Friday, May 8, 2009

சுவிற்சலாந்தில் பயங்கரவாதத்தை அரங்கேற்ற, திட்டம் தீட்டும் புலிகள் - சதுரங்கன்


இலங்கையிலே பயங்கரவாதம் தோல்வி கண்டுவரும் நிலையில் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கத்தைய நாடுகளில் அரங்கேற்ற முயற்சித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சுவிற்சலாந்து சூரிச் மாநிலத்தில் வாழ்ந்து வரும், அரசியலில் புலிகளின் பயங்கரவாத கொள்கைளுக்கு எதிரான கொள்கை கொண்ட ஜனநாயகவாதிகள் சிலர் மீது வன்செயல் புரிவதற்கு அல்லது அவர்களை கொன்றொழிப்பதற்கு புலிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலிகளின் ஏக பிரதிநிதி என்கின்ற மந்திரத்தை எதிர்த்து சுவிற்சலாந்து நாட்டில் பன்நெடுங்காலங்களாக தமிழர் கலாச்சாரத்தையும், மாற்றுக்கருத்துக்களுக்கான தளமொன்றையும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு கடந்த 03.05.2009 அன்று ரிவைஓ எனப் பெயரிடப்பட்டுள்ள அமைப்பின் பெயரால் துரோகிகள் எனும் முத்திரை குத்த புலிகள் முற்பட்டுள்ளனர். சுவிஸ் பொலிஸார் உரியநேரத்தில் அத்துண்டுப்பிரசுர விநியோகத்தை தடுத்து நிறுத்தியிருந்தாலும், அதன் அச்சுறுத்தலும் சதித்திட்டங்களும் முறியடிக்கப்பட்டுள்ளதாக இலகுவில் கருதிவிட முடியாது.

புலிகளின் இத்துண்டுப்பிரசுர விநியோகத்தின் பின்னணியில் ஓர் பாரிய சதி இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவு. புலிகளின் வரலாற்றுப் பாதையில் அவர்கள் மக்களின் பிரதிநிதிகளை அல்லது மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களை தீர்த்துக்கட்டும் செயலைச் செய்வதற்கு முன்னர் அல்லது செய்த பின்னர் இவ்வாறான பொய்பிரச்சாரங்களைச் செய்து துரோகிப் பட்டமளித்து தமது வன்செயலை நியாயப்படுத்துவது வழமை.

மேற்படி செயற்பாட்டின் வழியிலேயே சுவிற்லாந்தில் துண்டுப்பிரசுர விநியோகமும் இடம்பெற்றுள்ளது. இங்கு புலிகள் துண்டுப்பிரசுரத்தினூடாக துரோகிகள் என முத்திரை குத்தியுள்ள நபர்கள், புலிகளின் மனித குலத்திற்கெதிரான நடவடிக்கைளுக்கு எதிராக, மக்கள் ஜனநாயக வழிசெல்ல உறுதுணையாக நிற்கின்றார்கள் என்பதுவே, புலிகளுக்கு இவர்கள் மீது உள்ள தீராத பகைமையாகும்.

தமிழ் மக்களை தமது வன்முறைகளால் அடக்கி ஆண்டு வரும் புலிகள் மேற்படி நபர்கள் மீது அரங்கேற்ற எத்தனிக்கும் ஏதோ ஒர் நாடகத்தை மக்கள் தலையில் போடுவது அல்லது இளையோர் அமைப்பு எனும் பெயரில் புலிகளால் திட்டமிட்டமுறையில் தவறான வழியில் வழிநாடத்தப்படும் இளைஞர்களின் தலையில் போடுவது அல்லது தாம் திட்டமிட்ட விடயத்தை செய்தவுடன் மக்கள் தமக்கெதிராக கிளர்ந்தெளாமல் செய்வதற்காகவே இத்துண்டுப் பிரசுரத்தை பிரசுரித்துள்ளனர்.

புலிகளால் பிரசுரிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்திலே, புலிகளால் துரோகிகள் என சித்தரிக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு துரோகளாக முடியும்? தமிழர் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் மாற்றி புதியதோர் புலிவரலாற்றையும், புலிக்கலாச்சாரத்தையும் ஏற்படுத்த புலிகள் முனைகையில், தமிழர்களது பழைமை மேற்படி சமுகசேவகர்களால் தடம்புரளாமல் பேணப்படுகின்றது. இவ்விடயமானது புலிகளின் திட்டமிட்ட சதிகளுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

புலிகளால் நிர்வகிக்கப்படும் ஆலயங்களில் மூலமூர்த்திக்கு மேலே பயங்கரவாதியான பிரபாகரனது திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டிருக்கின்றது. தேவார திருவாகங்கள் ஒலிக்க வேண்டிய ஆலயங்களில் புலிகளின் புகழ் பொப்பாடல்கள் இசைக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்க்கல்வி என ஒன்று கூட்டப்படும் மாணவர்களிடம் புலிகளால் இனவாதம் ஊட்டப்பட்டு, வன்செயலைத் தூண்டும் சிந்தனை திணிக்கப்படுகின்றது. இன்று புலிகளால் நடாத்தப்படும் தமிழ் மக்களின் கலாச்சார நிகழ்வு என்று ஒன்றிற்குச் சென்றால், அங்கு பிரபாகரனது திருவுருவப்படத்தை கைகூப்பி கும்பிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனது கட்டளையை ஏற்று எம்தேசத்தை சீர்குலைத்து மரணித்துப்போன பயங்கரவாதிகளுக்கு மாவீரர்கள் என அஞ்சலி செலுத்தவேண்டியுள்ளது. இவற்றை ஏற்க மறுக்கின்ற எமது சமுதாயத்தில் உள்ள பலர் உண்மையான கலாச்சார நிகழ்வுகள் பேணப்படுகின்ற திசையை நோக்கிச் செல்கின்றனர். இங்கு புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவ மோகம் தோல்விகாண்கின்றது.

எனவே மேற்படி சமுகசேவகர்களுக்கு எதிராக தூண்டப்பட்டிருக்கின்ற ரிவைஓ எனும் அமைப்பு, தமிழ் மக்களின் முழுமையான அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பவற்றை விளங்கிக்கொள்ள முற்பட வேண்டும். புலம்பெயர் தேசங்களிலே வாழ்கின்ற புலித்தொழிலாளர்கள், தமது சுகபோக வாழ்விற்காக வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினரை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர் என்பதையிட்டு இளம் சமுகத்தினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புலிகளுக்கும், புலிகளை எதிர்த்து நிற்கின்ற ஜனநாயகத்தை நேசிக்கின்றவர்களுக்குமான இடைவெளியை அல்லது முரண்பாட்டை இளம் சமுகத்தினர் உணர முற்படவேண்டும். ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடுகளிலே வாழுகின்ற பெற்றோர்கள், புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவமோகமானது எம் தேசத்திற்கு விட்டுச்சென்றுள்ள கறை படிந்த வரலாறுகளைப் தமது குழந்தைகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவ மோகம் இன்று புலம்பெயர் தேசங்களுக்கும் பரவியுள்ளமையாலேயே இன்று உங்கள் பிள்ளைகளும் தவறான வழியில் வழி நடாத்தப்படுகின்றார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அதற்கெதிராக செயற்படாவிடின் புலம்பெயர் நாடுகளிலும் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்தை பிரதிபலிக்கும் வன்முறைகள் எம் இனத்தை வஞ்சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தமிழ் இளம் சமுகத்தினர், அனைத்து மக்களதும் உரிமைகளை அபிலாஷைகளை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாமல் தொடர்ந்தும் புலிகளது காட்டுமிராண்டித்தனங்களுக்கு துணைபோவார்களேயானால் அது தமிழ் சமூகத்தை மட்டுமல்ல நீங்கள் நிலைகொண்டுள்ள நாட்டின் , தேசத்தின் நற்பெயருக்கும் அது தீங்கை ஏற்படுத்தும்.

புலிகள் இளம் சமுகத்தினரை, தமது சொந்த அரசியல் எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்ல, தாம் தஞ்சம் புகுந்துள்ள நாட்டின் அரசுகளுக்கும் அதன் நிர்வாகத்திற்கும் எதிராக திருப்பி வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அகிம்சைவழிப் போராட்டங்கள் என தெருவிற்கு இறக்கப்படும் இளம் சமுகத்தினர், குறிப்பிட்ட நாடுகளின் சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் நேர் எதிராக இயக்கப்படுகின்றனர். இவ்வாறு புலிகள் திட்டமிட்டமுறையில் தாம் குடிபெயர்ந்துள்ள நாடுகள் பூராகவும் ஒர் வன்முறைக் கும்பலை தமது கைக்கூலிகளாக வளர்த்தெடுக்க முனைப்புக்காட்டுகின்றனர்.

அவ்வாறானதோர் சமுதாயம் எம்மத்தியில் வளர்வதை விரும்பாதவர்களை புலிகள் வன்முறை கொண்டு அடக்க முற்படுகின்றனர். அதன் ஒர் வடிவே மேற்படி சமுக நலன்விரும்பிகள் மீது மேற்கொள்ள திட்டமிடப்படும் சதி முயற்சியாகும். இவர்கள் சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த, கடந்த 26 ஆண்டுகளாக தம்மால் இயன்றவைற்றை எமது சமுகத்திற்கு செய்துவருகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். எவர் சமுகத்தில் உண்மையான பற்றும் பாசமும் கொண்டுள்ளார்களோ அவர்களை புலிகள் திட்டமிட்டு ஒரங்கட்டி தமது வன்முறைக்கலாச்சாரத்தை வலுப்பெற செய்து வருவதே வழக்கமாகி வருகின்றது.

சுவிற்சலாந்தில், ஜனநாயக வழியில், அனைவருக்கும் சம உரிமை என்கின்ற விதத்தில் பாடவிதானங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வியறிவு ஊட்டப்படுகின்றபோதும், புலிகள், கலாச்சாரம் மொழி என்கின்ற பெயரால் மாணவர்களை ஈர்ந்தெடுத்து, அவர்களுக்கு, மேற்குலதத்திற்கு எதிரான கருத்துக்களை புகுத்துவதுடன், இந்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக சுதந்திரத்தில் உள்ள ஓட்டைகளைக்கொண்டு இளைஞர்களை வன்முறைக்கும் குற்றச்செயல்களுக்கும் தூண்டுகின்றனர்.

இம்மாணவர்கள் சுவிஸ் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அளவு கடந்த வன்முறைகளைப் புரிகின்றபோது, அச்செயல்கள் சுவிஸ் நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் இங்கு இம்மாணவர்கள் புரிகின்ற வன்முறைகள் ஏனைய நாடுகளில் உள்ள வளரும் சமுதாயத்தினருக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. இம்மாணவர்கள் இங்கு புரியும் வித்தைகள் வீடியோ படங்களில் எடுக்கப்பட்டு, ஏனைய நாடுகளில் உள்ள மாணவர்கட்கு காட்டப்பட்டு, அம்மாணவர்களிடம்; சுவிஸில் உள்ள மாணவர்கள் இவ்வாறு தமிழ் மக்களுக்காக செய்கின்றார்கள் நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என கூறப்படுகின்றபோது, அங்குள்ள பெற்றோர் சுவிஸ்நாட்டின் செயற்பாடுகளிலும் அதன் ஜனநாயத்தன்மையிலும் சந்தேகம் கொண்டு சுவிஸ் அரசாங்கம் புலிகளுக்கு சார்பாக செயற்படுகின்றதா என அங்கலாய்கின்றனர்.

ஏனவே இவ்விடயத்தில் சுவிஸ் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு, புலிகளின் இளையோர் அமைப்பு என்கின்ற புலிகளின் துணைப்படையின் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக மட்டுப்படுத்துவது சிறந்ததாகும்.

No comments:

Post a Comment