Friday, May 22, 2009

நோனாலாட்ட சந்தோசாய்! அக்கலாட்ட துக்கய்! -கிழக்கான் ஆதம்-

நன்று ஆம் கால் நல்லவாக் காண்பவர். அன்று ஆம் கால் அல்லற் படுவது எவன் (திருக்குரல்)

இலங்கை எனும் பசுமையான தீவில் தீயாக எரிந்துகொண்டிருந்த பயங்கரவாதம் தற்போது முற்றாக இலங்கையின் அரசினால் அணைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு இனத்திற்கு எதிரான வெற்றியல்ல இது ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிரான வெற்றிமட்டுமே என இலங்கையின் ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

மட்டுமல்லாமல் சிறுபான்மை என்ற சொல் இலங்கையிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் இங்கு வாழும் அனைவரும் இலங்கை மக்களே அவர்களுக்கு சமமான உரிமைகள் உண்டு என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வார்த்தைகள் பயங்கரவாதத்தை வைத்து தங்கள் பிழைப்புக்களை நடத்திக் கொண்டிருந்தவர்களின் காதுகளில் இடியாகவும் சாதாரண மக்களின் முகங்களில் ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நம்மில் சிலபோர் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப் பட்டபோது அந்த வெற்றியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களை கின்டல் செய்வதற்காக கதைக்கும் வார்த்தைகள் சாதாரண மக்களின் இருதயங்களில் மிகவும் வலியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

நான் நேற்று ஒரிடத்துக்குச் சென்றபோது அங்குவந்த இளைஞர்கள் பிரபாகரன் மரணம் குறித்து சிங்களத்தில் “நோனெலாட்ட சந்தோசாய் அக்கலாட்ட துக்காய்” என்று சிரித்துக் கொண்டு சொன்னார்கள் இதன் அர்த்தம் சிங்களவர்களுக்கு சந்தோசம் தமிழர்களுக்கு துக்கம் என்பதாகும்

தமிழர் சமூகத்தின் பெயரை வைத்து புலிகள் நடத்திய காடைத்தனங்களுக்கு எப்படி சாதாரணத் தமிழ் மக்கள் பொறுப்பாவார்கள் என்று இவர்கள் சிந்திக்க வேண்டும் ஒரு சமூகத்தில் சில நபர்கள் அல்லது ஒரு இயக்கம் செய்கின்ற பிழைகளுக்கு அந்தச் சமூகத்தை குற்றம் சொல்ல முடியாது.

அப்படி குற்றம் சொல்லும் தகுதி இலங்கையில் எந்த சமூகத்திற்கும் இல்லை காரணம் இலங்கை மக்களின் ஜனநாயகத்திற்கு எதிராக சிங்கள இனத்தவர் மத்தியில் மக்கள் விடுதலை முன்னனியின் ஆயுதக் கிளர்ச்சியும் முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் சில ஆயுதம் தாங்கிய குழுக்களும் தோன்றியே மறைந்துள்ளன.

இந்த இயக்கங்களும் குழுக்களும் புலிகளுடன் ஒப்பிடுகையில் வலுவிழந்தவையென்றாலும் அ இலங்கை மக்களின் சுதந்திரமான வாழ்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த அமைப்புகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அத்துடன் இலங்கையில் இதுவரை காலமும் சுமார் முற்பது வருடங்கள் நீடித்த உள்நாட்டு யுத்த்த்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர், முஸ்லீம்கள் என்ற இரண்டு சமூகத்தினரையும் விட தமிழர்களே அதிகமானவர்களாவர்.

நமது தமிழ் சகோதரர்கள் உண்மையில் புலிகள் இராணுவம் என இரண்டு தரப்பு அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுத்திருந்தனர்.

இந்த இடத்தில் இன்னுமொரு உண்மையைச் சொல்லவேண்டும் சில தமிழ் நண்பர்கள் பிரபாகரன் என்ற பாசிசவாதி தோற்கடிக்கப்பட்டபோது “இனி எங்களுக்கு தாய் நாடென்று ஒன்று இல்லை” என்ற கூறிக் கொண்டு திரிவது அவர்களுக்கு அவர்களின் தாய்நாட்டிலிருக்கும் உரிமையையும் அந்தஸ்தையும் அவர்களே வேண்டாம் என்ற மறுப்பானது அங்கு அல்லல் படுகின்ற மக்களின் வாழ்வில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை.

முதலில் இந்த நண்பர்கள் தங்கள் மண்ணை நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் அவர்களுக்கு அவர்களின் நாட்டிலும் மண்ணிலுமிருக்கும் உரிமையை அவர்களே மறுக்கும்போது அது எப்படி பெரும் பான்மை சமூகத்தால் அங்கீகரிக்கப்படமுடியும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருப்பது பயங்கரவாதம் மட்டுமே தமிழ் மக்களல்ல. இனி மிளிரப்போகும் புதிய இலங்கை பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல அது முழு இலங்கையர்களுக்கும் சொந்தமானது. இனித்தான் நாங்கள் புலம்பெயர் தேசங்களிலிருந்து சந்தோசமாக இலங்கைக்குச் சென்று சுதந்திரமாக நடமாடலாம். நமது கருத்துக்களை முன்வைக்கலாம்.

உலகில் உள்ள மற்ற நாடுகளைப்போன்று நாம் பிறந்த அந்த சுவர்க்க பூமியும் இனித்தான் மிளிரப்போகிறது. அதில் சகல இன மக்களும் சமமான அந்தஸ்துடன் நடத்தப்படுவர்.

இனி இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை தமிழ்கள் சிங்களவர்களால் தாக்கப்படுவர் தமிழ் பேசும் இனத்தவர்கள் சிங்களவர்களுக்கு அடிமைபோல வாழவேண்டும் என்றெல்லாம் கதை விடுபவர்கள் யாரெனில் இந்த யுத்தத்தைப் பயன்படுத்தி தங்களை இலட்சாதிபதிகளாகவும் கோடிஸ்வரர்களாகவும் ஆக்கிக் கொண்டவர்கள் மட்டுமேயாகும்.

தற்போது யுத்தம் நிறுத்தப்பட்டு ஆயுதங்களுக்கு இராணுவம் ஒய்வு வழங்குகிறபொழுது தங்களின் வருமானமும் ஓய்ந்துவிடும் என்ற கவலை அவர்களுக்கு எழுந்துள்ளதால் எரிகின்ற நெருப்பில் எப்படி எண்ணையை ஊற்றலாம் என தங்களின் மூளையை தட்டிவிடுகின்றனர்.

இவர்கள் அழிவுக்காக பாவிக்கின்ற தங்களின் மூளைகளை ஆக்கத்திற்காகவும் நமது மக்களின் நல்வாழ்விற்காகவும் பாவித்திருந்தால் நிச்சயம் நமது நாடும் மக்களும் பல்மடங்கு வளர்ச்சியடைந்திருப்பர் என்பது திண்ணம்.

இலங்கையைப் பொறுத்தவரை இலங்கையிலுள்ள தமிழர்கள் முஸ்லீம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையில் வரலாற்று ரீதியான வலுவான உறவுகள் காலாகலமாக இருந்தே வந்துள்ளன.

யாழ்பாணத்திலும் வன்னியிலும் பாதுகாப்பில்லை என்று கருதியோர் தென்னிலங்கையில் கொட்டாஞ்சேனையிலும் வெள்ளைவத்தையிலும் பம்பலப்பிட்டியிலும் மற்றும் பல இடங்களிலும் பாதுகாப்பாக வாழ முடிந்துள்ளது.

அது மட்டுமல்லாது இலங்கையின் தெற்கு மேற்குப்பகுதிகளின் விலையுயர்ந்த பிரதேசங்கள் முழுவதும் தமிழ் பேசுபவர்களால் சூழப்பட்ட நிலையில் அவர்கள் வடக்கு கிழக்கை விட பாதுகாப்பாக வாழ்விடங்களாக சிங்களப் பிரதேசங்களையே கருதுகின்றனர்.

இங்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இலங்கைக்கு விசேட நிகழ்வுகளுக்காக செல்லும்போது அவை திருமணங்களாயினும் வேறு நிகழ்வுகளாயினும் அவற்றை தெற்கிலேயே நடத்துகின்றனர்.

இதற்கு காரணம் அவர்களுக்கு அங்கு காணப்பட்ட சுதந்திரமும் பாதுகாப்புமாகும் இந்த பிரதேசங்களில் அவர்கள் வாழும்போது மற்றைய இனங்களுடன் சுமூகமான ஒரு உறவைப் பேணியே வாழ்கின்றனர்.

இலங்கையில் பிறந்த அனைவருக்கும் இலங்கை தாய்நாடாகும் அதில் ஒரு இனத்திற்கு உள்ள அதே உரிமை மற்றைய இனத்திரனருக்குமுண்டு.

ஆனால் கடந்தகாலங்களில் இலங்கையின் ஆயுதபடைகள் தமிழர்களை ஒரு சந்தேகத்துடன் நோக்கவேண்டிய துர்ப்பாக்கிய சூழலிருந்தது. காரணம் இராணுவம் அன்புடனும் நேசத்துடனும் அரவணைக்கும்போது அதனை சந்தர்பமாக பாவித்து தற்கொலைத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

எனவே அவர்கள் தமிழர்களை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே வைக்கவேண்டியேற்பட்டது. அதேநேரம் புலிகளும் தமிழ் மக்களை வரி வட்டி கிஸ்தி என அடிமைகளாகவே நடத்தினர்.

இலங்கையிலும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்களிலும் தொடர்ந்து துன்பங்களை மட்டும் அனுபவித்தவர்கள் அந்த மக்கள் அவர்களை புண்படுத்துகின்ற வகையில் யாரும் எந்த வார்த்தைபிரயோகங்களையும் பாவிப்பார்களாயின் அவர்களும் புலிகள் போன்ற கொடூமைக்காரர்களே.

இவர்கள் ஒரு பல்லினச் சமூகக் கலாச்சாரமுள்ள நாட்டில் வாழ தகுதியற்றவர்கள். உங்கள் வக்கிரகங்களை எங்கள் மக்கள் மீது வீசாதீர்கள் அந்த வார்தைகள் துப்பாக்கி ரவைகளை விட மோசமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தன்னைக் காட்டிக் கொடுத்தவரை மன்னிப்பதாக கூறிய யேசுநாதர், தனது சிறிய தந்தையின் நெஞ்சைப் பிளந்தவர் சிறை பிடிக்கப்பட்டபோது அவரை மன்னித்துவிட்டதாக கூறிய முகம்மது நபி (ஸல்) அவர்கள். அன்பை மட்டுமே கோட்பாடாக் கொண்ட புத்தர் அகிலமும் அன்பு மயம் என்று கூறுகின்ற இந்து தர்மங்கள் என நாம் எந்த மதத்தை நோக்கினாலும் அங்கு அன்பே அடிப்படையாகப் போதிக்கப்படுகின்றது.

மற்றவரை அரவணைத்து அவர்களின் துன்பத்திலிருந்து மீள உதவுவதையே அனைத்து வேத தர்மங்களும் போதிக்கின்றன.

நான் திருகோணமலையிருந்து மூதூர் வள்ளத்தில் பயணம் செய்தபோது ஆசை காரணமாக அதன் ஒரத்தில் நின்று செல்ல கடல் அலையில் சிக்கிய அந்த வள்ளம் ஒரு பக்கம் இலேசாக சாய கடலுக்குள் விழப்போன என்னை இழுத்துப்பிடித்த அந்த “அம்மா”வின் கைகள்.

சுமார் 1996ம் ஆண்டளவில் கல்முனையிலிருந்து இரவு எட்டு மணியளவில் மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிலில் நண்பருடன் வர நீலாவணையிலிருந்து கல்லடிவரையும் பாதுகாப்புக்காக எங்களுக்கு முன்னால் ஒரு மோட்டார் சைக்கிலிலும் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிலிலும் தமிழ் பிரதேசங்களில் பாதுகாப்பு வழங்கிய நாலு நண்பர்கள்.

களுவாஞ்சிக்குடியிலிருந்து குருமன்வெளியூடாக மதியத்தில் சென்றால் உடனே எங்களை அழைத்துச் பெரிய அரிசிச்சோரும் கீரிமீன் கரியும் முஸ்த இலைச் சுண்டலும் தந்து சாப்பிட அன்புக் கட்டளையிடும் அக்கா.

இன்றும் சோறு போடும் ஆங்கிலத்தை கொட்டாஞ்சனையில் அருள் டியூட்டரியில் படித்துத் தந்த யாழ்பாணத்து ஆசிரியர் ஐயா எஸ்.பி. ஐயர்.

பம்பலப்பிட்டியில் ஐ.டி.எம் இன்ஸ்டிடியூட்டில் கணணி படிக்கும்போது சுமார் ஒரு வருடகாலம் என்னுடன் காலை உணவும் மதியமும் உணவுண்டு குட்டுக் குட்டிச் சண்டைகள் போட்டுக் கொண்டிருந்த சாவகச்சேரி ஜெயந்தினி.

இப்படி சொல்லிக் கொண்டு போக ஒவ்வொறு இலங்கை ஆத்மாக்குள்ளும் பல விதமான பசுமையான நினைவுகள் வாழ்கின்றன அவைகள் அந்த நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கல்வெட்டுக்கள்.

எனவே இந்த காலகட்டத்தில் இலங்கையில் வாழும் அனைவரும் மிகவும் நிதானமாக நடந்துகொள்வோம். நமது சகோதர இனத்தினரையும் நமது அண்டைவீட்டுக்காரர்களையும் அடுத்த ஊர் சகோதரர்களையும் அன்பினால் அரவணைப்போம் வெல்வோம்

நாளைய இலங்கையின் உரிமைப் போருக்கு அன்பு ஆயுதமாகட்டும்.

ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள்.- புனித குர்ஆன்-

No comments:

Post a Comment