13வது திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றித் தீர்மானம் இல்லை: யாப்பா
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பற்றி இதுவரை எந்த இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
13வது திருத்தத்துக்கு அமைய ஏற்கனவே மாகாணசபைகள் அமைக்கப்பட்டுள்ளபோதும், அதிகாரங்களைப் பகிர்வது பற்றி தீர்மானம் எடுக்கவில்லையென நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டிருப்பதுடன், வடக்கு மாகாணசபையொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“இதற்கு மேலதிகமாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றி இதுவரை எந்தத் தீர்மானத்தையும் நாம் எடுக்கவில்லை” என்றார் அவர்.
வடபகுதிக்கான தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திலா அரசாங்கம் வேட்பாளர்களை நிறுத்தும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பெரும்பாலும் அவ்வாறே முடிவெடிக்கப்படும் எனக் கூறினார்;.
“இந்த விடயம் குறித்தும் நாம் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. கூட்டணியில் போட்டியிடும் ஏனையவர்களும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டால் சிறந்தது” என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கவேண்டுமென இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்தை வலியுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Thanks INL
0 comments :
Post a Comment