Sunday, May 31, 2009

ஒரு பாசிஸ்ட்டின் மரணம். -தமிழரசன் பேர்ளின்- பகுதி 1

இலங்கை அரச ஊடகங்கள் 17.5.09 இல் பிரபாகரனின் மரணம் பற்றிய செய்திகளையும் இதற்கு அடுத்த நாள் பிரபாகரன் இறந்த உடலைக் காட்டும் படங்களையும், வீடியோ காட்சிகளையும் வெளியிட்டன. பிரபாகரன் 15.05.09 இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டதாகவும் பின்பு பலசித்திரவதைகள் மூலம் உண்மைகள் பெறப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பல்வேறுபட்ட செய்திகள் புகலிடமெங்கும் உலாவி வந்தன.

மேற்குலக நாடுகளில் புலிகளின் இணையத்தளங்கள், வானொலிகள், தொலைக் காட்சிகள் முதலிரண்டு நாட்களும் பிரபாகரனின் மரணம் பற்றிய செய்திகள் படங்கள் எதையும் வெளியிடவில்லை. சி.என்.என், பீ.பீ.சி, அல்யெசீறா உட்பட சர்வதேச ஊடகங்களில் பிரபாகரனின் சாவு பற்றிய தகவல்கள் வெளிவந்தமையால் இவர்களும் கருத்துச் சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

புலிகளின் பிரதான செய்தி ஊடகமான தமிழ்நெற் குமரன் பத்மநாதனின் செய்தியை வெளியிட்டு பிரபாகரனின் மரணச் செய்தியை மறுத்ததுடன் பிரபாகரன் உயிருடன் ஆரோக்கியமாக இருப்பதாக செய்தியை வெளியிட்டதுடன், புலித்தேவன் நடேசன் போன்றவர்களை அரசு நயவஞ்சகமாகக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டியது. பிரபாகரன் 2000 பேருடன் தப்பி வன்னிக்காட்டில் போராட்டத்திற்குத் தயாராவதாகவும் செய்திகள் படிக்கப்பட்டன. தம் தலைவர் சாகவில்லையென்று புகலிடப் புலி மாந்தர்கள் வாதிட்டனர்.

கிட்லர் இறந்தவுடன் அவன் சாகவில்லை அங்கே இருக்கிறான், இங்கே இருக்கிறான் ஒழித்து வாழ்கிறான் என்ற வதந்திகள் திட்டமிட்டும், திட்டமிடப்படாமலும் பல பத்தாண்டுகளாகப் பரப்பப்பட்டன. சுபாஸ் சந்திரபோஸ் இன்னமும் இறக்கவில்லையென்று சொல்லி இருபது முப்பது வருடங்களாக இந்தியாவில் தேடிக்களைத்தார்கள். விசாரணைக் குழுக்கள் நியமித்துக் கூடத் தேடிப் பார்த்தார்கள்.

இதே போலப் பிரபாகரனைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட தனிமனிதவழிபாடு, யாராலும் எவராலும் வெல்லப்பட முடியாத பெருவீரனென்ற விம்பம், இத்தகைய கற்பனைகள் பிரபாகரன் இன்னமும் உயிர்தரிப்பதான யதார்த்திற்குப் புறம்பான மனப்பிராந்திகள் உலாவுவதைத் தீவிரப்படுத்தின.

தீபம், ஜி.ரி.வி போன்ற புகலிடத் தமிழ் தொலைக்காட்சிகள் வன்னியில் யுத்தம் தொடங்கியவுடன் காட் இன்றி இலவசமாக மக்களுக்குக் காட்சி தரத் தொடங்கின. இந்தப் புலிப் பாசிசப் புழுகுணி ஊடகங்களையே பெரும்பாலான தமிழ் மக்கள் பார்த்தனர். இலங்கைச் செய்திகளைப் பெற வேறு எந்தத் தொலைக்காட்சிகளும் இருக்கவில்லை. புகலிட நாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்பை விட இவை தினசரி மக்களைச் சென்றடைந்தன. புலிகள் இவ் இரு ஊடகங்களையும் பின் புறமிருந்து சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். புலி அல்லாத எக்கருத்துக்கும் இடமிருக்கவில்லை.

தீபம், ஜீ ரீவி இரண்டினதும் ஊடகப் பயங்கரவாதமானது சுதந்திரமாக இயங்கியது. அனைத்துப் புகலிடத் தமிழ் மக்களையும் புலிப்பாசிசத்தின் கீழ் அணிதிரட்டியது. வெறித்தனமான தமிழினவாதம் பரப்பியது. அண்மையில் புதிதாக இலங்கையில் இருந்துவரும் டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியின் வருகை இவர்களது தனி இருப்பை அசைக்கத்தொடங்கியது.

தீபம் ஜீ ரீ.வீ இவ்விரண்டு தொலைக் காட்சிகளும் பெரும்பகுதியாக வன்னி அகதிகளின் அவலங்களை சாவை இடைவிடாமல் முழுநாளும் ஒளிபரப்பின. மக்களை சோகத்தை விரும்பும் மனப்பாதிப்புடையவர்களாகமாற்றின. இறந்து காயப்பட்ட மனிதர்களின் உடல்கள் தொடர்ச்சியாகக் காட்டப்பட்டன. சில சமயம் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த சிங்கள மக்களின் இறந்த உடல்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உடல்கள் என்று காட்டப்பட்டது.

இந்தப் பிரச்சாரப் பொய்கட்கு எதிராகவோ சமமாகவோ எந்த ஊடகமும் இருக்கவில்லை. இவர்கள் சர்வாதிகார ஊடகத் தனி ஆட்சி செலுத்தினர். தமிழ்மக்களைக் கொல்கிறார்கள் பெண்களைக் கற்பழிக்கிறார்கள, தமிழினக் கொலை நடக்கிறது. தமிழ் அகதிகளை வதை முகாங்களில் அடைக்கிறார்கள். தமிழ் இளைஞர்களைக் கொன்று உள் உறுப்புக்களை அபகரிக்கிறார்கள் என்பது போன்ற எண்ணில் அடங்காப் பொய்கள் தினசரி செய்தியாக வாசிக்கப்பட்டன.

புலிகளின் தலைமைப் பிரச்சார ஊடகமான தமிழ்நெற்றின் செய்திகள் இந்த ஊடகங்களில் அப்படியே மறுவாசிப்புப்பெற்றன. மக்களுக்கு புலிப் பொய்களுக்கு எதிராக உண்மை அறியும் வாய்ப்பு இருக்கவில்லை. தமிழ் ஊடகப் பயங்கரவாதத்தின் உச்சமட்டப் பாதிப்புக்குப் புகலிடத்தமிழர் உள்ளாயினர்.

மனிதர்களின் இயற்கையான கருணை, மனித இரக்கம், ஏனைய மக்களினங்களைப் பற்றிய கவனம் ஜனனாயக உணர்வு என்பன மனிதர்களிடம் மந்தித்துப் போயின. சிங்களவர்களைக் கொல்லவேண்டுமென்ற கருத்து வெளிப்படையாக இந்த ஊடகங்களில் கேட்டது.

புலித்தலைவர் எல்லாம் வல்ல இறைவனைப் போல் சகலரையும் அவதானித்துக் கொண்டிருப்பதாக உரிய நேரத்தில் செயற்படுவாரென்று புலிநபர்கள் வாக்குறுதிகளைத் தந்தார்கள் ஐம்பது தமிழனைக் கொன்றால் பதிலாக 500 சிங்களவர்களைக் கொல்லவேண்டுமென்று இந்த ஊடகங்களில் வந்து பேசினார்கள். சிங்களவன் தமிழனின் எதிரியென்ற தமிழரசு காலக் கருத்தமைப்புகள் மீண்டும் தீவிரமாக மறுநடுகை செய்யப்பட்டது.

இந்த ஊடகங்கள் பிரபாகரனின் மரணம் பற்றிய பொய்களை நம்பாதீர்கள் என்று மக்களை எச்சரித்தன. பிரபாகரன் மரணம்கடந்த பெருவீரனாக தமிழ்மக்களை ஆட்கொள்வதற்காகவே உயிர்தரித்திருப்பதாக பொய்கள் பின்னப்பட்டன.
தேசியத்தலைவர், தலைவர் என்ற சொற்பதங்களினூடு இதுவரை தமிழ்மக்கள் கண்டறியாத தீவிரமான தனிமனித வழிபாட்டுநிலை பரப்பப்பட்டது.

புகலிடத் தமிழ்மக்கள் மேற்குலக முதலாளிய ஜனனாயகம் மனிதசுதந்திரம் கருத்துவித்தியாச உரிமை போன்றவற்றிற்கு அருகில் இருந்தனர். புலிப் பிரச்சாரங்கள் இந்தப் பண்புகளைக் கூடத் துறக்கும்படி கட்டாயப்படுத்தின. சுயதீர்மானம் சுயஅடையாளம் இல்லாத மனித மந்தைகளாகப் புகலிடமக்கள் ஆக்கப்பட்டனர். எங்கும் புலி எதிலும் புலி. அவர்களே சர்வவியாபகமாய்த் தமிழ்மக்கள் மத்தியில் வீற்றிருந்தனர்.

2006 ஆம் ஆண்டு கிழக்கில் 300000 தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் புலிகளால் குடியெழுப்பப்பட்டபோது இந்தத் தமிழ் ஊடகக் கும்பல் மக்களை இதில் ஆர்வம்காட்டவிடவில்லை. தமிழ் மக்கள்மட்டுமே பாதிக்கப்படுவதாக ஓரவஞ்சகச் செய்திகள் வாசிக்கப்பட்டன. புலிப்படுகொலைகள் அரசின் கொலைகளாக பெயர்மாற்றம் செய்யப்பட்டன. ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் என்ற பெயரில் கழுத்துப்பட்டிகள் கட்டியவர்கள் புகலிடத் தமிழ்மக்கள் முன்பு பின்பு கேட்டுப் பார்த்தறியாதவர்கள் எல்லாம் தொலைக் காட்சிகளில் தோன்றித் தமிழனுக்காக வாதாடுவாதாடென்று வாதாடத் தொடங்கினர்.

இருபது வருடமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட 200000 பேர் புத்தளம், மன்னார்ப் பகுதிகளில் ஓலைக் கொட்டில்களில் வாழ்கின்றனர். இவர்களைப் பற்றி ஒரு செய்தியையோ காட்சிப்பதிவையோ இந்த ஊடகங்கள் புகலிடத் தமிழ்மக்களுக்கத் தரவில்லை. ஆனால் வன்னியில் புலிகள் இலங்கை இராணுவத்தால் துவம்சம் செய்யப்படத்தொடங்கியதும் மக்களைக் காத்தல் என்ற கோசத்தில் புலிக்கும்பலைக் காக்க புகலிடநாடுகள் எங்கும் எதிர்ப்பு இயக்கங்களை இவர்கள் ஏற்பாடு செய்தனர்.

இது மேலே தொடர் கட்டுரைகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பாகங்கள் தொடரும் .. ..T111

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com