Sunday, April 19, 2009

மை லோர்ட். வீ டோன்ட் வோன்ட் நஞ்சாங்கட்டை. - முறாவோடை அச்சிமுகம்மது -



பரந்த ஈழம்
பட்டு மெத்தை கனவுகள்
பாராண்ட தமிழன்
பச்சைபசேல் நிலங்கள்
பகுத்தறிவு மக்கள்
பர பரப்பு வாழ்க்கை
பட்ட இலாபம் ஏதுமில்லை.

படுக்க ஒரு இடம்
படிக்க ஒரு பள்ளி
பருக ஒரு கவளம் கஞ்சி
பழக கொஞ்சம் மனிதர்
பாவம் மக்கள்
பாரிடம் வேண்டுகின்றனர்.

பகட்டு
பட்டுத் தாம்பரங்கள்
பல கோசம் செய்து இன்னும்
பந்தா தான் தூக்குகின்றனர்.

பட்டது போதும் ஐயா
பவ்யமாய் பேசி
பறிப்பதை விட்டு விட்டு
பல கோடி சேர்த்தும்
பரிதவிக்கும் வன்னிக்கு
பாலுமில்லை
பருப்புமில்லை.

வேஷத்தை மாற்றி
வேடர்களை மாற்றி
வேள்விகளை நடாத்தி
வெந்த புண்களுக்கு
வழி சொல்ல வாய்களில்லை.

வருவது வரட்டும்
வன்னிக்கு
வணங்கா மண் போகிறது.

வன்னி மகன்
வழி மேல் விழிவைத்து
வணங்கா மண்ணுக்காக – அங்கே
வருகையை எதிர்பார்த்து
பாவம்
செக்குக்கும் சிவலிங்கத்துக்கும்
வித்தியாசம் தெரியாத
வந்தான்
வரத்தான் எல்லாம்
வணங்கா மண்ணை
வழி அனுப்ப
வஞ்சகமில்லாமல் வாரி
வழங்கி விட்டான்.

இப்போ
கப்சிப்.

வணங்கா மண்ணுக்கு
சங்கூதி விட்டார்கள்
அகம்பொற்றி நானூறு,
புறம் பொற்றி நானூறு,
பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை,
பதினன்கீழ் கணக்கு நூல்கள்,
தொன்னூற்றி ஆறு
சிற்றிலக்கியங்கள் என
பார் புகழ
வாழ்ந்த தமிழன் -இன்று
பணம் சேர்த்து
மகிழ்கின்றான்.

ஈரடி ஏழுசீர் தந்த
ஐயன் வள்ளுவனுக்கும்
தெரியாத பா இது.

அறத்துப் பா
பொருட் பா
காமத்துப் பாக்களுக்கும்
அப்பா(ல்)
இது ஒரு புதுப்பா
காசு கொடுப் பா.

அங்கு
சனம் சாகுதப் பா என
தப்பு தப்பா.

இங்கு
நினைவுகள் எல்லாமே
அமிர்தம்தான்- ஆனால்
நிகழ்வுகளோ ஆலகாலமாய்.

தமிழன்
தாய்த் தமிழை நேசித்த தமிழன்
தறிகெட்டவர்க்கெல்லாம்
தலையணை மந்திரம் பாடுகின்றான்
தானைத் தலைவர்
தலையெடுத்து வருவாராம்.

தம்புராக்கள்
தவில் வாசிக்கின்றன
கிணற்றுத் தவளையது
கிலி பிடித்து இருக்கிறது.

கிளி நொச்சியிலேயே
கிளி ஜோசியம் பலிக்கவில்லை.

அம்பலான் பொக்கனையிலா
அம்புட்டும்
பலித்துவிடும்.

இப்போ
எம்ஜிஆர் எல்லாம் போய்
நம்பியார் வந்துள்ளார்.

விஜய் நம்பியார்
வந்துள்ளார்.


தலைக்கு வில்லன்கள்
இந்தியாவில் மட்டுமில்லை.
இப்போ
அய்யன்னா நாவன்னாவிலும்.

இனி
திருப்பொற்சுண்ணம்
பாடவேண்டியதுதான்.

முத்துநற்றாமம் பூமாலை தூக்கி

முளைக்குடந் தூபற்றீபம் வைம்மின்

சுக்தியும் சோமியும் பார்மகளு

நாமகளோடு பல்லாண்டிசைமின்

சித்தியுங் கௌரியும் பார்பதியுங்

கங்கையும் வந்துகவரிகொண்மி

னத்தனையாறனம் மானைப்பாடி

யாடற்பொற சுண்ணமிடித்துநாமே.


பல பேருக்கு
நஞ்சாங்கட்டை வைத்த
தலைக்கும்
பிடில் வாசித்த
புலம் பெயர்
நீரோக்களுக்கும்
இப்போதுதான்
நிழலின் அருமை
புரிகிறது.

மண் அணைகள் கட்டி
வாழ்ந்த தலை இன்று
அகிம்சை பிச்சை கேட்கின்றார்.

அயலானுக்கு சாவை வார்த்து- இது
ஏசி ரூமில் வாழ்ந்த தலை
இப்போ
புதுக்குடியிருப்பிலிருந்தும்
கிளம்பி விட்டன
பூதங்கள்.

தலையின் பொன்குஞ்சு- உலக
இணையத்தளங்களில்
குட்டைபாவாடை
வட்டத்தொப்பி
கழுத்தில்
முத்துப்பரல்கள்
விரலில்
வைர மோதிரமென
மகாலட்சுமியாட்டம்
பாவம்..
வன்னி
தரித்திர லட்சுமிகள்.
சாவதற்கு இவள் பிள்ளை.

வாழ்வதற்கு தலை பிள்ளை- இது
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளலார் பரம்பரை.

ஆடு பறிபோய் விட்டது என
மாட்டை விற்று
வழக்கை முடித்த கதையாக
ஒற்றைத் தலைக்காக
ஒண்ணரை லட்சம்
மனிதப் புனிதர்கள்.

வன்னித்தாய் சுவாசிப்பதற்காக
ஏங்கிக் கொண்டிருக்கின்றாள்.
அகண்ட தமிழீழம்
வறண்ட தமிழீழமாகி -இன்று
வன்னி மக்கள்
சோகத்தை மட்டுமே
அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.

தமிழா
பிளீஸ்..
வாய்க்கரிசி
வீ டோன்ட் வோன்ட்
பசிக்கரிசி
வீ மஸ்ட் வோன்ட்.

நாங்க
மூச்சுவிட்டு நாளாச்சு.
எம் புள்ள
சிரித்துப் பேசி பல
பொழுதாச்சு.

கௌரி விரதம் 21 டேய்ஸ்
கந்த சஷ்டி விரதம் 6 டேய்ஸ்
திருவம்பாவை விரதம் 10 டேய்ஸ்
கேட்டது கிடைக்குமென்ற சிவனே
இது
என்ன விரதமப்பு
அடாவடி விரதம்.

நெற்றிக்கண் திறந்து
முருகனை படைத்து
அசுரனை கொன்ற விதியே
எங்கே அய்யா
உனது மதி?

எங்களுக்கு
சாகும் வரம் போதுமய்யா.
கொஞ்ச காலம்
சாகா வரம்
தாருமய்யா.

குங்குமப் பொட்டுபளபளக்க
காஞ்சிபுரம் சரசரக்க
தலை நிறைய
மல்லிகைப் பூ
சரம் தொடுத்து
அற்லீஸ் கெண்டைக்கு
அலுமினிய கொலுசுகட்டி
புத்தகப் பை தோள் வலிக்க
என் குஞ்சு
நடந்து வர
ஓடி வர
பாடி வர நான்.....நாம்...எம் சந்ததி.....

18-04-2009

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com