Monday, May 18, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளாரா? புலி ஊடகங்கள் மௌனம் காப்பதேன்?


கடந்த மூன்று தசாப்பங்களாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த இலங்கை நாடு விடுதலை அடைந்திருக்கின்றது என இலங்கை அரச செய்திகள் தெரிவித்துள்ளது. இன்று எமது நாடு அனுபவித்து வந்த சகல துன்ப துயரங்களுக்கும் அதிபதியான வே.பிரபாகரன் அவனது பட்டாளங்களுடன் கொல்லப்பட்டுள்ளதாக பலவகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் விடுதலைப் போராட்டம் எனும் பிரபாரனது மாயையில் எம்மக்கள் சிக்குவதற்கு புலிகளின் ஊடகங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. ஒரு தொகுதி தமிழ் மக்கள் பிரபாகரனை தலைவராக ஏற்றுகொண்டதற்கு இவ் ஊடகங்களின் செயற்பாடுகளே காரணம் எனலாம். பிரபாகரன் காலத்தில் விடுதலைபெறப்படவேண்டும் எனவும், பிரபாகரன் தலைமை வகிக்காத ஓர் விடுதலைப் போராட்டத்தை இலங்கையிலயே முன்னெடுக்க முடியாது எனவும் கூறப்பட்டு வந்திருக்கின்றது.

இவ்வாறான பிரச்சாரங்களை நம்பிய தமிழ் மக்கள் இப்போராட்டத்தின் பெயரால் பல தியாகங்களைச் செய்துள்ள நிலையில் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இச்செய்தி வெளியாகி 15 மணித்தியாலயங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் புலிகளின் ஊடகங்கள் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றன.

இச்செய்தியை கேட்ட தமிழ் மக்கள் மிகவும் திகைத்த நிலையில் உள்ளபோது புலிகளின் ஊடகங்கள் தொடர்ந்தும் மௌனம் காப்பதன் கபடம் யாது? இன்று வருந்தி நிற்கும் மக்கள் உண்மையை அறியும் உரிமையை புலிகளின் ஊடகங்கள் மறுப்பதேன்? இலங்கையிலே புலிகள் இயக்கம் ஒன்று இல்லை என்கின்ற நிலை தற்போது உருவாயுள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்று சூசையை தொடர்பு கொண்ட ஊடகங்கள், சூசை நாங்கள் துண்டுக்குள்ள நிற்கின்றோம். நான் எனது மனைவியை அனுப்பி விட்டு மனிதகேடயங்களாக இங்கு வைத்துள்ள மக்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். நாம் அடிபணியமாட்டோம் இன்னும் ஒரு சில மணித்தியாலயங்கள் எஞ்சியிருக்கின்றது என ஓலமிட்ட செய்தியை பிரசுரித்திருந்தனர். ஆனால் இன்று உண்மை தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு சரியான தகவலை கொடுக்க தயங்குவதேன்? நேற்று சூசையை தொடர்புகொண்ட அதே தொலைபேசியில் உடனடியாக ஒருமுறை அவரை தொடர்பு கொள்ளுங்கள். உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதா? மக்களே புலம் பெயர் புலித்தொழிலாளர்களிடமும் ஊடகங்களிடமும் உண்மையை அறியுங்கள். தயவு செய்து இனியும் மௌனிகளாக இருந்து ஏமாற்றமடையாதீர்கள்.

No comments:

Post a Comment