Thursday, May 21, 2009

பிரபாகரனை வீழ்த்திய கேடி யார்? புலர்கின்ற உண்மைகள். -வன்னிமகள்-

1970 களில் ஆரம்பிக்கப்பட்ட உரிமைப் போராட்டம் 1980 களில் ஆயுதப் போராட்டமாக உருப்பெற்று இன்று சுமார் 38 வருடங்களை எட்டிய நிலையில் அப்போராட்டம் எதிர்கொண்ட வஞ்சகர்கள் ஏராளம் ஏராளம். இத்தனை காலமும் ஓங்கிஒலித்த குரல்கள் ஓய்ந்திருக்கின்றன. மக்கள் முகங்களில் மயான அமைதி: மனங்களில் குமுறல்கள். ஆதரவு சொல்வதற்கென யாருமில்லை.

தமக்கென ஒரு இராஜ்யத்தை அமைத்து ஓர் இராணுவக்கட்டமைப்பை உருவாக்கி வீரவேங்கை தொட்டு பிரிகேடியர் வரை பட்டங்கள் கொடுத்து மாவீரர் என மகுடம் சூட்டி வழியனுப்பி வைத்தவரை வழியனுப்ப யாருமின்றி.. என்ன நடந்தது? ஏது நடந்தது ? என்பதை ஆராயக்கூட மக்களுக்கு இடமளிக்கப்படவில்லை. ஒட்டு மொத்த தமிழீழ விடுதலைப்போராட்டமும் விலை பேசி விற்கப்பட்டுள்ளது.

பல இரகசியங்கள் அம்பலத்திற்கு வந்த வண்ணமுள்ளது. ஆனால் அந்த இரகசியங்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஓர் புதிய அத்தியாயத்தை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் மக்களின் அதீத உழைப்பில் அதி உச்ச நிலையை எட்டிய இப்போராட்டமானது, தலைவரினால் முற்றாக நேசிக்கப்பட்ட, நம்பப்பட்ட ஒருவரினாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் எத்தனையோ இடர்களையும் துரோகங்களையும் இனம் கண்டு கொண்ட தலைவரால் தம்முடன் கூடவே இருந்த பாம்பின் விசத்தை அறியமுடியாமல் போய்விட்டது.

1978 தொட்டு 1983 வரை ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்த கே.பி. அவ்வியக்கத்தின் தலைமைகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது, அவ்வியக்க உறுப்பினர்கள் பலர் விலகிச்செல்கையில் தானும் விலகிச் சென்று இந்தியாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இவ் வியாபாரத்தினூடாக இந்தியாவில் உள்ள தாதாக்களுடன் நட்பு கொண்டிருந்த இவரை இந்தியப்பொலிஸார் வலைவிரித்த வேளையில், தனது போதைப்பொருள் கடத்தல் தளத்தை தாய்லாந்திற்கு மாற்றிக்கொண்ட கே.பி. அங்கு ஆயுதக்கடத்தல் மன்னர்களைக் கண்டுகொண்டார். தனது போதைப் பொருள் கடத்தலுடன் ஆயுதக்கடத்தலையும் மேற்கொள்ளமுடியும் என திட்டமிட்ட இவர் மீண்டும் ரெலோவைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அத்தருணத்தில் அவர்களிடம் சுயமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ய போதிய நிதி வசதி இருக்கவில்லை. உடனே புலிகளைத் தொடர்பு கொண்டு தலைவருக்கும் தனக்குமிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

இயற்கையில் தனது நிழலைக்கூட நம்பாத தலைவர் கே.பி. ஐப் பூரணமாக நம்புகின்றார். புலிகளின் சகல வலைப்பின்னல்களும் கே.பி. யின் கையில் வீழ: கணக்கு வழக்கு, கேள்வி பதில் எதுவிமில்லாமல் புலிகளியக்கத்தின் சகல சர்வதேச தொடர்பு மற்றும் நிதிகள் யாவும் அவர் கையில் கிடைக்க, கடத்தல் வியாபாரமும் ஓ.. ஓ என ஓடுகிறது.

கிழக்கில் போர் தூரதிஸ்டவசமாக தோல்வியைத் தழுவி போராளிகள் பின்வாங்குகின்றனர். வன்னியில் போர் ஆரம்பமாகி சிறிலங்கா இராணுவச் சக்கரம் மின்னல் வேகத்தில் சுழல, யுத்தத்தில் வெற்றி என்பது இயலாத காரியம் என சர்வதேசங்களினால் எதிர்வு கூறப்படுகின்றது. இலங்கை அரசு தொட்டு சர்வதேசம் வரை வன்முறைகளைக் கைவிட்டு புலிகளை பேச்சு வார்த்தைக்கு திரும்புமாறு அறைகூவல் விடுகின்றது.

இந்நிலையில் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் இல்லாத இடைவெளிக்குள் நுழைந்த கே.பி. யின் இரட்டை வேடமானது தலைவரை தனது பலம், பலவீனம் உணர்ந்து தமக்கு சாதகமான ஓர் முடிவை எடுக்க அனுமதிக்கவில்லை.

சர்வதேசத்திற்கும் புலித்தலைமைக்கும் இடையிலான தூதுவராகச் செயற்பட்ட கே.பி. சர்வதேசம் தொடர்பாக தலைவருக்கு தவறான கருத்துக்களைக் கொடுத்து எந்த விதத்திலும் சர்வதேசத்தை நம்பவேண்டாம், நான் உங்களுக்குப் போராடுவதற்குத் தேவையான சகல வளங்களையும் விநியோகிப்பேன், நீங்கள் போராடுங்கள் என கூறி, சாதகமாக திறக்கக்கூடிய கதவுகளை சாதுரியமாகப் பூட்டினார். மறுபுறத்தில் நான் தலைவருடன் பலமுறை பேசினேன், அவர் ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை என சர்வதேசத்திடம் எடுத்துரைத்துள்ளார்.

மறுபுறத்தில் யுத்தம் உக்கிரமடைந்து கொண்டிருந்தபோது, வன்னியிலிருந்து தலைவரின் மகன் சார்ல்ஸ் அன்ரனி களத்திற்கு தேவையான பொருட்களுக்காக பலமுறை கே.பி. ஐ தொடர்புகொண்டிருக்கிறார். வெடிபொருட்கள், குண்டுகள், செல்கள், தோட்டாக்கள் பற்றாக்குறையாக இருந்திருக்கின்றது. ஆனால் ஒரு கப்பல்கூட வன்னியைச் சென்றடையவில்லை. கே.பி.யினால் அனுப்பப்பட்ட கப்பல்கள் யாவும் நடுக்கடலில் வைத்து வெடித்துச் சிதறின. அங்கு அந்த ஆயுதக் கப்பல்களில் கே.பி பிரபாகரனுக்கும், சார்ல்ஸ் அன்ரனிக்கும் உத்தரவாதமளித்த ஆயுதங்கள் நிரப்பப்பட்டிருக்கவில்லை என்பது வெளிவராத உண்மைகளில் அடங்குகின்றது. ஒரு சிறுதொகை வெடிமருந்துகளுடனும் ஆயுதங்களுடனும் இக்கப்பல்கள் புறப்படுகின்றன என்பதும், அக்கப்பல்கள் வன்னியை சென்றடையாது இராணுவத்தால் நடுக்கடலில் வைத்து நிர்மூலமாக்கப்பட இருக்கிறது என்பதும் கே.பி க்கும் அவருடைய சகாக்களுக்கும் மட்டுமே தெரியும். ஆனால் கப்பல் நிரம்ப ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக பிரபாகரனுக்கு சொல்லப்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் வன்னியின் நிலப்பரப்பு இராணுவத்திடம் பறிபோய்க் கொண்டிருக்கையில், போராளிகளின் வலுவை சிறிலங்கா விமானப்படை துவம்சம் செய்து கொண்டிருந்தது. வன்னிக்களத்தில் ஓர் மாற்றத்தை அன்றில் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டுமானால் விமானப்படையின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இதன் அவசியம் பலமுறை கே.பி. யிடம் எடுத்துரைக்கப்பட்டும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளுக்கென புலம்பெயர் தமிழர் பிரத்தியேகமாக பெருந்தொகைப்பணத்தைக் கொடுத்திருந்தும் விமான எதிர்ப்பு ஏவுகணைக்குப்பதிலாக ஒரு கலிபர் கூட வன்னியைச் வந்தடையவில்லை.

புலம்பெயர் தேசத்திலுள்ள தலைவரது விசுவாசிகள் பலர் தலைவரை நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இருந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுக்குமாறு கூறியபோதும், அந்த முன்மொழிவுகளைப் பரிசீலிக்க அனுமதிக்காத கே.பி. இறுதிநேரத்திலாவது சர்வதேச சமுகம் வந்து தலைவரையும் போராளிகளையும் காப்பாற்றக்கூடிய வகையில் தான் வேலைத்திட்டங்களையும் வலைப்பின்னல்களையும் உருவாக்கி வைத்திருப்பதாக தலைவரை பங்கரில் முடக்கி வைத்திருந்தார்.

இறுதியில் தலைவரதும் அத்தனை தளபதிகளதும் உயிர்கள் மிகவும் இலகுவாக விலை பேசி விற்கப்பட்டுள்ளது. இவ் வியாபாரம் எவ்வாறு நடந்தேறியது என்பது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

திட்டமிட்ட முறையில் தன்னை சர்வதேச ஒருங்கிணைப்பாளராக அறிமுகப்படுத்திக் கொண்ட கே.பி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து மக்கள் திடுக்கிடுவதற்கு முன்னால் தொடர்ந்தும்; மக்களை ஏமாற்றும் தனது புதிய அத்தியாயத்தை பவ்யமாக ஆரம்பித்துள்ளார்.

இன்று தலைவர் இறந்துள்ளார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் தலைவர் எவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டார்? ஈழப் போராட்டம் இத்தனை இலகுவாக முறியடிக்கப்படுவதற்கு கே.பி எப்படி சோரம் போயுள்ளார்? என்ற செய்திகளை அவரின் பின்புலம் அறியாத பலர் மறுத்தாலும் உண்மைகளை உணர்ந்து கொள்ள நெடுங்காலம் செல்லாது. (உண்மைகள் சில வேளைகளில் உறங்கும்: ஆனால் ஒருபோதும் இறப்பதில்லை)

கே.பி பல தீய சக்கிகளுடன் இணைந்து தலைவரையும் தளபதிகளையும் சரணடைய செய்தமை வெளிச்சத்திற்கு வரும்போது, சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகைக்கு உள்ளான தலைவரின் உயிரைப் பாதுகாப்பதற்கு மாற்று வழிகள் இருக்கவில்லை எனவும், ஆனால் அங்கு நயவஞ்சகம் நடந்தேறி விட்டது, அது ஒர் துன்பியல் சம்பவம் என்றும் கூறப்பட்டால் இப்போராட்டத்தில் அதீத நம்பிக்கை வைத்திருந்த மக்கள் அதை நம்பமாட்டார்கள் என கூறமுடியாது.

இங்கு அவ்வாறு தலைவரின் உயிரை காப்பதாயின் சரணடைவதைத் தவிர வேறுவழியில்லாமல் இருந்திருந்தால், அவ்வாறானதோர் முடிவை எடுத்ததில் தவறில்லை. ஆனால் எமது கடந்த கால போராட்ட வரலாற்றில் நாம் செய்த தவறுகளை மீட்டிபார்த்து எம்மிடம் சரணடைந்த மாற்று இயக்கத்தினரை நாம் கொன்ற வரலாறுகளுடன் ஒப்பிட்டு அந்த நிலைமை தலைவருக்கும் அத்தனை தளபதிகளுக்கும் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை பெற்றிருக்கவேண்டும்.

அவ் உத்தரவாதம் உலகிற்கு அறியப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அனால் யாவும் கே.பி யினால் திட்டமிட்ட வகையில் இரகசியமாகவே நடந்தேறியுள்ளது. மக்கள் இவற்றை நம்பினாலும் நம்பாவிட்டாலும் கே.பி தனது இலக்கை அடைந்துள்ளார். புலிகளியக்கத்தின் ஒட்டுமொத்தப்பணமும் அபகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணத்தையும் சுருட்டும் நோக்கில் இத்தனை வருடமும் எமது மக்களின் பெயரால் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் மக்களின் உரிமைக்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பவைத்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முயற்சிக்கப்படுகின்றது.

இந்த இலக்கிற்காக காடுகளில் எஞ்சியுள்ள சில போராளிகள் உபயோகிக்கப்படுகின்றனர். ஆவர்களைக் கொண்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தலைவரின் விசுவாசிகளுக்கும் ஆறுதல் கூறப்படுகின்றது. எனவே புலம்பெயர் தமிழர்களும் காடுகளில் எஞ்சியுள்ள போராளிகளும் தொடர்ந்தும் கேபியின் வலையில் சிக்காது தமது சொந்தப் பாதையை தெரிவு செய்து கொள்வதுடன் கேபியை கண்டுபிடித்து அவரிடம் மாட்டியுள்ள எம் மக்களின் அனைத்து வளங்களையும் நிதியையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இன்று தலைவரின் சந்ததி பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அவர்களுக்கான இறுதி அஞ்சலியைத் செலுத்தத் தன்னும் எவரும் முன்வரவில்லை. தலைவரின் உடல் பத்தோடு பதினொன்றாக முல்லைத்தீவில் எங்கோ ஓரிடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தலைவரை இலங்கைத் தமிழினத்தின் தேசியத் தலைவராகவும் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகவும் தேர்தல் விஞ்ஞாபனம் அமைத்து பாராளுமன்றம் சென்ற த.தே.கூட்டமைப்பினர் விரும்பியிருந்தால் அவரது உடலை ஏற்று அவருக்கான இறுதிக் கடமைகளைச் செய்திருக்க முடியும்.

நாம் தலைவரது உடலைக் கேட்டிருந்தால் அரசு அதைத் தந்திராது என கூட்டமைப்பினர் வழமைபோல் மக்கள் காதில் பூச் சுற்ற முயல்வர். ஆனால் அவ்வுடலை அவர்கள் எற்க விரும்பியிருந்தால் இன்றும் நீதிமன்றம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் அந்த வரலாற்று கடமையைத் தன்னும் செய்யத் தவறியுள்ளனர்.

புலம்பெயர்ந்து புலிகளின் பணத்தில் வாழ்ந்துகொண்டு தலைவருக்கு விசுவாசமானவர்களாக தம்மை காட்டிக்கொள்ளும் பலரும் இதே தவறினை இழைத்துள்ளனர்.

எனவே இன்று நடந்தேறியுள்ள விடயங்களை மக்கள் சுயமாக ஊகித்து எமக்கு எதிர்காலத்தில் ஓர் போர் சாத்தியப்படுமா என்பதனை தீர்மானித்து எஞ்சியுள்ள தமிழர்களையாவது வாழ வழியமைப்பதே சாலச்சிறந்ததாகும் என்பதுடன், ஏமாறுபவர்களாக நாம் இருக்கும் வரை கேபி போன்றோர் ஏமாற்றி கொண்டே இருப்பர் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும். VIII


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com