Friday, April 10, 2009

நிழலின் நிஐம். --வம்சிகன்--



தீர்வு ஒன்றுக்காய்
யுத்தம் தொடங்கிற்று.
எல்லாத் தீர்வையும்
யுத்தம் தின்றிற்று.

யுத்தச் சாத்தானின்
உயிர்ப்பு
இலாபத்தில் மட்டுமே
இயங்குவது.

எந்த
யுத்த முனையும்
புதிய
ஆயுதங்களின்
விளம்பரப் பலகையே.

சிங்கம் புலிச் சண்டையில்
இரண்டிற்கும்
நகத்தையும் பல்லையும்
வளராதபடி
சீவிவிட்டு
இலாபம் பார்த்தனர்.

பின்னர்
நகமும் பல்லும்
விற்று
இலாபம் பார்த்தனர்.

சிங்கமும் புலியும்
ஒன்றையொன்று
பார்க்கவே
மறந்தன.

முதற்பால்
வார்த்தவராலேயே
கடைசி ஆணி
அடிக்கப்படுகிறது.

உயிர்க்காதபடி
சாகட்டும்
யுத்தம்.

இனி
இலங்கை
மானும் மயிலும்
முயலும் அணிலும்
வாழும் காடு
உள்ளதாய் ஒரு
புதிய நாடு.



2009-04-08 VII



No comments:

Post a Comment