புதுமாத்தளன் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியயேற பிரபாகரன் இணக்கம். பண்டிகைக் காலங்களில் யுத்த நிறுத்தம்.
வன்னியில் சிக்கியுள்ள மக்களை அவர்களது சுயவிருப்பிற்கேற்ப அவர்கள் பாதுகாப்பான பிரதேசம் என கருதும் பிரதேசங்களுக்குச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என கடந்த பல மாதங்களாக உலகநாடுகள் மற்றும் ஐ.நா உட்பட பல மனித உரிமைச் ஸ்தாபனங்கள் புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்திருந்தனர்.
ஆனால் இவை எவற்றிற்கும் செவிமடுக்காத புலித்தலைமை கடந்த வாரம் வன்னியில் தமது கடைசி தளமான புதுக்குடியிருப்பையும், புலிகளின் இராணுவ பலத்தின் தாங்கு தூண்களாக நின்ற முன்னணி தளபதிகளையும் இழந்து யுத்த சூனிய பிரதேசத்தினுள் தப்பிச் சென்று மக்களோடு மக்களாக வாழ்ந்து வருவதுடன், அங்குள்ள மக்களை தமது உடல்கவசங்களாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் சில பத்திரிகைத் தகவல்களின் படி பிரபாகரன் மேற்குலக நாடொன்றின் தலைமையில் அல்லது மேற்பார்வையில் இடம்பெறவிருக்கின்ற மனிதாபிமான மக்கள் மீட்பொன்றின்போது அங்குள்ள மக்களை விடுவிக்க இணங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
தொடர்ச்சியாக பல முறை தாம் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு தாயாராக இருப்பதாக புலிகள் அறிவித்திருந்த போதிலும், அரசு புலிகளுடனான கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் அவர்களின் வேண்டுதலை நிராகரித்து வந்திருந்ததுடன்; யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு செல்லுமாறு அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க முனைந்த சக்திகளுக்கும் தமது தரப்பு நியாயத்தையும், இலங்கையில் புலிகளியக்கம் முற்றாக இராணுவ ரீதியாக செயலிழக்கச் செய்யப்பட வேண்டிய தேவையையும் விளக்கியிருந்தது.
அதே நேரத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் வேண்டுதலை நிராகரித்து வன்னியில் உள்ள மக்களை தொடர்ந்தும் தமது கவசங்களாக வைத்திருந்த புலிகள் இன்று இவ்வாறானதொரு நிலைப்பாட்டுக்குள் வந்திருக்கின்றார்கள் என்றால்: அதற்கான காரணம் இன்றைய காலத்தின் நிர்ப்பந்தமா? அன்றில் புலிகளின் மேலுமோர் கபட நாடகம் இங்கு அரங்கேற இருக்கின்றதா? என்பது கேள்வி.
எது எவ்வாயினும், இன்று பிரபாகரன் எந்த நாட்டுடன் மேற்படி இணக்கத்திற்கு வந்துள்ளார், இவர்களின் வேலைத்திட்டங்களின் பின்நோக்கம் என்ன? என்ற கேள்வியுடன் இனிமேல் தன்னால் தொடர்ந்தும் போராட முடியாத நிலையில் தமது போராளிகளை இவ்வாறானதொரு நாடொன்றின் கண்காணிப்பில் சிறிது காலம் வைத்திருந்து மீண்டும் ஒருமுறை தனது பாசிச போரை முன்னெடுக்க முனையப்போகின்றாரா என்பதுபற்றி அவதானமாக இருக்கவேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவத்தளபதியை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் இரண்டு வாரகால யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு செல்லுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கியதாகவும், யுத்த நிறுத்தம் என்பது அரசினால் முடிவு செய்யப்படவேண்டிய விடயம் என்பதும் அதற்கான அதிகாரங்கள் தன்னிடம் இல்லை என இராணுவத்தளபதி தெரிவித்திருந்தாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு 48 மணிநேர யுத்த நிறுத்தம் ஒன்று பிரகடணப்படுத்தப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment