Sunday, April 5, 2009

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கைநெற் விசேட தொடர்பாளர் முகமட் றாபியுடன்



ஐயா. ஆனந்தசங்கிரி அவர்களை பல முறை நேரடியாக சந்தித்த பல ஆயிரம் அனுபவங்கள் இருக்கிறது. வெள்ளை வேட்டி, வெள்ளை சேர்ட்டில் மிக மிக பவ்வியமாக பேசும் அந்த ஆனந்த சங்கரி ஐயாவா இது எனசற்று நேரம் துணுக்குற்று விட்டேன். ஆவேசம், ஆவேசம் மொத்த தமிழினத்தின் மீதும் ஆவேசம். பல வருடம் தனது கண்காணிப்பில் இருந்த அந்த வன்னிச் சனமா இது? ஐயகோ!!! கடவுளே உனக்கு கண்ணில்லையா? அல்லது எங்களின் சனத்தின்ர ஓசை உனக்கு கேட்கவில்லையா? என நொடிக்கு நொடி அழுத அந்த ஆனந்த சங்கரி ஐயாவிடம் கண்ட துயரப் பேட்டி இது.



கேள்வி : கடந்த மூன்று நாட்களாக வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்களை பார்வையிடச் சென்றிருந்தீர்களே. அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

பதில் : கொடுமை ,கொடுமை , மகா கொடுமை. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது. கையிழந்து,கால் இழந்து கதறும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது வயிறு கொதிக்கிறது. எல்லாம் இந்த புலியால வந்ததுதானே. வெள்ளம் வரும், புயல் வரும்போதெல்லாம் மக்கள் ஓடுவார்கள்,பிறகு ஒரு நாளில். இரண்டு நாளில் பழையபடி தங்கள் இடத்துக்கு போய் சேர்ந்து விடுவார்கள். இது அப்படியா? கடவுளே! மனிதப் பேரவலம்! யாரும் எதுவும் செய்ய முடியாது. முடிந்தளவு அரசு செய்துள்ளது. செய்து கொண்டிருக்கிறது.

கேள்வி : அவர்களது இருப்பிடம்,உணவு சம்பந்தமாக ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

பதில் : இருப்பிடம், உணவில் எந்த குறையும் இல்லை. முதல் இரண்டுநாட்கள் மட்டும்தான் பிரச்சனை. அப்புறம் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து விடுகின்றார்கள். மூன்று நாட்களுக்கு முந்தி வந்தவர்களெல்லாம் நன்றாக சாப்பிட்டுக் கொண்டு எந்த குறையுமில்லாமல் இருக்கின்றனர். ஆனால் எங்கிட சனம் சிவப்பரிசி தின்னுற சனம். இந்த வெள்ளை அரிசியால நிறைய பேருக்கு வயிற்றோட்டம். தயவு செய்து அதை மட்டும் மாத்தி கைக்குத்துரிசி சோறு போடச் சொல்லுங்கோ என நிறைய பேர் கேட்டினம். இது சம்பந்தமாக அரசிடம் நாளைக்கு கதைக்கப் போகின்றோம்.

கேள்வி : சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை மானபங்கப்படுத்துகின்றது.என ஒரு செய்தி கசிகிறதே. தனிப்பட்ட ரீதியில் யாரிடமாவது இது சம்பந்தமாக கேட்டீர்களா?

பதில் : அவனுக்கு இந்த சனத்துக்கு சாப்பாடு கொடுப்பதற்கே நேரமில்லாமல் இருக்கிறது. அதற்குள்ள மானபங்கபடுத்துவதாவது. பல பேருக்கிட்ட தனிப்பட்ட ரீதியில் இது சம்பந்தமாக கேட்டேன். ஐயோ அவன்தான் எங்களின்ற புள்ளைகள் அழுதாலும் தூக்கிக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு பால் கொடுங்கோ என்று சொல்றான், என அழுகின்றனர். இதை இந்த புலிக்குட்டிகளும்,அங்க உள்ள ஜெயானந்தமூர்த்தி, சம்பந்தன் கூட்டம் பரப்பி விடுற கதை இது.

அந்த மனிதக் கூட்டத்துக்குள்ள இருந்து ஒரு புள்ள என பார்த்து சிரித்தது. யாரும்மா நீ எங்கேயோ கண்ட மாதிரி இருக்கிறதே என்றேன். கையிரண்டும் இல்லாத அவர். நான் உங்கட பின் வீடு பவளத்தின்ட மகள் என்றார். அம்மா எங்கென்று தெரியாதாம். அப்பா இரண்டு கால்களையும் இழந்து புலிப்பிரதேசத்தில் இருக்கிறாராம். தான் தனியாக இங்கு வந்துள்ளாராம். இப்படி ஆயிரம் சனம். இதை அங்கிருந்து கொண்டு வணங்கா மண்விடுற அந்த டொக்டர் மூர்த்தியையும் இவருட புலிக் கூட்டத்தையும் கூட்டிவந்து காட்ட வேண்டும். சேனைப் பயிர் செய்து கொண்டு அடுத்தவனுக்கு எந்த குரோதமும் செய்யாமல் வாழ்ந்த இந்த மக்கள் யாருக்கு என்ன பாவம் செய்தார்கள்.

கேள்வி : இந்த மக்கள் இப்படியே இங்கு எத்தனை காலத்துக்குத்தான் இருப்பார்கள்?

பதில்: இது சம்பந்தமாக நாங்கள் அரசுடன் கதைக்க உள்ளோம். உடனடியாக கிளிநொச்சிக்குள்ள கொண்டு போய் குடியேற்றவும் முடியாது. இந்த புலி அங்க மிதிவெடியை அல்லவா விதைத்து வைத்துள்ளது. அதனால் அக்கராயன் குளம் போன்ற பகுதிகளில் மூன்று கிராமங்களை தேர்வு செய்து இந்த மக்களை அங்கு கொண்டு போய் விட்டால் அவர்கள் தமது தொழிலை செய்து கொண்டு நிம்மதியாக இருப்பார்கள்

கேள்வி : எத்தனை முகாம்களுக்கு விஜயம் செய்தீர்கள்?
பதில் : இரண்டு முகாம் தவிர ஏனைய அனைத்து முகாமுக்கும் சென்றோம்.

கேள்வி : இன்றைய இந்த சூழலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் : புலம்பெயர் நாடுகளில் இருந்து கூக்குரலிடம் மொத்த புலிக்குட்டியையும் அந்த வணங்காமண்ணிலோ அல்லது வணங்காகப்பலிலோ ஏற்றி முல்லைத் தீவில் இறக்கி விடச் சொல்ல வேண்டும். இதை ஏதாவது இரண்டு நாடுகள் செய்தால் உடன் யுத்தம் நிற்கும். இந்தக் கூட்டத்தினால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்.

கேள்வி : மகின்த அரசு போரை முடிவுக்கு கொண்டு வருமா ? வந்த பின் தமிழர் நிலை எவ்வாறு இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

பதில் : நான் எவருக்கும் இனி வக்காலத்து வாங்கப் போவதில்லை. ஜனாதிபதிக்கு பல முறை சொல்லிவிட்டேன். போரை நிறுத்துங்கள் மக்களை காப்பாற்றுங்கள் என. இந்தியாவுக்கும் மற்றவர்களுக்கும் அறிவித்தும் விட்டேன். இந்தியா தானே நான்கு மணித்தியாலத்தில் வைத்தியர்களுடன் வந்து இன்றைக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றான். அவனைப் போய் 'றோ' என்றால் எவன் வந்து உதவுவது? இந்த சேனாதி ராஜாவும்,சம்பந்தனும் வந்து நிற்பாட்டி பார்க்கட்டுமே. அவர்கள் தானே இதற்கெல்லாம் காரணம். இப்போது என்ன தமிழர் நிலை நன்றாகவா இருக்கிறது? முதல் புலிகள் ஆட்சியில் அவர்கள் என்ன நன்றாகவா இருந்தார்கள்? முதலில் புலியும் இப்போது இங்குள்ள புதிய குட்டி புலிகளும் அழியணும்.

கேள்வி : இந்த போரை நிறுத்த அல்லது வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற உங்களது அமைப்பு என்ன உருப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

பதில் : அரசுக்கு பல முறை சொல்லி விட்டோம் இனியும் சொல்லப் போகின்றோம். மக்கள் தினமும் வெளியேறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இதில் மேலதிகமாக சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. இந்த சம்பந்தன், சேனாதிராஜா, கஜேன்திரன், மற்ற அந்த தங்கச்சி எல்லோரையும் கூப்பிட்டுத்தான் மக்களை விடுவிக்கச் சொல்லி சொல்ல வேண்டும். அவர்களை போய் இந்த கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு என்னிடம் கேட்கிறீரே( ரொம்ப கோபமாக சொல்கின்றார்)

பாவம் தம்பி, பாவம். இது பொல்லாத பாவம் தம்பி. என்னை கண்டுவிட்டு ஒரு பெண்பிள்ளை அழுதது. இரண்டு கையும். இரண்டு காலும் இல்லை.என்னம்மா நடந்தது என கேட்டேன். ஐயா நான் பளை தம்பகாமம் கிராமத்தைச் சேர்ந்தவள். குடும்பத்தில் அனைவரும் இறந்து விட்டனர். இந்த புலி எங்களை அடைத்து வைத்திருந்ததையா இப்போதுதான் நிம்மதி ஐயா என கண்ணீர் விட்டது. இப்படி எத்தனையோ யாழ்ப்பாணசனத்தை இந்தப்புலி இவ்வளவு காலமும் அடைத்து வைத்திருந்தது.

கேள்வி: இந்த போரை நிகழ்த்துவது இந்தியா என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். இது உண்மையா? இந்தியா சம்பந்தமாக உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் : என்ன விஷர் கேள்வி இது? இந்தியாவுக்கு வேறு வேலையில்லையா? நீர் என்ன அவங்கட ஆள்மாதிரி கேட்கிறீர்? நீங்கள்தானே அவர்களின் தலைவரை கொன்றீர்கள். ராணுவத்தை விரட்டினயள். பிறகு காசு கொடுத்தனுப்பி வை.கோ, திருமாவளவன் எல்லோரையும் பேசச் சொன்னீர்கள். மத்த இந்த உங்களுடைய எம்பிமார்களை எல்லாம் அனுப்பி கோலாட்டம் நடாத்தினயள். இப்போ என்ன இந்தியன் வந்து அடிக்கிறாள் என்கிறியள். உங்கட அந்த மொத்த எம்பிமார்களையும் அனுப்பி அவனுக்கிட்ட நிறுத்தச் சொல்லலாம் தானே. எங்க இப்போ அவங்கள் எல்லாம்.

கேள்வி : போர் முடிவுக்கு வந்த பின்னர் புலிகளின் அச்சுறுத்தல் இருக்குமா ? புலிகள் பலம் இழந்து விட்டார்களா?


பதில் : திரும்பவும் மோட்டுத்தனமாத்தான் கேட்கிறீர். பொத்துவில் வரை வியாபித்திருத்த அவர்களை 300 கட்டை விரட்டி வந்து புதுமாத்தளனுக்குள்ள முடக்கி வைத்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு படுதோல்வி. கிடங்கு வெட்ட ஆள் இல்லை, தண்டவாளம் களத்த ஆள் இல்லை. சேனைப்பயிர் செய்த சனம் எல்லாம் ஓடிவந்துட்டுது. இப்போ வணங்கா மண்விட்டு வீரம் காட்டுறாங்கள். வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதி அப்போது பாடியது இவர்களுகுத்தான் பொருந்தும்.

கேள்வி : உங்கள் அமைப்பின் எதிர்காலத் திட்டம் என்ன?.
பதில் : இப்போது ஒரு திட்டமுமில்லை. மக்கள் உடனடியாக தங்கள் பகுதிகளுக்கு போய் தமது தொழிலை தொடங்க வேண்டும். அதன் பின் மக்களே தங்கள் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். இப்போது கொஞ்சம் பேர் தாங்கள்தான் தலைவர் என பத்திரிகைகளில் புகைப்படங்கள் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். தாங்களே வாக்குப் பெட்டிக்குள்ள வாக்குப் போட்டு எம்பி ஆனவர்கள் இவர்கள்.

கேள்வி : கிழக்கு மாகாண அமைச்சையும்,கருணா சம்பந்தமாகவும் என்ன அபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றீர்கள்?


பதில் : அங்கு என்னவெல்லாமோ நடக்கிறது. மக்கள் மக்களை தலைவர்களாக தெரிவு செய்யும் வரை அனைவரும் இன்னொரு குட்டி பிரபாகரன்களே.

கேள்வி : மலையக மக்கள்,முஸ்லீம் மக்கள்,வட கிழக்குக்கு வெளியே வாழும் மக்கள் சம்பந்தமாக ஏதாவது திட்டங்கள் வைத்துள்ளீர்களா?

பதில் : பாவம் மலையக மக்கள் ரொம்ப நல்ல மக்கள். அங்கு புதிய தலைவர்களெல்லாம் முளைத்து நாடு நாடாகப் போய் பொங்கு பொங்கு என பொங்கு தமிழ் பாடியதால் இப்போது ஒரு பாவமும் அறியாத அந்த மக்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த தலைவர்கள் எல்லாம் அந்த மலையக மக்களை பற்றி கவலைப்படாமல் தமிழ்செல்வனிடமும், பிரபாகரனிடமும் போய் அல்லவா ஆனா,ஆவன்னா படிக்கத் தொடங்கினார்கள். இந்த மலையகத் தலைவர்களுக்கு டென்மார்க்குக்கு போய் பொங்கு தமிழ் பொங்க என்ன தலைவிதியா?

முஸ்லீம் மக்கள் மேல் எனக்கு ஆறாத பாசம் உண்டு.அவர்களும் நாங்களும் ஒன்றுதானே.
பிறகென்ன முஸ்லீம், தமிழ். யாழ்ப்பாண ஏ.ஜீ.எ.மக்பூல் எனது நண்பர் மட்டுமல்ல அவரிடம் நாங்கள் தமிழ் இலக்கணமும், ஹிந்து நாகரிகமும் படித்துள்ளோம். அந்த அளவுக்கு தமிழ் மேல் தீராத காதலுள்ளவர்கள் முஸ்லீம்கள். அதையும் இந்த புலி வந்தல்லவா குழப்பி விட்டது.

கேள்வி : எதிர்காலத்தில் எப்படியான தீர்வு தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : கடவுள் காப்பாற்ற வேண்டும். "நான் அடிமையாக வாழ விழும்புகின்றேன்" என அடிமைச்சாசனம் எழுதிக் கேட்காத தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வர வேண்டும். பத்திரிகைகள் உண்மை எழுத வேண்டும். ஒரு பத்திரிகை கூட உண்மை எழுதவில்லை. புலி அங்கே இரண்டு பேரை கொண்றால், அதை பக்கம் பக்கமாக எழுதி புலியை பாராட்டிய பத்திரிகைகள்தான் இது வரை வந்தது. இவை ஒழிந்தால் உண்மையான ஜனநாயகம் தானாக வரும்.

கேள்வி :சிறிலங்காவில் உள்ள ஏனைய சிங்கள கட்சிகளுடன் உங்களுக்கு உறவுகள் உள்ளதா?அவர்கள் தமிழர்களின் உரிமை சம்பந்தமாக என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்? சிங்கள மக்கள் மத்தியில் தமிழருக்கு இப்படியான தொரு பிரச்சனை இருக்கிறது என தெரியப்படுத்த ஏதாவது ஆரோக்கியமான திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா?

பதில் : கட்சிகளையும் தலைவர்களையும் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அத்தனை சிங்கள மக்களும் நாட்டில் பிரச்சனை தீர வேண்டும். சிங்களவர்களுக்குரிய சகல உரிமையும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்பட வேண்டும். எல்லோரும் சுமுகமாக கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும். இந்த நாடு சுபீட்சமடைய வேண்டும் என மனதார விரும்புகின்றனர். இந்த முழு நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் நான்தான் ஜனாதிபதி, இங்குள்ள ஒவ்வொரு வரையும் எனது பிரஜைகளாக கருதுகிறேன், எவரிடமும் பாகு பாடு காட்ட மாட்டேன், எவரையும் எவருக்கும் காட்டிக் கொடுக்க மாட்டேன், இது எனது நாடு, அனைவரும் என் மக்கள் என ஜனாதிபதி ஏற்றுக் கொள்வாரானால் பிறகென்ன வேலையிருக்கிறது எமக்கு. இதைத்தான் நான் அவரிடம் சொல்லப் போகின்றேன்.

கேள்வி : எதிர்வரும் மாகாணசபை,பாராளுமன்ற தேர்தல்களில் உங்கள் கட்சி போட்டியிடுமா?
தனித்து போட்டியிடுவீர்களா? ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவீர்களா?

பதில் : போட்டியிடுவேன். ஆனால் இங்கு ஒருவர் தான் தான் கிங். தான்தான் மினிஸ்டர். இனி தான்தான் சீப் மினிஸ்டர் என சொல்லிக் கொண்டு திரியிறார். போன ஜூன் மாத அவருட பேப்பரில ஒரு பக்கம் பிள்ளையான் மற்றப் பக்கம் ஜனாதிபதி இந்தப்பக்கம் தன்ர போட்டோவை போட்டு அடுத்த முதலமைச்சர் என பறை சாற்றிக் கொண்டு திரியிரார். ஜனனாயகத் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன். சேர்ந்தா தனித்தா என்பதை அப்போது தீர்மானிப்போம்.

கேள்வி : கிழக்கு மாகாணத்தில் உங்கள் கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது?

பதில் : விரைவில்அலவலகம் திறக்க உள்ளோம். தொர்புகளை பேணிவருகின்றோம்.

கேள்வி : உங்கள் கூட்டு முன்னணி தேர்தலுக்கான கூட்டா? அல்லது மக்கள் நலன் சார்ந்த கூட்டா? எப்படி அதை நம்புவது? ஏற்கனவே பல முறை கூடிக்கலைந்துள்ளீர்களே?

பதில் : தமிழ்நாடு மாதிரி சமஷ்டி ஆட்சி. இதுதான் எங்கள் கூட்டின் நோக்கம். அதற்கு முதல் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு ஜன நாயக வழிமுறைகளில் போராடுவது. இவ்வாறு ஒரு சமஷ்டி கிடைத்தால் தமிழ் நாட்டுல இருந்து ஊழையிடுபவர்கள் கத்த மாட்டினம். இது சம்பந்தமாக மல்வத்த தேரோக்கள், பிஷப்மார், கட்சிகள் மற்றும் சில பல பெரியார்களுடன் தனியாகவும், கூட்டாகவும் கதைத்துள்ளோம். இதற்கான வேலைத் திட்டங்களைபடிப்படியாக
செய்து வருகின்றோம். இப்போதுள்ள இந்த சூழலில் இதற்குமேல் சொல்வதற்கொன்றுமில்லை.

கேள்வி : கடந்த சில நாட்களாக கூட்டு முன்னணி அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டிருப்ப
தைத்தான் காண்கின்றோம். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் கூட இன்னும் தனித்தனியே சிந்திப்பவர்களாகவே உள்ளனர். எதிர்காலத்தில் புலம் பெயர்நாடுகளில் உள்ளவர்களின் பங்களிப்பும் பாரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாமா? அது சம்பந்தமாக உங்கள் அபிப்பிராயம் என்ன?


பதில் : எங்களால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதற்குமேல் இந்த புலிக்குட்டி மாதிரி எங்களால் செய்ய முடியாது. வெளி நாட்டில் உள்ள பழைய, புதிய எல்லோரும் வரவேணும். இந்த மனித அவலங்களை பார்க்க வேண்டும். அரசியல் செய்ய வேண்டும். ஆனால் இந்த பிக்னிக் வாற வேலையை விட்டு விட்டு வர வேண்டும். அதை விட்டு விட்டு மக்களோடு மக்களாக இருந்து இங்கு இந்த புலிகள் செய்த வேலைகளை உலகுக்கு வெளிக்காட்ட வேணும். புகைப்படங்கள் எடுத்துக்குப் போய் தமிழனை சிங்களவன் கொல்றான் என்ற புலிக் கதை எல்லாம் சொல்லப்படாது.

கேள்வி : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அண்மைய அபிவருத்தி சேவைகள் சம்பந்தமான தங்கள் அபிப்பிராயம் என்ன?


பதில் : அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. 1994 இல் ஐந்தரை லட்சம் மக்களின் வாக்குகளில் நாங்கள் ஒன்பது பேர் போனோம். இப்போது எட்டாயிரம், பிறகு மூவாயிரத்து எழுநூற்றைம்பது, பின்னர் எண்ணுறு வாக்குல பாராளுமன்றம் போனவர்கள் எல்லாம் அரசியல் செய்யப் போய், இதை பார்த்துப் போட்டு புலியும் மொத்தமாக போட்டு 21 எம்பி சீட் எடுத்து எல்லாரையும் கலைத்துக் கொண்டிருக்கிறான்.

கேள்வி : ஈ.பி.டி.பி.யினருக்கும் உங்கள் கட்சியருக்குமான தொடர்புகள் எவ்வாறு இருக்கின்றன? யாழ்ப்பாணத்தில் அவர்களது முகாம்களை அப்புறப்படுத்த கோருகின்றீர்களே. இதனால் என்ன பயனை எதிர்பார்க்கிறீர்கள்? இது புலிகளுக்கு ஆயுதங்களுடன் நடமாட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விடுமே? ஈ.பி.டி.பி.யினர் கிளிநொச்சி பகுதியில் முகாம் அமைத்தால் எதிர்கால உங்கள் அரசியல் வேலைத்திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்று அஞ்சுகின்றீர்களா?

பதில் : யாழ்ப்பாணத்தில் ஆமி கேம்புல எல்லாம் இவர்கள்தானே நிற்கின்றனர். சட்ட விரோத செயல் ஆயிரம் நடக்கிறது. செக் பொயின்ட்ல நின்று கொண்டு புறோக்கர் தமிழில் கதைப்பது. நாலு வார்த்தை கதைக்கும் போது அதற்குள்ளால இரண்டு யாழ்ப்பாண தமிழ் வார்த்தை வந்துவிடும். மக்கள் என்ன முட்டாள்களா? இவர்கள் அவைகளில் நின்று கொண்டு செய்யிற அழிச்சாட்டியம் பற்றி மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். இதை அவர்களால் வெளியே கூற முடியாது. இன்னொரு பிரபாகரன் தோன்றிவிடக்கூடாது என்பதால்தான் அம்முகாம்களை மூடச்சொன்னேன்.
பத்திரிகைக்கு சுவிப் டிக்கட் காறனும், இன்ஷூரன்ஸ் காறனும் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கிறான், றேடியோவில் இரண்டு மணிநேரம் விளம்பரம் பிறகென்ன முழுப் பூசணிக்காயை சோற்றுல மறைச்சி அரசியல் செய்றது.

கேள்வி : அண்மையில் ஜனாதிபதி கூட்டிய சந்திப்பின் போது உங்களுக்கும் திரு.டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சச்சரவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறதே.

பதில் : ஜனாதிபதியே டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து 'என்ன டக்ளஸ் சங்கரி ஐயா உங்கள் பேரைச் சொன்னால் பயப்படுகின்றார்'என கேட்டார்.அப்போது அவர் சிரித்தார். எனக்கு நீதியான அரசியல்தான் செய்யத் தெரியும். கடத்தி, கொள்ளையிட்டெல்லாம் பழக்கமில்லை. என்னிடம் அதற்கு ஆட்களுமில்லை. நான் தனிக்கட்டை.

கேள்வி : பிரபாகரன் பிடிபட்டுஅல்லது சரணடைந்து மன்னிப்பு கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். பிரபாகரன் கொல்லப்படவேண்டுமா.அவர் பகிரங்கமன்னிப்பு கேட்டு மீண்டும் ஆயுதமற்ற ஒரு உரிமை போராட்டத்துக்கு வந்தால் நீங்கள் ஆதரவழிப்பீர்களா?

பதில் : ஐயா வா என அழைத்து யாருடைய காலிலாவது விழுந்து வடக்குக்கு முதலமைச்சர் பதவி வாங்கி கொடுப்பேன்.

05-04-2009 XIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com