Thursday, April 16, 2009

ஜனாதிபதியின் இன்றைய வன்னி விஜயம வரலாற்றில் பதிவாகியுள்ளது.



புலிகளின் நிர்வாகக் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டார்.
நேற்றுக் காலை 10 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சிக்குச் சென்ற ஜனாதிபதியை இராணுவத்தின் 57 ஆம், 58 ஆம் படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகள் வரவேற்றனர்.

அங்கு படையினருக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, படையினருடன் புத்தாண்டு பாற்சோறு உண்டு மகிழ்ந்தார். அதன் பின்னர், ஒவ்வொரு படையணியும் மனிதாபிமான நடவடிக்கையில் இதுவரை கடந்து வந்த பயணம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

“உலகில் ஆயுத ரீதியாக முதலாவது கெரில்லா இயக்கமாக விளங்கிய புலிகள் இயக்கத்திடமிருந்து படையினர் கைப்பற்றிய ஆயுதங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, படையினர் கைப்பற்றிய பிரதேசங்களையும், புலிகளால் அழிக்கப்பட்ட பிரதேசங்களையும் பார்வையிட்டார்” என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. அதேநேரம், புலிகளின் தலைமையகம், சமாதானச் செயலகமாக செயற்பட்ட இடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கிளிநொச்சியில் நிலவரங்களை நேரில் தெரிந்து கொண்ட ஜனாதிபதி, வன்னிப் படைத் தலைமையகத்திற்கும் சென்று அதிகாரிகளையும், வீரர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். தலைமையகத்தின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அவரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர், விசேட அதிரடிப்படைத் தளபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com