Saturday, May 23, 2009

புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் தினகரனுக்கு அளித்த பேட்டி

யுத்தத்தால் பலன் இல்லை என்பதை பிரபாகரன் உணரத் தவறியதே இந்த அழிவுக்குக் காரணம்
புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் செய்தியாளர் பி. வீரசிங்கத்துக்கு அளித்த பேட்டி


கேள்வி : உலகின் மிகக் கொடிய ஆயுத இயக்கமாக அறியப்படும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டு விட்டது. எப்போதும் ஆயுதத்தில் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தது. ஆயுத ரீதியாக அழிக்கப்பட்ட இவ்வேளையில் அவர்கள் அழிந்துவிட்டார்கள் என ஓரளவுக்கு கருதலாம்.

எந்தவொரு இயக்கத்தையும் முற்றுமுழுதாக ஆயுத ரீதியாக அழித்துவிட முடியாது. இது யதார்த்தம். இருப்பினும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில் எமது கருத்தானது அதிலிருக்கின்ற அங்கத்தவர் அனைவரையுமோ அல்லது எவரையும் கொன்றொழிக்க வேண்டும் என்ற எண்ணம் என்றும் இருந்ததில்லை. அந்த எல். ரி. ரி. ஈ.யிஸம், பாசிசம் அழிக்கப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்திலிருந்தே பிரபாகரனை எனக்குத் தெரியும். அனைத்து இயக்கங்களும் விடுதலைப் போராட்டத்திற்கு வந்த போது முற்று முழுதாக தங்களை அர்ப்பணிப்பதற்கு தயாராக மக்களின் விடுதலையை முதன்மைப்படுத்தியே உருவாக்கப்பட்டது. காலப் போக்கில் விடுதலைப் புலிகள் மக்களுக்காகப் போராடுவதைக் காட்டிலும் தமது பலத்தை வளர்த்துக்கொள்ளவும், இயக்கத்தை ஏகப் பிரதிநிதிகளாக ஆக்குவதற்காகவுமே அவர்களது போராட்டம் இருந்திருக்கிறது. இறுதி நேர யுத்தத்தை பார்த்தீர்களானால் தங்களை காப்பதற்காக மக்களைப் பணயமாக வைத்திருந்ததை கண்டோம். ஆகவே புலிகள் காலாவட்டத்தில் அவர்களுடைய இலக்குகள் மாறி, புலிகள் உலகத்திலேயே மிகப் பெரிய இயக்கமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தையே கொண்டிருந்தனர்.

கேள்வி : ஆயுதப் போராட்டம் சாத்தியப்படாது என்ற முடிவுக்கு நீங்கள் வரக் காரணமாக அமைந்தது எதுவென கூறுவீர்களா?
பதில் : அனைத்து இயக்கங்களும் தமிழீத்தை அடிப்படையாகக் கொண்டே ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தன. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஒரு விடயத்தை உணர்ந்து கொண்டோம். இந்தியா ஒப்புக்கொள்ளாத வரையில் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையில் ஒரு தனிநாடு மலர முடியாது என்பதை மிக தெட்டத்தெளிவாக உணர்ந்தோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைக்காண வேண்டும். ஒப்பந்தத்தின் மூலமாக வரும் மாகாண சபையை ஒரு அடிப்படையாக ஏற்றுக்கொள்ளலாம் என புலிகளைத் தவிர அனைத்து இயக்கங்களும் கருதின. தமிழீம் அடைய முடியாத இலக்கு என நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அந்த இலக்கை நோக்கிச் செல்வதாகக் கூறிக்கொண்டு இறுதியில் எதைச் சாதித்திருக்கிறார்கள்? எமது மக்களின் அழிவைப் பார்த்தால் வன்னி மக்கள் தங்களது உயிரைத் தவிர அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். இரு கைகளையும், இரு கால்களையும் இழந்த பலரைப் பார்த்தோம். இன்று பலர் அவர்களுக்காக அனுதாபப்படலாம். இந்த அனுதாபம் இன்னும் ஒரு வருடம் சென்றால் மறந்து போய்விடும்.

இன்று அரசியல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு இம் மக்களை வாழவைக்க வேண்டும். மக்கள் நிம்மதியாக தங்களது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதே எமது எண்ணமாகும்.

புலிகளைப் பொறுத்தவரையில் இராணுவ ரீதியாகப் போராடும் சக்தியை இழந்திருக்கிறார்கள். இனி கெரில்லாப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என சிலர் கூறுகிறார்கள். ஒரு விடயத்தை அவர்கள் மறந்துவிட்டனர். கடந்த 30 வருட காலமாக கட்டி வளர்த்து ஆகாயப்படை, தரைப்படை, கடற்படை அனைத்தையும் உருவாக்கி எதையும் சாதிக்க முடியாமல் மக்களையும் அழித்து தாங்களும் அழிந்து, மீண்டும் ஈழத்தை பிடித்து தரப்போகிறார்கள் என்பதை மக்கள் நம்புகிறார்கள் என்றால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

வெறுமனே பெருமை பேசி தற்பெருமைக்காக கெரில்லா யுத்தம் நடத்த வேண்டுமென கருதினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. விரும்பவும் மாட்டார்கள்.

அரசாங்கமும் முற்று முழுதாக முயற்சியெடுத்து சரியானதொரு தீர்வை முன்வைக்க வேண்டும். அவ்வாறு முன்வைக்கும் போது மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்பதுதான் எனது நம்பிக்கையாகும்.

கேள்வி : ஒரு மனிதராக, போராட்ட வீரராக, பயங்கரவாதியாக பேசப்படும் பிரபாகரனை நீங்கள் எப்படிப் பார்க்கிaர்கள்?
பதில் : பிரபாகரனை ஆரம்ப காலத்திலிருந்தே எனக்குத் தெரியும். தமிழ் புதிய புலிகள் எனும் பெயரில் செட்டி தனபாலசிங்கம் என்பவரின் தலைமையில் இயங்கிய அந்த இயக்க உறுப்பினராக இருந்தவர் பிரபாகரன். 1976 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் என பெயர் மாற்றப்பட்டது. அதன் முதலாவது தலைவராக மறைந்த உமா மகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். நான் அப்போது இலண்டனில் படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் இருந்த நண்பர்களான கிருஷ்ணன், குகன் மூவருமாகச் சேர்ந்து விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளையை ஆரம்பித்தோம். அப்போது அங்கிருந்த பாலசிங்கமும் எம்முடன் இணைந்துகொண்டார்.

1980 இல் உமா மகேஸ்வரனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டது. உமா மகேஸ்வரன் பிரிந்து புளொட் அமைப்பை உருவாக்கினார். பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருடன் இணைந்து ரெலோ இயக்கத்தை ஆரம்பித்தனர். 1982இல் பாண்டி பஜாரில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் ராகவனுடன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார்.

சிறுவயதில் பிரபாகரனைப் பார்த்தபோது ஒரு விடயத்தை புரிந்து கொண்டேன். தமிழ் ஈழக் கோரிக்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். தன்னை மிஞ்சி எவரும் இருக்கக் கூடாது என்ற நோக்கமும் அவரிடமிருந்தது. உமா மகேஸ்வரனிடமிருந்து பிரிய நேரிட்டதற்கும் இதுவே காரணமாகும். உமா தலைவராக இருக்கும் போது தான் சாதாரணமாக இராணுவப் பிரிவுக்கு மட்டும் பொறுப்பாக இருப்பதை விரும்பவில்லை. சக நண்பர்களையும் ஏனைய இயக்கத் தலைவர்களைக் கொன்றதற்கும் இதுவே காரணமாகும்.

உலகம் முழுவதிலும் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்படுவதற்கும் 83 இற்கு பின் உலகம் முழுவதிலுமிருந்த ஆதரவை ஒரு பயங்கரவாத, போராட்டமாக அறியப்படுவதற்கும் பிரபாகரன்தான் காரணம்.

ஒரு மாறுபட்ட மனிதராக, மாறுபட்ட சிந்தனை உடையவராக நான் அவரைப் பார்த்திருக்கிறேன். தமிழ் மக்களில் ஒரு நம்பிக்கை இருந்தது. புலிகள்தான் அதனை முன்னெடுப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது.

ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற தன்மையையும், ஜனநாயக ரீதியாக இப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்ற சிந்தனையும் அவரிடமிருந்தது, இது மக்கள் போராட்டமல்ல, முற்று முழுதாக இராணுவமயப் போராட்டம் என அவர் நம்பினார். மக்கள் பார்வையாளராக இருக்கலாம். அல்லது நாம் சொல்வதைக் கேட்கும் ஒரு மந்தைக் கூட்டமாக இருக்கலாம் என்ற எண்ணம் அன்றிலிருந்து இருந்து வந்தது. இப்படித்தான் நான் பிரபாகரனை பார்க்கிறேன்.

புலிகள் பயங்கரவாத இயக்கமாக மாறியமைக்கு அடிப்படைக் காரணம் தான் ஏகப் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை. தனது நோக்கங்களுக்கு எதிராக வருவார் எனக் கருதினால் அவரை மண்டையில் போடுவதுதான் அவரது கொள்கையாகும். விவாதித்து பேசித் தீர்க்கக்கூடிய விடயங்களை இலகுவாக கொன்று விடுவதன் மூலம் தீர்த்து விடலாம் என கருதியமையும் ஒரு காரணமாகும். வெளிநாட்டவர்கள் தமிழர்களை வெறுக்கும் அளவிற்கு நடந்து கொண்டார்கள். இவ்வாறு நடந்துகொண்டதன் மூலம் தமிழீழம் வந்துவிடுமென நம்பினர். இவை போராட்டத்தை பின்னுக்கு தள்ளின.

இந்தியாவில் நடந்த தேர்தலை எடுத்துக் கொண்டால், தமிழ் நாட்டில் புலிகள் சொன்னால் எல்லாம் அப்படியே நடந்துவிடும் என கனவு கண்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கெதிராக தீவிரமாக பிரசாரம் செய்தும் கூட ஒரு ஆரோக்கியமான வெற்றியை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டில் கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார். இதையெல்லாம் புலிகளால் புரிந்துகொள்ள முடி யாததொரு மாயையை அவர்களாகவே தோற்று வித்திருந்தார்கள். எதையும் இராணுவ ரீதியாக தீர்த்து விடலாம் எனக் கருதியதால் அது பயங்கரவாதிகளாக உலகிற்கு எடுத்துக்காட்ட உதவியது.

தமிழர்களின் நியாயமான போராட்டத்தை உலகம் ஏற்க முடியாமல் போனமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ராஜீவ்காந்தி, அமிர்தலிங்கம், பிரேமதாஸ ஆகிய மூவரும் புலிகளின் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்களிப்புச் செய்தவர்கள்.

விடுதலைப் போராட்ட ஆரம்ப காலத்தில் அமிர்தலிங்கம் புலிகளுக்கு பெரிதும் உதவினார். வடமராட்சி லிபரேஷன் ஒபரேஷன் படை நடவடிக்கையின் போது விமான மூலம் உணவுப் பொட்டலங்கள் போட்டு யுத்தத்தை நிறுத்தி புலிகளை காப்பாற்றியவர் ராஜீவ் காந்தி. இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது பிரேமதாசா புலிகளை ஊக்குவித்தார். சரியான சந்தர்ப்பங்களில் காப்பாற்றிய அனைவரையும் புலிகள் கொன்றுவிட்டனர்.

உலகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடையாளச் சின்னமாக புலிகள் பார்க்கப்பட்டார்கள். அந்த அடையாளம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட உதாசீனப்படுத்தப்பட்டன. புலிகள் தாங்கள் பலமாக இருக்கும் போது கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2000ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம், பிரேமதாஸவின் காலத்தில் தமிழீழத்தைத் தவிர எதையும் தருவேன் என்று அவர் எடுத்துக்கொண்ட நிலைப்பாடு, ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஒஸ்லோ உடன்படிக்கை என்றாலென்ன தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த போது அதனை முற்றுமுழுதாக இல்லாமல் செய்ததுடன் தமது பலத்தை மிகை மதிப்பீடு செய்து தம்மையும் அழித்துக்கொண்டு தமிழ் மக்கள் அழியவும் காரணமாய் இருந்து விட்டனர்.

கேள்வி : புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட படை நடவடிக்கைகள், வியூகங்கள், பக்கபலமாக இருந்து செயற்பட்டவர்களை முன்னாள் போராளி என்ற வகையில் எப்படிப் பார்க்கிaர்கள்?
பதில் : தமிழில், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள். அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஜனாதிபதிக்கு வெற்றிக்கான கெளரவத்தைக் கொடுக்கும் அதேவேளை யுத்தத்தில் வென்ற பெருமையை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவையே சாரும். கடந்த காலங்களில் வெற்றியை அரசியலுக்காகப் பயன்படுத்தினார்கள். ஆனால் ஜனாதிபதி யுத்தத்தை இராணுவ வெற்றிக்காக பயன்படுத்தினார்.

இதே இராணுவம்தான் முன்னரும் போரில் ஈடுபட்டது. தோல்விகளையே சந்தித்தது. அதே இராணுவத்தை மீண்டும் போரிட வைத்து வெல்வதென்றால் அதற்கு சரியான தலைமை கோதாபய ராஜபக்ஷவினால் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெற்றிக்கு அதுவே பிரதான காரணமாகும். வேறு எவராவது தலைமை வகித்திருந்தால் சர்வதேச அழுத்தங்களுக்கு நிச்சயம் முகங்கொடுத்திருக்க மாட்டார்கள். இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு துணிச்சல் இருந்தது.

கேள்வி : விடுதலை இயக்கத்துக்கும் பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையிலான கோடு எங்கே போடப்படுகிறது?

பதில் : இதனை நாம் எந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறோம் என்பதே முக்கிய விடயமாகும். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறினாலும் பெரும்பாலான தமிழ் மக்கள் விடுதலைப் போராளிகள் என்றே பார்க்கின்றனர். ஒரு நியாயமான இலக்கை அடைய பயங்கரவாத முறைகளை புலிகள் பாவித்திருக்கின்றனர். ஆனால் நியாயமான இலக்குகள் எனக் கூறிய போதிலும் தங்களது இயக்கத்தை வளர்க்கவும், நிலைநிறுத்திக் கொள்ளவுமே பயங்கரவாத முறைகளைப் பிரயோகித்திருக்கிறார்கள். கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் புலிகள் நழுவ விட்டனர். இவர்களுக்கு தமிழ் மக்களின் நல்வாழ்வில் அக்கறையிருக்கவில்லை. போராட்டத்தில் பயங்கரவாதப் போராட்டம் என்ற நிலையை தாங்களாகவே உருவாக்கிக் கொண்டார்கள்.

விடுதலைப் போராட்டம் என்றால் தான் பிடித்ததுதான் பிடி. இதுதான் இலக்கு என்பதன் அர்த்தம் கிடைக்கக் கூடியவற்றை தட்டிக்கழிப்பதல்ல. தமிழ் மக்கள் நியாயமான கெளரவத்துடன் இந்நாட்டில் வாழ வழிவகுக்கும் என்றால் அதனை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து தாம் செய்வதுதான் சரி என்ற போக்கே பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கு தூண்டியது.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது நாங்களும் அதை போதுமானதாக கருதவில்லை. ஒரு ஆரம்பமாக எடுத்துக்கொண்டோம். பிரபாகரன் அடையாளத்துக்காக ஆயுதத்தை கையளித்து அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். இலங்கை இந்திய ஒப்பந்த காலத்திற்கு முன்னர் நடந்த யுத்தத்தில் இழப்புக்கள் மிகவும் குறைவென்றே கூற வேண்டும். ஒப்பந்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் இழப்புக்கள் மதிப்பிட முடியாதளவிற்கு அதிகரித்தன. இவ்வளவு நடந்த பின்னரும் கூட இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் அமுல்நடத்தப்படப் போகிறது, 1987 முதல் இதுவரை காலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் எந்தப் பிரயோசனமும் இல்லை. இதை சரியாக உணர்ந்துகொள்ள பிரபாகரனும் புலிகளும் தவறியமைதான் இத்தனை அழிவுகளுக்கும் காரணமாகும்.

பிரபாகரன் அழிவைக்கொண்டு சாதித்ததுதான் என்ன? சரியான முறையில் விடுதலைப் புலிகள் கணக்கிடத் தவறிவிட்டனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை நாம் சந்தித்தோம். அவர் எம்மிடம் ஒரு உறுதிமொழியை வழங்கினார். வடகிழக்கை மிகச் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்கு, வளம் மிக்க பகுதியாக மாற்றுவதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்குவேன் என்றார். தமிழ் மக்களின்பால் அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர் கூறியது போல நிச்சயமாக மிகப்பெரிய அளவில் உதவியிருப்பார். மக்கள் வசதியாக வாழக்கூடிய அளவிற்கு மாற்றியிருக்கலாம் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, இன்று வடக்கு கிழக்கு மக்களில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களைத் தவிர சாதாரண அப்பாவி மக்கள் ஏறக்குறைய பிச்சை எடுக்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர். வன்னி மக்கள் மற்றவர்களுக்கு கொடுத்து உதவியவர்கள். இன்று மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையை புலிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கேள்வி : அரசியல் தீர்வு தொடர்பாக உங்களது அபிப்பிராயம் என்ன?
பதில் : தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியடைந்த நிலையில் இருக்கின்றனர். இவர்கள் ஒரு சரியான அரசியல் தீர்வை முன்வைப்பார்களா? என்ற கேள்வி பலர் மத்தியில் இருக்கிறது. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஒரு அரசியல் தீர்வுக்கு போவதற்கு தயாராக இருப்பதாக கூறினார். பல நாட்டுத் தூதுவர்களைச் சந்திக்கும் போது குறிப்பாக, இந்தியாவிடம் ஆகக் குறைந்தது 13ஆவது திருத்தம் பிளஸ் இதனை நிச்சயம் அமுல் நடத்துவதற்கான முழு நடவடிக்கைகளையும் எடுப்பதாக கூறியுள்ளார். அதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

பாராளுமன்றத்தில் எந்தக் கட்சியாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க முடியாதுள்ளது. முழுமையான அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமெனில் இரண்டு தேசியக் கட்சிகளும் வேறு எந்தப் பிரச்சினைகளில் சண்டை பிடித்துக்கொண்டாலும் எமது பிரச்சினையில் ஒன்றுபடும் என்றால் ஒரு தீர்வைக்காண முடியும்.

கேள்வி : வடக்கில் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ஒரு வெற்றிடம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி என்ன கூறுகிaர்கள்?

பதில் : இக்கூற்றை வைப்பவர்கள் அனேகமாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு விடயத்தை மறுக்க முடியாது. அமிர்தலிங்கம், செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம், சுந்தரலிங்கம் போன்றோருடன் எம்மை ஒப்பிடவில்லை. இருப்பினும் ஜனநாயக நீரோட்டத்தில் தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். முற்று முழுதாக இராணுவ ரீதியான பலத்தைக் கொண்டு, ஏறக்குறைய தாங்களே தங்களைத் தலைவர்களாக நியமித்துக்கொண்டவர்கள் புலிகள். மக்கள் ஆதரவு இல்லையென கூறவில்லை. எம்மிலும் பலர் 10, 12 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள்.

அரசியல் அனுபவம் இருக்கிறது. சிறு பராயம் தொடக்கம் இந்த மண்ணிலேயே மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அதற்கேற்ப இயக்கத்தை வளர்த்து வந்திருக்கிறோம்.

தலைமை என்பது லண்டனிலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ நியமிக்கப்படுவதல்ல. இங்கு வாழும் மக்கள் மத்தியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கடந்த 30 வருடங்களாக இந்தச் சூழல் இல்லாமல் இருந்தது. இப்போது சரியான ஜனநாயக பன்முகத் தன்மை வரும்போது நிச்சயமாக இங்கிருந்து ஒருவரோ ஒரு கட்சியினரோ தெரிவு செய்யப்படுவார்.

கேள்வி : அடுத்தக்கட்ட முதலாவது உடனடி நடவடிக்கை என்ன?
பதில் : அரசியலுக்கு அப்பால் இருந்த மக்களின் மறுவாழ்வு, மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தல், தங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்கல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. அம்மக்கள் அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டிய தேவை கிடையாது. அவர்களுக்கு ஒரு உந்து சக்தி கொடுத்தால் தாங்களே தங்கள் கால்களில் நிற்பார்கள். ஊனமுற்றவர்களின் நலனில் அரசுடன் இணைந்து பல தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டும்.

உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் உதவுவதற்கு தயாராக இருக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com