Wednesday, April 15, 2009

இலங்கையின் அறிக்கை துல்லியமற்றது: மெக்சிக்கோ



இலங்கைக்கும், மெக்சிக்கோவுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்புத் தொடர்பாக இலங்கை வெளியிட்டிருக்கும் அறிக்கை துல்லியமானது அல்ல என ஐக்கிய நாடுகள் சபைக்கான மெக்சிக்கோத் தூதுவர் குலூட் ஹெலர் தெரிவித்துள்ளார்.

“அந்த அறிக்கை துல்லியமானது அல்ல. இலங்கையில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பது பற்றியே நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்” என ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைவர் பதவியை வகிக்கும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் மெக்சிக்கோவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பலித கொஹண, மெக்சிக்கோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்து, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயம் உள்ளடக்கப்படாது என மெக்சிக்கோ பாலித கொஹணவிடம் உறுதிமொழி வழங்கியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கையானது துல்லியமானது அல்ல என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரும், ஐ.நா.வுக்கான மெக்சிக்கோ தூதுவருமான ஹெலர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தைப் பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கான பிரேரணையொன்றை முதன் முதலில் மெக்சிக்கோ முன்வைத்திருந்தது. எனினும், இந்தப் பிரேரணைக்கு பிரித்தானியா மற்றும் ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து அவுஸ்ரியா, மெக்சிக்கோ உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து கொண்டுவந்த மற்றுமொரு பிரேரணையை இலங்கை இராணுவத்தினருக்கு இராணுவ உதவிகளை வழங்கிவரும் சீனா மறுத்திருந்தது.

எனினும், ஐ.நா. பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயத்தை உள்ளடக்கி பாதுகாப்புச் சபையில் இலங்கை பற்றிக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை வழங்கும் மெக்சிக்கோ தூதுவர் கூறியிருந்தார். இதன் பின்னணியிலேயே மெக்சிக்கோவுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண மெக்சிக்கோ சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Thanks INL LANKA

No comments:

Post a Comment