உலக நாடுகளும், ஐ.நா.சபையும் கொடுக்கும் அழுத்தத்தையே மதிக்காத அரசாக இருக்கிறது இலங்கை அரசு. கருணாநிதி.
இரண்டு நாள்கள் மட்டுமே போர் நிறுத்தம் செய்துள்ள இலங்கை அரசு, முழுமையான போர் நிறுத்தம் செய்தால்தான் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
மத்திய அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
போர்நிறுத்தம்:கிள்ளிக் கொடுக்கும் பண்டத்துக்கும் அள்ளிக் கொடுக்கும் பண்டத்துக்கும் உள்ள வேறுபாட்டை நான் உணருகிறேன். முழுமையான போர் நிறுத்தம் செய்தால்தான் என்ன முழுகிப் போய்விடும்?
ஆதாயம் தேடிட... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டப் பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்குக்கூட எதிர்க்கட்சிகளை அனுமதிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்குத் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்பதை தமிழக மக்களும் இலங்கை தமிழர்களும் அறிவார்கள். உலக நாடுகளும், ஐ.நா.சபையும் கொடுக்கும் அழுத்தத்தையே மதிக்காத அரசாக இருக்கிறது இலங்கை அரசு.
பிரதமர் பதவி: சோனியா காந்தி 2004-ம் ஆண்டில் பிரதமர் பதவி தனக்குத் தேவையில்லை என்று கூறியதைவிட ஜெயலலிதா பிரதமர் பதவி தேவையில்லை என்று கூறியது எவ்வளவு பெரிய தியாகம்? திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இதில் பிரதமர் பதவியா?
அவதூறு வழக்கு: இலங்கைத் தமிழர்களுக்காக அரசு சார்பில் வசூலிக்கப்பட்ட நிவாரண நிதியை கருணாநிதி அவருடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டாரோ என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று ஜெயலலிதா கூறியிருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன் என்று கூறியிருந்தேன். அதற்கு மக்கள் சொல்வதாகத்தான் அவர் கூறியதாகப் பதில் அளித்தார். எனவேதான் இப்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றச்சாட்டினைக் கூறும்போது ஆதாரத்தோடு கூறவேண்டும். சொல்லுவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment