வேர்ப் பலா.
நான்கு மதங்களின்
பகிர்தலின்
திரட்சியில் உயர்ந்த
சிவனொளிபாத மலையாய்
மனதைக் கொடு.
தென் கண்டியிலிருந்து
தேசத்தின்
மத்தியிலிருந்து
வடக்குக் கிழக்காய்
ஓடி
வாழ வைத்து
திருமலையில்
தரிப்புக் குறியிட்டு
வங்கக் கடலோடு சிரிக்கும்
மகாவலி கங்கையாய்
சிந்திக்கக் கற்றுக்கொடு.
அநுராதபுரத்தில்
பிறந்து
அருவி ஆறாக
நடந்து சென்று
பாக்கு நீரிணையில்
நனைகின்ற ஆறு போல்
மாற்றங்களோடு
இலங்கையராக
ஏழாவது
அறிவு கொடு.
நதிகளே நனைய
ஆசைப்பட்டுக்
கடலில் குளிக்கின்றன..
உலருகின்ற மனிதனை
ஏதோ ஒன்றில்
ஊறிப்போகச்
சொல்லிக் கொடு..
சிகிரியாக் கற்குன்றும்
ஓவியமுமாய்
உணர்ச்சியையும் உண்மையையும்
பிரித்தறியும்
திடமான
கலையுணர்வைக் கொடு..
பராக்கிரமபாகு சமுத்திரத்தின்
அளவினதாய்க்
கரை கொண்ட
நிதானம் கொடு..
யாரோ
உச்சிக்குப் போவதற்காய்ச்
சறுக்கிச் சறுக்கிக்
கூனிய
தேயிலைக் கூடைகளுக்கு
நிமிரக் கற்றுக் கொடு..
மீன் பாடும் வாவியாய்
இசையோடு
இசைவு கொடு..
வெருகல் ஆறுபோல்
வலி மறந்து
செழிப்பதற்கு
வரம்புகள்
சொல்லிக் கொடு..
இலகுவாக
உதிரும்
யாழ்ப்பாணத்துச்
செம்மண்ணைத்
திரட்சிப்படுத்தப்
புதிதாய் ஒரு
திரவம் கொடு..
மேகத்திற்குக்
கனக்குமென்று
மழையைப் பூமியில்
இறக்கி வைக்கும்
வன்னிக் காட்டுக்குள்
முட்டி நிற்கும்
கண்ணீர்
வழிந்தோட
எதேனும்
வழியோடு வா..
புத்தாண்டே
புதிய
ஒளியோடு வா.
-வம்சிகன்-
April -12- 2009 VII
0 comments :
Post a Comment