகா, தியானம் பயிற்சி கொடுத்தனர். கரும்புலிகள் படையில் சேர்ந்ததை பெருமையாக கருதினேன். ஈழத்துக்காக தற்கொலை தாக்குதல் நடத்த தயாரானேன்.
கரும்புலிகளாக இருப்பவர்களுக்கும், உளவுப்படையில் இருப்பவர்களுக்கும் “ஓ” தரப் பரீட்சை வைப்பார்கள். மொத்தம் 10 பாடம் கொண்ட அந்த தேர்வில் 6 பாடங்களில் நான் “ஏ” கிரேடு பெற்றேன். 2008 ஜூன் மாதம் என் பயிற்சி முடிந்தது.
பிறகு தற்கொலை தாக்குதலுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வரும்வரை காத்திருக்கும்படி கூறினார்கள். கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு நல்ல ஆர்வம் உண்டு. பள்ளி அணியில், இன்னொரு மாணவன் பெயரில் வெளியிடங்களுக்கு சென்று விளையாடினேன்.
என்னைப் பற்றி யாரோ சிங்கள போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டனர். கடந்த நவம்பர் மாதம் நான் பள்ளி நண்பர்களுடன் வெளியூருக்கு கிரிக்கெட் விளையாட சென்றபோது உளவுத்துறையினர் பிடித்துவிட்டனர்.
என் கழுத்தில் இருந்த சயனைடு குப்பியும், மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியும் காட்டிக் கொடுத்து விட்டது. கொழும்பில் சில மாதம் வைத்திருந்த என்னை தற்போது இந்த முகாமுக்கு அனுப்பி உள்ளார்கள்.
இந்த முகாம்களில் ஓராண்டு இருக்க வேண்டும் என் மனம் மாறிவிட்டது தொடர்ந்து மேல்படிப்பு படிக்க விரும்புகிறேன் என்ஜினீயர் ஆக ஆசைப்படுகிறேன்.
இந்த முகாமில் உள்ள எல்லாரும் பயிற்சி முடிந்ததும் அவரவர் பெற்றோரிடம் திரும்பிச் சென்று விடுவார்கள். எனக்கு என்று யாரும் இல்லை. எனக்கு யார் அரவணைப்பு கொடுப்பார்கள்?
இவ்வாறு கணேசலிங்கம் கூறினார்.
நன்றி மாலைமலர்
No comments:
Post a Comment