Friday, May 1, 2009

பிரபாகரனது தவறுகளை எடுத்துரைத்தால் புலிகளியக்கத்தில் உயிருடன் இருக்கமுடியாது என்கின்றார் ஜோர்ஜ். அவ்வாறாயின் கருணா எவ்வாறு உயிருடன் இருந்தார்?



புலிகளியக்கத்தின் மூத்த உறுப்பினரும் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டு வந்தவருமான ஜோர்ஜ் என்பவர் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் படையினரிடம் சரணடைந்திருந்தார். ஜோர்ஜ் மாஸ்ரர் கடந்த காலங்களில் புலிகளியக்கத்தினரின் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களிலும் வெளிநாடுகளில் இடம்பெற்ற சமாதான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளின்போதும் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டுவந்தவர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

வன்னியில் யுத்த சூனியப் பிரதேசங்களில் இருந்து தப்பி வந்த மக்களோடு மக்களாக படையினரின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களுள் வந்துள்ள இவர் கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளகளைச் சந்தித்து பல விடயங்களை வெளியிட்டுள்ளார்.

ஐரிஎன் நிருபர் ஒருவருடைய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜோர்ஜ் பிரபாகரன் ஓர் கொலைகாரன் என தெரிவித்தபோது நீங்கள் எவ்வாறு அப்படிக்கூற முடியும்?
ஏன அந்த நிருபர் கேட்ட கேள்விக்கு, „இத்தனை கொலைகளைச் செய்திருக்கின்ற படியால் நான் கூறுகின்றேன் அவர் கொலைகாரன்' என அறுத்துறுத்துக் கூறினார்.

அப்படியாயின், நீங்கள் அவ்வியக்கத்தில் இருந்த இத்தனை வருடகாலங்களிலும் பிரபாரனிடம் கூற முடியாவிட்டாலும் நீங்கள் சந்தித்திருக்கக்கூடிய இரண்டாம் நிலை தலைவர்களிடமாவது இந்தக் கொலைகாரனுடைய கொலைகளை நிறுத்த ஓர் நடவடிக்கை எடுங்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கலாம்தானே? என நிருபர் கேட்டபோது,

இல்லை. அந்த இயக்கம் வளர்க்கப்பட்டிருக்கின்ற விதத்தில் இது முடியாத காரியம். நான் இதை கூறிவிட்டு அங்கு இருந்திருக்க முடியாது. என்னுடைய மனைவியின் சுகவீனத்தை பார்க்க இருந்தது. என்னுடைய சொந்த விடயங்களைப் பார்க்க இருந்தது. ஆகவே இவ்வாறனதோர் விடயத்தை செய்வதற்கு எனக்கு சக்கி இருக்கவில்லை. அத்துடன் இவற்றை நான் கூறியிருந்தால் என்னால் அங்கு இருந்திருக்க முடியாது எனவும் பதிலளித்தார்.

ஆனால் புலிகளியக்கத்தில் இருந்து பிரிந்துவந்து அரசுடன் ஒட்டிக்கொண்டுள்ள கருணா, பல தடவைகளில் தான் பிரபாகரனின் தவறுகளைத் தட்டிக் கேட்டுள்ளதாகவும், ஏன் புலிகளால் கொல்லப்பட்ட இந்தியப் பிரதமர் ராஜிவ் கொலை தொடர்பாக தனது எதிர்ப்பை தெரிவித்ததாகவும் பலமுறை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார், தெரிவித்தும் வருகின்றார்.

கருணாவின் தகவல்கள் ஜோர்ஜ் இன் தகவலில் இருந்து முற்றிலும் முரணானதாகக் காணப்படுகின்றது. ஜோர்ஜ் ன் தகவலின்படியும் புலிகளின் வரலாறுகளின் படியும் புலிகளியக்கத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பதும் தட்டிக்கேட்பவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதும் உண்மையான விடயமே. ஆனால் கருணா தட்டிக்கேட்டிருந்தும் அவர் அங்கு கொல்லப்படவில்லை என கருணா கூற முற்படுவது புலிகள் இயக்கத்தில் பேச்சு மற்றும் தட்டிக்கேட்கும் உரிமைக் உண்டு எனக் கூற முற்படுகின்றாரா? அன்றில் கருணா பிரபாகரனுக்கு காட்டிய விசுவாசத்திற்காக விதிவிலக்களிக்கப்பட்டதா? அல்லது கருணா புளுடா விடுகின்றாரா? என்கின்ற கேள்விகள் எழுகின்றது.

எது எவ்வாறாயினும் கருணாவும் ஜோர்ஜ் ம் புலிகளியக்கத்தில் அதி சுகபோகம் அனுபவித்தவர்கள் என்பது உண்மை. இன்று இவர்கள் மக்களை ஏமாற்ற முற்படுகின்ற விதமே புலிகளின் உண்மைமுகமாகும். நேரடியாக சொல்லப்போனால் இதுவே புலிக்குணம். இவர்கள் இவ்வாறே மக்களையும் கீழ்மட்ட போராளிகளையும் கசக்கி பிளிந்து முட்டாள்களாக்கி சுகபோகம் அனுபவித்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்.

எனவே இன்று புலிகள் தோற்கடிக்கப்படப்போகின்றார்கள் என்பதை உணர்ந்தவர்களாக அரச பகுதிக்கு மாறிக்கொண்டவர்கள் பிரபாரனது அழுக்குகளை கூறி தம்மை பரிசுத்தவான்களாக வெளிக்காட்ட முற்படாமல் தாம் இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் இழைத்த துரோகங்களுக்காக முதலில் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும்-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com