Sunday, May 3, 2009

சுவிற்சலாந்து செல்ல மலேசியாவில் தங்கியிருந்தபோது அடிமை வேலையால் வதைக்கப்பட்ட சிறுவன்.



சுவிற்சலாந்திலுள்ள தனது உறவினர்களிடம் சேர இருந்த 14 வயதுடைய இலங்கைத் தமிழ் சிறுவன் மலேசியாவில் அடிமையாக்கப்பட்டு 8 மாதங்களாக வேலைவாங்கப் பட்டார் என்ற திடுக்கிடும் செய்தி அம்பலத்திற்கு வந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த டில்றுக்சன் என்ற இளைஞனே இவ்வாறு பாதிக்கப்பட்டவராகும். சுவிற்சலாந்தில் வாழும் டில்றுக்சனின் பேத்தியான எஸ். புஸ்பரத்தினம் என்பவர் தனது பேரனை சுவிற்சலாந்து கொண்டுவருவதற்காக பரிஸில்வாழும் மலேசிய நண்பரொருவரின் உதவியை நாடியுள்ளார். மலேசியாவைச் சேர்ந்த அந்த நண்பரின் ஏற்பாட்டில் மலேசியாவிற்கு அனுப்பட்ட சிறுவன் சாந்தி என்பவரின் மேற்பார்வையில் இருந்தபோதே அவர் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்

தனது பேரன் குறித்த நேரத்தில் வராதது கண்ட பேத்தி புஸ்பரத்தினம் கவலையடைந்து பரிசிலிருந்த தனது மலேசிய நண்பரை அணுகினார். அவர் மேலும் 2000 யூரே தந்தால் பையனை சுவிற்சலாந்துக்குக் கொண்டு வந்து தருவதாகக் கூறினார். ஒரு மாதத்திற்குப் பிறகு மேலும் 3000 யூறோவைத் தரும்படியும் அதை உண்டியல் மூலம் சாந்தி என்பவருக்கு அனுப்பும்படியும் கோரியுள்ளார்.

இந்நிலையில் டில்றுக்ஸ்சன் தனது பேத்திக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தனது உயிருக்கு ஆபத்து வரப்போவதாகக் கூறியுள்ளார்.

பேரனின் தொலைபேசித் தகவலில் அச்சமடைந்த புஸ்பரத்தினம் ஏப்ரல் 26 மலேசியாவுக்கு சென்று மலேசிய இந்தியக் காங்கிரஸ்சின் உதவியை நாடினார். மலேசிய இந்தியக் காங்கிரஸ் அங்கத்தவரான ஜி.குணம் என்பவரது உதவியுடன் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மலேசியப் பொலிஸாரும் எம்சிஐ என்று சொல்லப்படும் மலேசியன் இந்தியன் காங்கிரஸ்சும் சேர்ந்து நடாத்திய தேடுதல் வேட்டையில் அடிமையாக்கப்பட்ட 14 வயதுடைய டில்றுக்சன் சென்துல் பஸார் என்ற உல்லாசப் பிரயாணிகள் விடுதியில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் இரு அகதிகடத்து முகவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய இந்தியக் காங்கிரஸ்சின் இளையோர் நலன்புரி இணைப்பாளர் ரி.மோகன் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், இந்த இளைஞனுக்காக சுவிற்சலாந்து விசா எடுப்பதற்கு 15000 யூறோ பணமாகக் கொடுப்பதற்கு ஒழுங்காகி இருந்தது. பணம் கொடுக்கப்பட்ட பின்பே சிறுவன் மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளான். மலேசியா கொண்டுவரப்பட்ட சிறுவன் சாந்தி என்பவரின் மேற்பார்வையில் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளான் என கூறியிருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், டில்றுக்சன் தன்னைப் பொறுப்பெடுத்த பெண்ணான சாந்தி தன்னை அடித்ததாகவும் தன்னை வீட்டுவேலைகளைச் செய்ய எட்டுமாதங்களாக நிர்ப்பந்தித்ததாகவும் கூறினார். தன்னைப் பல வீடுகளுக்கு அழைத்தச் சென்று வேலை வாங்கியதாகவும் தான் தனது பெற்றோருடனும் பேத்தியுடனும் கதைக்கக் கேட்டபொழுது தன்னை மிரட்டியதாகவும் டிலிறுக்சன் கூறினார் என்றார்.

மலேசியாவில் Selangor என்ற இடத்தின் CID உதவித்தலைவர் Datuk Hasnan Hassan அகதி கடத்து முகவரும் அவரது மைத்துனரும் 30 வயதே மதிக்கப் படுபவர்கள் என்றும் அவர்கள் ஆட்கடத்தல் சம்பந்தமாக இப்பொழுது குற்றச் சாட்டப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

(தகவல் மலேசியன் ஸ்ரார் The Star)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com