Saturday, May 9, 2009

தண்ணீருக்கு அடியில் விடுதலைப்புலிகளின் நவீன சுரங்கப்பாதை சிங்கள ராணுவம் கண்டுபிடித்தது

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் இரட்டை வாய்க்கால் எனும் 2 ஊர்களில் விடு தலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் ஆயிரம் கரும்புலிகளும், 20 ஆயிரம் ஈழத்தமிழர்களும் இருப்பதாக தெரிகிறது.

இந்த இரு ஊர்களுக்குள் நுழைய முடியாதபடி பல்வேறு மண் அரண்களை விடுதலைப்புலிகள் உருவாக்கி இருந்தனர். இதனால் கடந்த ஒரு மாதமாக அந்த ஊர்களுக்குள் சிங்கள ராணுவத்தினர் நுழைய முடியாமல் இருந்தது. கடந்த ஒரு வாரமாக சிங்கள ராணுவம் தொடர்ச்சியாக பீரங்கித்தாக்குதல் நடத்தியது.

இதில் மண் அரண்கள் தகர்ந்தன. இதையடுத்து விடுதலைப்புலிகள் அடர்ந்த காடுகளுக்குள் இடம் பெயர்ந்தனர். இதை பயன் படுத்தி கரையான் முள்ளி வாய்க்கால் எனும் பகுதியை ராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.

இதன்மூலம் விடுதலைப்புலிகள் அருகில் ராணுவத்தினர் மிக நெருக்கமாக நெருங்கி விட்டனர். தற்போது அவர்களுக்கிடையே 800 மீட்டர் இடைவெளியே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் கட்டி வந்த நவீன சுரங்கப்பாதை ஒன்றை சிங்கள ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். வெள்ள முள்ளிவாய்க்கால் நீர்பரப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை இருந்தது. அது பாதி கட்டியும் கட்டப்படாமலும் காணப்பட்டது.

ராணுவத்திடம் பிடிபடுவதில் இருந்து முக்கியத் தலைவர்கள் தப்பிக்க இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. சுரங்கப்பாதைக்குள் தண்ணீர் ஊடுருவாமல் இருக்க இரும்பு அரண் ஒன்றை விடுதலைப்புலிகள் அமைத்திருந்தனர்.

நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதைக்குள் சில குட்டி குட்டி அறைகளும் உள்ளன. இந்த சுரங்கப்பாதையை இழந்தது விடுதலைப்புலிகளுக்கு பெரும் பின்னடைவாகக்கருதப்படுகிறது.

வெள்ள முள்ளிவாய்க்காலில் உள்ள சுரங்கப்பாதையை பார்க்கும்போது தற்போது சண்டை நடக்கும் பகுதிக்குள் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர் யாராவது ஒருவர் இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. பிரபாகரன் அங்கு இருப்பாரா? என தெரியவில்லை என்று சிங்கள ராணுவம் கூறி உள்ளது.

இதற்கிடையே நேற்று முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் சிங்கள ராணுவத்தினர் 5 மணி நேரம் இடைவிடாமல் குண்டுகளை வீசினார்கள். இதில் 162 தமிழர்கள் பலியானார்கள்.
மீதமுள்ள தமிழர்களுக்கு உணவு சுத்தமாக இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதனால் அவர்கள் தவிட்டை சாப்பிட்டு வருகிறார்கள்.


No comments:

Post a Comment