Tuesday, May 12, 2009

இனவாத நாக்கை மீண்டும் தொங்கப் போடும் ஐக்கிய தேசியக் கட்சி. ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

வன்னியில் யுத்த சூன்யப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதனையும் விமானத் தாக்குதலகள் மேற்கொள்வதனையும் தவிர்த்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ள கருத்தானது, இவ்விரண்டினாலும் மேற்கொள்ளப்படும் தாக்குதலினால் ஏற்படக் கூடிய உடல் வலியை விட பல மடங்கான மன வலியைத் தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவானது, புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளதை காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், கனரக ஆயுதப் பாவனையையும் விமானத் தாக்குதல்களையும் அரசாங்கம் தொடர வேண்டுமென தனது அற்பத்தனமான கொடூர ஆசையையும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரையில் இன ரீதியான சிந்தனை, இனவாதத்துக்கான தூபமிடல் போன்ற விடயங்களெல்லாம் புதியனவல்ல. இவை இந்தக் கட்சியின் பெரும்பாலான பெருன்பான்மை இனத் தலைமைத்துவத்தின் இரத்தத்துடன் ஊறிப் போன ஒரு விடயமே. இதற்குச் சான்றாக 1997 இன் பின்னரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவங்களும் அதன் சிரேஷ்டத்துவங்களும் கொப்பளித்த கருத்துகள், அவர்களின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட தமிழின ஒழிப்பு நடவடிக்கைகளையும் கொள்ள முடியும்.

1977 ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடமேறிய ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிக் கட்சி அரசாங்கமானது தனது வெற்றிக் களிப்பில் மலையகத்தில் தமிழ் மக்கள் மீது அவிழ்த்து விட்ட வெறியாட்டம், 1983 களில் அரங்கேற்றிய நாடளாவிய ரீதியிலான தமிழ் இன சங்காரம். பிரேமதாசவின் மறைவினையடுத்து ஜனாதிபதியாகச் சிறிது காலம் செயற்பட்ட டிங்கிரி பண்டா விஜேதுங்க "சிறுபான்மை மக்கள் பாரிய மரத்தில் வளரும் கொடிகள்" என தெற்கில் சென்று கக்கிய இனவாத வாந்தி அதனையடுத்து காலியில் இடம்பெற்ற கலவரம்.. என அடுக்கிக் கொண்டு போகலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டபோது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் தமக்கு நீதி வழங்க வந்த தேவதையாக அவரையும் அவரது கட்சியையும் நினைத்தனர் என்ற உண்மையையும் இங்கு கூறவேண்டியுள்ளது.

ஆனால் அந்த நம்பிக்கை எதிர்பார்ப்புகள் இன்று தோற்றுப்போய் விட்டன. அண்மைக் காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் போக்குகளில் இனவாத நாற்றமடிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு கட்டமே பாலித ரங்க பண்டாரவின் கூற்றையும் கொள்ளமுடியும்.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது விசேடமாக மத்திய மாகாண, மேல்மாகாண சபைகளுக்கான தேர்தல்களைக் கொள்ள முடியும். இந்த இரு மாகாணங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கணிசமான அளவு சிறுபான்மை இன மக்கள் வாக்களித்திருந்தனர். விசேடமாக மேல்மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளை ஐக்கிய தேசியக் கட்சி தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் 15 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந்தக் கட்சியின் மூலம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 7 பேர் தெரிவு செய்யப்பட்டதுடன் கட்சிக்கான மொத்த வாக்குகளைப் பொறுத்த வரையில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே அதிகம் என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேல்மாகாணத்தின் மூன்று மாட்டங்களிலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூட சிறுபான்மை மக்கள் தொடர்பாகவோ அல்லது வடக்கில் இலங்கை அரசின் யுத்த முன்னெடுப்புத் தொடர்பாகவோ திறந்த மனதுடன் எந்தக் கருத்துகளையும் இந்தக் கட்சி தெரிவிக்காத நிலையிலும் தமிழ் பேசும் மக்கள் இந்தக் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்தனர்.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்களுக்குள்ளாகவே பாராளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார இவ்வாறான கருத்துகளை வெளியிட்டுள்ளமை தமிழ் மக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் ஒரு தடைவ அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு கருத்தினை அவர் மேடைகளிலோ அல்லது வேறெங்குமோ இருந்து தெரிவிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களை அழைத்தே பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

இவரது அறிக்கையின் பின்னர் ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான நிலையை மூடி மறைப்பதற்காகவும் பிரச்சினையைத் திசை திருப்புவதற்காகவும் ரங்க பண்டாரவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையும் இப்போது பூசி மெழுகும் வேலையாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். ரங்க பண்டார விடுத்த மறுப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களையும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

வன்னிப் பாதுகாப்பு வலயத்தின் மீது கனகர ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துமாறு தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என்று தெரிவித்துள்ள அவர், மேலும் சில விடயங்களையும் தெரிவித்துள்ளார்.

யுத்த நடவடிக்கைகளின் போது ஆயுதப் பிரயோகம் தொடர்பில் தீர்மானிக்க வேண்டியது இராணுவத்தினரே அன்றி அலரி மாளிகை அல்லவென்றும் இதனால் எதனை அடிப்படையாக வைத்து கனரக ஆயுதத்தை பிரயோகிக்க வேண்டாம் என அலரி மாளிகையிலிருந்து அறிக்கை விடுக்கப்பட்டது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே முப்படைகளின் தளபதியாகவும் இருப்பாரென்பதனை முன்னாள் பொலிஸ்காரரான பாலித ரங்க பண்டார தெரிந்து கொள்ளாதது ஏன்?

அப்படியாயின் ஜே.ஆர். ஜெயவர்தன காலத்தில் வடக்கில் முன்னெடுக்கபட்ட பல இராணுவ நடவடிக்கைகளை இராணுவமே திட்டமிட்டுச் செயற்படுத்தியதா? ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன இராணுவ ஆளுமைக்குட்படுத்தப்பட்டிருந்தாரா? ஜே.ஆர் கால புலி வேட்டையின் போது பிரயோகிக்கப்பட்டு அப்பாவித் தமிழ் மக்களை காவு கொண்ட ஆயுதங்கள் தொடர்பான முடிவை அன்றைய இராணுவத் தளபதிகள்தான் எடுத்தார்களா என்ற கேள்விக்கு ரங்க பண்டார கூறும் பதில் என்ன?

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதனையும் விமானத் தாக்குதல் மேற்கொள்வதனையும் தவிர்த்திருப்பதாக அரசாங்கம் விடுத்த அறிக்கையானது சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவா விடுக்கப்பட்டது? என்பதும் ரங்கா பண்டாரவின் கேள்வி.

எந்தச் சர்வதேச அழுத்தத்துக்கும் அடிபணிந்தோ அல்லது தமிழக முதல்வர் கருணாநிதியின் அண்ணா சாலை உண்ணா விரதத்துக்காகவோ இந்த முடிவு எடுக்கப்படவில்லையென்பதனை அரசாங்கமே தெளிவுபடக் கூறியுள்ள நிலையில் இவ்வாறானதொரு கேள்விக்கே இடமில்லை.

கனரக ஆயுதப் பிரயோகத்தினால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியிருக்கிறது. உண்மையான நோக்கம் அதுவாயின் கனரக ஆயுதப் பிரயோகத்தை நிறுத்த வேண்டியிருந்தது இன்றல்ல அன்றாகுமென்பதும் ரங்கா பண்டார எம். பியின் இன்னுமொரு வாதாட்டம். இதனை மேலோட்டமாக ஏற்றுக் கொண்டாலும்.. இந்த விடயத்தில் தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழமென்ன எனப் பொருள்படச் சொல்வதோ செயற்படுவதோ மனிதாபிமானமாக அமையாது. இன்றாவது இருக்கும் உயிர்களைப் பாதுகாப்பதில் உடன்படாத அவரது தன்மையையே இது காட்டுவதுடன் எஞ்சியதனையும் அழிக்க வேண்டும் என்பதும் ரங்க பண்டாரவின் விருப்பம் போல் தெரிகிறது.

இவ்வாறு தான் பகிரங்கமாக தெரிவித்த கருத்தொன்றை மறுத்துரைப்பதற்காக ரங்கா பண்டார விடுத்துள்ள அறிக்கையானது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதாகவே உள்ளது. எச்சம் போடும் வெளவாலுக்கு எல்லாம் வாய்தான் என்பதனை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சி, அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் பேசும் மக்கள்பால் அக்கறை காட்டுபவருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன, பாலித ரங்க பண்டாரவின் இந்தக் கூற்றுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுதியுள்ள கடிதத்தில் இனவாதக் கருத்துகள் தொடர்வதால் ஐ.தே.வுடனான தேர்தல் உடன்பாடுகளைத் தொடர முடியாத நிலை தமது கட்சிக்கு ஏற்படுமென எச்சரித்துள்ளார்.

கனரக ஆயுதங்களை பயன்படுத்தி யுத்தத்தை தொடரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்திருப்பதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனத் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு வலயத்துக்குள் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் சிக்கியிருப்பது கூட ஐ.தே.க வுக்குத் தெரியாதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ செய்தியாளர்கள் மாநாடுகளில் இத்தகைய இனவாத கருத்துகளை தெரிவிக்கும் இனவாதிகளை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இத்தகைய கனரக ஆயுத இடைநிறுத்தம் காரணமாக ஒரளவாவது பாதுகாப்பு வலயத்தில் வாழும் மக்களுக்கு நிம்மதியை தருகிறது. என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மனோ கணோசன் மட்டுமல்ல தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேரும் ஏனைய சிறுபான்மை இனக் கட்சிகளும் இதே நிலைப்பாட்டையே எதிர்காலத்தில் எடுக்கவும் கூடும்.

இதே வேளை, கடந்த வெள்ளிக்கிழமையன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் டி.எம். சுவாமிநாதன் வன்னி பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரமாகியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டினார்.

இதனை மறுத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கனரக ஆயுதங்களை பயன்படுத்தி பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு பாலித்த ரங்க பண்டார கோரவில்லையென சுட்டிக்காட்டியதுடன் யுத்தம் தொடர்பான கருத்துகளை ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனது ஆலோசனையின்றி வெளியிடக் கூடாதென தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்த வரையில் இன்று அவர் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலேயே உள்ளார். கட்சிக்குள் அவருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அவரின் தலைமைத்துவமே தொங்கு கத்தி முன் உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தாலும் அது குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத ஒரு நிலையில் அவர் உள்ளார். தனது தலைமைத்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்படும் அவர் யாரையும் தட்டிக் கேட்க முடியாத நிலையிலேயே உள்ளார் என்பது மட்டும் அப்பட்டமான உண்மை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துவ பலவீனத்தைப் பயன்படுத்தி கட்சிக்குள்ளிலிருக்கும் இனவாதிகளும் கடுங்கோட்பாளர்களும் தொடர்ந்து இவ்வாறு இனவாதச் சிந்தனையுடன் செயற்படுவானார்களால் அது இந்தக் கட்சியின் விரைவான அழிவுக்கான வித்திடலாக அமையுமென்றால் மிகையாகாது. VIII



No comments:

Post a Comment