மோதல்கள் நிறுத்தப்பட்டு மக்கள் பாதுகாக்கப்படவேண்டும்: பராக் ஒபாமா
இலங்கையில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இராண்டு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்தி மோதல் பகுதிகளில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாக்க வேண்டுமென அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா வேண்டுகோள்விடுத்துள்ளார்.
"உடனடியான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த மனிதநேயப் பிரச்சினை பாரிய அழிவைத் தந்துவிடும்" என வெள்ளைமாளிகையில் ஒபாமா கூறியுள்ளார்.
"அரசியல் வேறுபாடுகளை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டுப் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான காலம் தற்பொழுது கனிந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களில் அப்பாவித் தனமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் சிக்குண்டுள்ளனர். அவர்களை முதலில் பாதுகாக்கவேண்டும்" என அவர் தெரிவித்தார்.
"தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டுப் பொதுமக்களை வெளியேற அனுமதிக்க வேண்டுமென நான் கோரிக்கை விடுக்கிறேன். அத்துடன், பொதுமக்களைக் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவது மற்றும் பலவந்தமான ஆட்சேர்ப்பு போன்றவற்றையும் அவர்கள் கைவிடவேண்டும்" என பராக் ஒபாமா வெள்ளைமாளிகையில் கூறியுள்ளார்.
அதேநேரம், இலங்கை அரசாங்கப் படைகளின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களாகப் பாதுகாப்பு வலயத்தில் நடைபெறும் மோதல்களில் பலர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்தே சர்வதேச ரீதியில் இலங்கை மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, பொதுமக்களை வெளியேற அனுமதிக்க வேண்டுமெனவும், அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நிறுத்த வேண்டுமெனவும் அமெரிக்க வெள்ளைமாளிகை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபரின் பேச்சைக் கேட்க இங்கு அழுத்துங்கள்.
0 comments :
Post a Comment