பிரபாகரன் தொடர்பான நக்கீரன் படம் பொய் என நிரூபணம்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று தெரிவித்து, தம்மைப் பற்றிய செய்திகள் வெளியான பத்திரிகை சகிதம் பிரபாகரன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பதாக நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட படம் போலியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அவரது உடலை இலங்கை ஊடகங்கள் தொலைக்காட்சியில் காட்டியதுமுதல், பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று பல தமிழ் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. பிரபாகரன் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறார் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர்கள் பலரும் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே, இலங்கை இராணுவத்தின் இறுதி நேரத் தாக்குதலை முறியடித்து பிரபாகரனும் அவரது பிரதான சகாக்கள் சிலரும் வெளியேறிவிட்டதாக தமிழகத்திலிருந்து வெளியாகும் நக்கீரன் ஏடு தகவல் வெளியிட்டிருந்தது. தினமணி பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வெளியான தம்மைப் பற்றிய செய்திகளைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பதான படம் ஒன்றையும் முதல் பக்கத்தில் நக்கீரன் தாங்கி வந்தது.
இந்தச் செய்தி வெளியான நக்கீரன் ஏடு தமிழகமெங்கும் இலட்சக்கணக்கில் விற்பனையானதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பல பத்திரிகை விற்பனை நிலையங்களில் உடனடியாகவே நக்கீரன் ஏடுகள் விற்றுத் தீர்ந்து மீண்டும் மீண்டும் பிரதிகள் தருவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.
நக்கீரன் ஏட்டில் வெளியான இந்தப் படமும், பிரபாகரன் முற்றுகையை ஊடறுத்து வெளியேறியமை பற்றிய செய்தியும் தமிழ் இணையத்தளங்கள் பலவற்றிலும் பரவலாக வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், பிரபாகரன் முன்பொரு தடவை விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் உரையாடிக்கொண்டிருந்த படத்தில், கிராபிக்ஸ் முறையில் தொலைக்காட்சி, பத்திரிகையைச் சேர்த்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வியாபார தந்திரம்
இது ஒரு கேவலமான வியாபார தந்திரம் என்று இதுபற்றி விமர்சித்த கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர், பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்றால் இப்படிப் போலி கிரபிக்ஸ் செய்து காட்டவேண்டிய அவசியமென்ன என்று கேள்வியெழுப்பினார்.
"தமிழக அரசியல்வாதிகள் புலி ஆதரவு பிரசாரத்தை முன்னெடுத்து இம்முறை தேர்தலில் நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டனர். வை.கோ.வையும், பாட்டாளி மக்கள் கட்சியினரையும் தோற்கடித்தன் மூலம், அவர்களது புலி ஆதரவுப் பிரசாரத்தை தமிழக மக்கள் தெளிவாக நிராகரித்துவிட்டனர். இப்போது சில தமிழக ஊடகங்கள் புலிகளை வைத்துப் புதிய வியாபாரத்தை ஆரம்பித்துள்ளன. இது கேவலமான ஒரு முயற்சி'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊடகவியலாளர் கருத்து வெளியிட்டார்.
"ஊடகம் ஒருபோதும் பொய் பேச முயலக்கூடாது. மக்களுக்கு உண்மைகளை அறியத்தருவதே ஊடகங்களின் பணி. ஊகங்களையல்ல. பொய் பேசுவதும், பிரசாரம் செய்வதும் ஊடகங்கள் செய்யக்கூடாதவை. சிரமப்பட்டு ஒரு பிரசாரத்தைச் செய்யும்போதே, இதில் ஏதோ ஒரு பொய் இருக்கின்றது என்ற சந்தேகமே எழும்'' என்று தெரிவித்த அவர்,
"ஒரு விடயம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் அதுபற்றி செய்தி வெளியிடாமலிருப்பதே ஊடக ஒழுக்கம். ஊகங்களையும், கற்பனைகளையும், மயாஜால வித்தைகாட்டி நிரூபிக்க முயல்வது சரியான ஊடகச் செயற்பாடல்ல'' என்று குறிப்பிட்டார்.
பரபரப்புக்காகப் பொய் பேசுவதும், விடயங்களைத் திரித்துக் கூறுவதும் மலிவான ஒரு உத்தி என்று தெரிவித்த அவர், ஊடகங்கள் மக்களை ஏமாற்றிப் பொய்கூறுமானால், ஒருவேளை நாளை உண்மையைப் பேசும்போது மக்கள் அதனை நம்பமாட்டார்கள். இது உண்மையில் பாதகமான விளைவையே ஏற்படுத்தும் என்று விளக்கினார். பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இதனால்தான் மக்களுடைய நம்பிக்கையை இழந்துவருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
"ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. மாயாஜாலம் செய்வது தவறு. இது அனைத்தையுமே மலினப்படுத்துகிறது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் படத்திலிருந்து அன்ரன் பாலசிங்கத்தையும், அவரது கதிரையையும் நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பிரபாகரன் கொலையானதாக செய்தி வெளியாகும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியையும், பிரபாகரனின் கையில் தினமணி ஏட்டையும் செருகி நக்கீரன் படம் தயாரிக்கப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment