Tuesday, April 7, 2009

கூட்டமைப்பு எம்.பீக்கள் பலர் அரசுக்கு பூரண ஆதரவு - அமைச்சர் ராஜித


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தோடு இணைந்திராவிட்டாலும் அக்கட்சியின் பலர் அரசாங்கத்துக்குப் பூரண ஆதரவை வழங்கி வருவதாக பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

புலிகளோடு மட்டுமன்றி மனிதாபிமான யுத்தத்தை நிறுத்தக் கோரும் சர்வதேச அழுத்தங்கள் எனும் யுத்தத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்கொள்ள நேர்ந்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ‘ரன்பிம’ காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவி த்ததாவது :- மாறி மாறி வந்த பல அரசாங்கங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்தன. ஆண் ஒருவரைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர வேறு எதையும் செய்யும் அதிகாரம் தமக்குண்டு என தம்பட்டமடித்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவினாலும் பிரபாகரனின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க என எவராலும் எதுவும் செய்ய முடியாத பிரச்சினைக்குத் துணிவுடன் தீர்வுகண்டவர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

சமஷ்டி முறை தீர்வைத் தருவேன் என்று துணிந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் குண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப் பார்த்தவர் பிரபாகரன். சகல தலைவர்களையும் பயன்படுத்தி அவர் தம்மைப் பலப்படுத்திக்கொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே துணிந்து யுத்தத்தின் மூலம் புலிகளைத் தோற்கடித்துள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புலிகளிடம் அகப்பட்டிருந்த பிரதேசங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சூசை போன்ற புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் இப்போது மக்களுடன் மக்களாகவே சாதாரண உடைகளுடன் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com