திருக்கோயில் ஸ்ரீ சித்திர வேலாயுத ஆலய ராஜகோபுர மீள் கட்டுமானப் பணிகளுக்கு பக்தர்களின் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கிய திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயம் கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது முற்றாக நிர்மூலமாகியிருந்தது. இன்று அவ் ஆலயம் பிரதேச மக்களின் பூரண பங்களிப்பில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு நான்கு ஜாமப் பூசைகளும் இடம்பெற்று வருகின்றது. சுனாமி அனர்த்தத்தின்போது நிர்மூலமாகியுள்ள ஆலயத்தின் ராஜகோபுர வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்கான நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய ஆலய நிர்வாகம் நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்றது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த இத்திருத்தல முன்னேற்றத்திற்காக புலம்பெயர் மக்களிடம் இருந்தும் தனவந்தர்களிடம் இருந்தும் அப்பிரதேச மக்கள் நன்கொடைகளை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
இவ்வாலயத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்க விரும்புகின்ற அன்பர்கள் கீழே தரப்பட்டுள்ள விலாசத்திற்கோ அன்றில் ஆலய நிர்வாகசபையின் வங்கிக்கணக்கிற்கோ தங்கள் உதவிகளைச் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்கு : ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி பேராலய திருப்பணிச் சபை.
ந.மு கணக்கிலக்கம் : 224-165003021-7 மக்கள் வங்கி, திருக்கோவில்.
திருப்பணி மேலதிக தொடர்புகளுக்கு :
தொ. இலக்கம் : 0094-67-2265045 , 0094-67-5680380
FAX : 0094-67-2265038
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வரலாற்றுச்சுவடுகள்
ஈழத்தில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த முருக தலங்களுள் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயமும் ஒன்றாகும். முர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகள் வாய்ந்த இத்திருத்தலத் தோற்றம் பற்றி நோக்குமிடத்து கந்தபுராண நிகழ்ச்சியுடன் தொடர்புபட்டதாக தவபுராணங்கள் குறிக்கின்றன.
ஆலயத் தோற்றம் பற்றி வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து இலங்கையின் பூர்வீகக் குடியினரில் ஒரு பிரிவினரான நாகர் குலத்தவர்களால் இவ்வழிபாட்டுத்தலம் தோற்றுவிக்கப்பட்டதாக அறியமுடிகிறது. பண்டைக்காலத்தில் நாகர் முனை என்றபெயரை பெற்றிருந்த இன்றைய திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்ந்திருந்த நாகரிடையே நிலவியிருந்த வேல்வழிபாட்டின் தொடர்ச்சியே இன்றைய சித்திரவேலாயுதர் ஆலயமாகும்.
அக்காலத்தில் இப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்த நாகர்குல மக்களின் வேல்வழிபாடு வளர்ச்சியுட்டு மண்ணாலும், மரத்தாலும் சிறியதொரு வழிபாட்டுத் தலமாக விளங்கியிருந்த காலத்தில் முதல் முதலாக இவ்வாலயம் வர்த்தகாமினி ஆட்சிக்காலத்தில் (கி.மு 1ம் நூற்) அனுராதபுரியை கைப்பற்றி ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களால் சிறியதொரு ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயப்பதிகம் ஒன்று கூறும்.
இதற்கு முந்தைய காலத்தில் (கி.மு 2ம் நூற்) மனுமன்னன் என்ற மன்னனால் சிறியதொரு கோவிலாக நிர்மானிக்கப்பட்டு பூர்த்தியடையாத நிலையிலிருந்த ஆலயத்தையே மேற்குறிப்பிட்ட தமிழ் அரசர் பூர்த்தி செய்தார் என அறியமுடிகிறது. இங்கு மனுமன்னன் என்று மரபுரை கூறும் தமிழ் மன்னன் இலங்கை முளுவதும் ஒரு குடையின் கீழ் ஆட்சிபுரிந்த எல்லாளன் (கி.மு 145-101) ஆவான்.
கி.பி 1ம்,2ம் நூற்றாண்டுகளில் சோழ இளவரசர்களான புவனேக கஜபாகு,மனுநேய கஜபாகு,என்பவர்களால் இவ்வாலயம் திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் இவ்வாலயத்தில் பூசை புரிவதற்காக மல்லிகாச்சுரபுரம் (ஸ்ரீ சைலம்) என்ற இடத்திலிருந்து வீர சைவ குருமார்கள் வரவழைக்கப்பட்டு தம்பட்டை என்ற இடத்தில் அவர்களை குடியேற்றியதாகவும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற மட்டக்களப்பு மான்மியம் குறிக்கிறது.
மேலும் இவ்வரசர்களால் வயல்கள் மானியமாக கொடுக்கப்பட்டதாகவும் இவ்வயல்கள் காணிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் இந்நூல் குறிப்பிடும்.
கி.பி 10ம் ,கி.பி 11ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் சோழராட்சி நிலைத்திருந்த காலத்தில் சோழப்பிரதிநிதிகளான கதிர் சுதன், மதிசுதன்(சிற்றரசர்)ஆகியோர் காலத்தில் இவ்வாலயத் திருப்பணிகள் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்ததுடன் திருப்படைச் சாசனம் ஒன்று உருவாக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
கி.பி 11ம் நூற்றாண்டில் 1ம் விஜயபாகு கஎன்ற மன்னனால் இவ்வாலயம் திருப்பணி செய்யப்பட்டதாக கந்த உபாதசூள் வம்சம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இக்காலத்தில் இவ்வாலய வளாகத்தில் அமைந்திருந்த சிவாலயத்திற்கு இவனால் நெற்காணி நன்கொடையாக வழங்கப்பட்டதை இவ்வாலய கல்வெட்டு குறிப்பிடும்.
கி.பி 12ம் நூற்றாண்டளவில் இலங்கையில் ஆட்சிபுரிந்த மாகோன் என்ற தமிழ் மன்னன் இவ்வாலயத்தை பிற்கால சோழர் கட்டிடப் பாணியில் கற்போயிலாக நிர்மாணித்தான். இதனை முன்னின்று செய்து முடித்தவர் குளக்கோட்டன் என்ற இவரது உபராஜன் ஆவான். இதனை குளக்கோட்டக் கல்வெட்டுப் பாடல் குறிப்பிடுகிறது. இதனைத்தொடர்ந்து இலங்கையில் பாண்டியன் செல்வாக்கு நிலவியிருந்த காலத்தில் (கி.பி 1284-1310) இவ்வாலய வளர்ச்சியில் பாண்டியன் அக்கறை கொண்டிருந்தார்.
இந்து கற்கோவிலான கருவறையில் பொருத்தப்பட்டுள்ள யாழிச் சிற்பங்கள் பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும். மன்னன் வரிசைகளும் மானியங்களும் பெற்று பண்டைய வரலாற்றுச் சிறப்பினை கொண்ட இவ்வாலயம் போர்த்துக்கீசர் காலத்தில் அசிவிடோ என்பவனால் சேதமாக்கப்பட்டது. ஆயினும் கற்கோவிலான கருவறையை அவர்களால் அழிக்கமுடியவில்லை, இதற்குப் பிற்பட்ட காலத்தில் வன்னியர் ஆட்சிக் காலத்தில் மீண்டும் புதுப் பொலிவு பெற்று விளங்கிய இவ்வாலயம் கண்டி மன்னர்களாலும் போற்றப்பட்டு வந்ததுடன், அவர்களது நன்கொடையளையும் பெற்று சிறப்புடன் விளங்கி வந்துள்ளது.
கண்டி மன்னனான 1ம் விமல தர்ம சூரியன் இவ்வாலயத்தில் 1603 ல் இடம்பெற்ற 10ம் நாள் உற்சவத்தில் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் நன்கொடையும் வழங்கிச் சென்றுள்ளான். இதனை வரலாற்று நூல் ஒன்று விபரமாக குறிப்பிடுகின்றது. மட்டக்களப்பு தேசத்தில் (அம்பாரை உள்ளடங்கிய மட்டக்களப்பு) முதன்மையான திருப்படைக் கோவிலான இவ்வாலயம் வரலாற்றுச் சிறப்புமிகுந்தது.
0 comments :
Post a Comment