Friday, May 15, 2009

வெள்ளவத்தையில் தற்கொலை 4 அங்கிகள் மீட்பு. புலிச் சந்தேக நபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

வெள்ளவத்தை 37 வது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் இருந்து நான்கு தற்கொலை அங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவ்வீட்டில் இருந்த புலிச் சந்தேக நபர் 7ம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை புரிந்து கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு பிரதேசத்தில் இரு தற்கொலைக் குண்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி வீட்டிற்குச் சென்ற பொலிஸ் மற்றும் தேசியப் புலனாய்வுப் பிரிவினர், அங்கிருந்தவர்களிடம் மறைத்துவைத்துள்ள நான்கு தற்கொலை அங்கிகளையும் எடுக்குமாறு கூறினர். அவர்கள் அவ்வாறான பொருட்கள் எதுவும் இங்கு இல்லை என கூறியபோது பொலிஸார் வீட்டைச் சோதனை செய்தனர். அங்கு நான்கு தற்கொலை அங்கிகள், டெற்னேற்றர்கள், றிமோர் கொன்றோல்கள் என பல பொருட்கள் வெளிவந்தது.

இதில் பல பொருட்கள் வீட்டின் சுவிற்ச்போர்ட், மின்விளக்குக்குமிழ்கள் என எவராலும் சந்தேகிக்க முடியாத இடங்களில் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அங்கிருந்த பிரதான சந்தேக நபர் என கருதப்படும் தாமோதரம்பிள்ளை சசிதரன் என்பவர் மேல்மாடியில் இருந்து குதித்துள்ளார். இவர் குதித்து தப்பித்து ஓடும் நோக்கில் குதித்தாரா அல்லது தற்கொலை செய்யும் நோக்கில் குதித்தாரா என்பது தெளிவில்லை. இவர் கொழும்பில் ஒர் மாணவர் எனும் போர்வையிலேயே இத்தனை காலமும் தமது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இவரது சடலம் தெஹிவல, ஹொகுவல ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment