சுபம், முற்றிற்று, இனி நல்லதை நினைப்போம். - யஹியா வாஸித் -
ஒரு வாறாக மகின்த தன் பிடிவாதத்தை நிறைவேற்றி விட்டார். தமிழ்நாட்டின் வெட்கெக்கேடு கருணாநிதியும் 'தலைவர் பிடிபட்டால் அவரை மிக கௌரவமாக நடாத்த வேண்டும்'என்ற ஒரு மெசேஜ்ஜையும் உலகுக்கு சொல்லிவிட்டார். ஆம் ஏதோ உள்ளுக்குள் கசாமுசாக்கள் நடந்து கொண்டு இருப்பது நன்றாகவே புரிகிறது. இங்கே உண்ணாவிரதங்கள் தொடை நடுங்க நடப்பதும் ஆயிரம் செய்திகளை சொல்லாமல் சொல்லுகின்றன.
வலிபடைத்து முறம் எடுத்து புலி அடித்த தமிழினம்
கிலி பிடித்த நிலை படைத்து வெல வெலத்து வாழ்வதோ
மகள் இறக்க முலை அறுக்க முடிவெடுத்த தமிழினம்
புகழ் இறக்க மொழிஇறக்க வெலிநகைக்க வாழ்வதோ.
என்ற போர்வையில் புலம் பெயர்நாடுகளில் நடக்கும் வாய்வீச்சுக்களை பார்க்கும் போது காசியண்ணாவின் பழைய ஞாபகங்கள் வந்து டேய் தமிழா, டேய்தமிழா மீண்டும் ஏமாந்திடாதேடா என ஈரக்கொலையை பிசைகிறது.
ஆனால் மகின்த ரொம்ப சாணக்கியத்தனமாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கின்றார். லிபியா போய் 500 மில்லியன் யு.எஸ்.டொலர் பிளஸ் ஒரு லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பு என திரும்பியுள்ளார். அது போதாதென்று நேற்று கிளநொச்சிக்கும் போய் கிரிபத் சமைத்து சாப்பிட்டுள்ளார். அவர் காய்களை நன்றாகவே நகர்த்திக் கொண்டிருக்கின்றார். ஆனால் அடுத்த சில வருடங்களில் சிறிலங்கா பாரிய வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சுமைகளை தாங்க வேண்டியுள்ளது என்பதையும் மறந்து விடக் கூடாது.
இராணுவச்சிப்பாய்களெல்லாம் வீதிக்கு வரப்போகின்றார்கள். இறந்த இராணுச்சிப்பாய்களின் குடும்பத்தினர் அரசிடம் வேலைக்குஅலையப்போகின்றனர். இத்துடன் போராட்டத்தில் சகலவற்றையும் இழந்த தமிழ் சமூகம் தொழில்களை தொடங்கவும், வருமானங்களை பெருக்கவும் அரசை நெருக்கப் போகின்றனர். இதில் மகின்த நன்றாகவே காய்களை நகர்த்துவார் என்றாலும் தமிழ் சமூகமும் அவருடன் சேர்ந்து அல்லது தூரத்தில் நின்றாவது எமது எதிர்கால சந்ததி பற்றி சிந்திக்க வேண்டும்.
13வது சரத்து, மானில சுயாட்சி, திம்புவில் ஏற்றுக்கொண்டது போல் என அரசியல் தெரிந்தவர்கள் அதை மகின்தவுடன் சேர்ந்து செய்யட்டும். ஆனால் இன்று எம்மவர்களின் அடுத்த துறைகள் சம்பந்தமாகவும் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இன்று சிங்களவர்கள் மத்தியிலும் ,தமிழ் பேசுவோர் மத்தியிலும் சௌகரியமாக இருந்து அரசியல் பேசுவோர்தான் எல்லாமே பேசிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கிளிநொச்சியில் மகனை புலிகளிடம் பறிகொடுத்துவிட்டு முகட்டை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த சிங்களத்திக்கும், வன்னியில் உறவினரை தொலைத்துவிட்டு விசர்பிடித்து போய் உள்ள அந்த தமிழச்சிக்கும் எதிர்காலம் ரொம்ப சூனியமாகத்தான் தெரிகிறது.
அவர்களின் வருங்காலம் கேள்விக் குறியாகிவிடக்கூடாது. அவர்களின் உளநோய்களுக்கு ஒத்தடங்கள் கொடுக்கப்படவேண்டும். இதில் புலம் பெயர் மக்களின் பங்களிப்புத்தான் மிக மிக முக்கியம். அவர்களின் கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்குகள், எதிர்காலத்தை சிறப்பாக வளம்படுத்தக் கூடிய திட்டங்கள் என்பன அவர்களை அடைய ஆவன செய்யப்பட வேண்டும்.
போன மாதம் கிரிக்கட் பயிற்சிக்கென யாழ் சென்ற அரவிந்த சில்வாவிடம்; ஒரு சின்னஞ்சிறுவன் உங்கள் வலது காலைவிட இடது கால் தடிப்பாக இருக்கிறது. கிரிக்கட் பெட்டைதாங்கி நிற்பதாலா என கேட்டுள்ளான். எவ்வளவு புத்திக் கூர்மை, எவ்வளவு நுண்ணறிவு. இவ்வாறான இளம் சமுதாயம் கிடப்பில் போடப்பட்டுவிடக் கூடாது.
30 வருடமாக அரசியல் பேசுவோர் பேசிக் கொண்டிருக்கட்டும். நிறைய வேலைவாய்ப்புகளையும், தொழில் முயற்சிகளையும் பற்றியும் அனைவரும் சிந்திக்க வேண்டும். இது வரை புலிகளுக்கு ஆயுதம் வாங்கவும் சிங்களவனைக் கொல்லவும் என திரட்டப்பட்ட பணங்களில் அந்த ஏழை மக்களுக்கு எதுவுமே செய்யப்படவில்லை என்பதை வன்னிக் காட்சிகள் காண்பிக்கின்றன. எந்த இடத்திலுமே ஒரு நிறுவனமோ,ஒரு தொழில்சாலையோ,ஒரு தொழில் பயிற்சி நிறுவனமோ காட்சிக்கு வரவில்லை. ஆயுதம், ஆயுதம், தலைவரின் பங்களா, பங்கர்கள் எனத் தெரிகின்றதே தவிர ஒரு பன்னாடையையும் காணவில்லை. இது வரை அங்கு என்ன நடந்தது. திரட்டப்பட்ட பணத்தில் ஒரு மச்சி வீடு. இல்லை ஒரு குச்சி வீடையும் காணவில்லை.
இனியாவது வீரம் பேசும் மொத்த தமிழனும் அந்த மக்களுக்காக சில தியாகங்களை செய்ய வேண்டும். அவர்களுக்குரிய உணவு, உடை, மருத்துவ வசதிகளை அரசும், வெளிநாடுகளும் பார்த்துக் கொள்ளும். வீரம் பேசுவோரும் பணமறவிடுவோரும் அவர்களது எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும். கையிழந்து, காலிழந்து, உறவுகளை இழந்து, நிம்மதியை இழந்து தவிக்கும் அந்த தமிழ் சிங்கள எதிர்கால சமூகம் அனைத்தையும் மறந்து வீறுநடை போடக் கூடிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இதில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள்தான் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஒரு பக்கம் சிங்கள அப்பாவிகள், மறுபக்கம் தமிழ் பாமரர்கள் என அனைவரையும் சாக்காட்டி விட்டு நாம் இங்கு மூக்கு முட்ட உண்டு கொண்டு இன்னும் எத்தனை பேரை சாக்காட்டலாம் என கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த பாவம் நாம் ஏழு ஜன்மம் அல்ல. எழுபது ஜன்மம் எடுத்தாலும் தீராது.
எல்லாவற்றையும் கொஞ்ச காலம் மறந்து அந்த அப்பாவி சனங்களுக்கு என்ன வகையில் கல்வியில், விளையாட்டில், தொழில் முயற்சியில் உதவலாம் என திட்டங்களை வகுத்து நம்மால் ஆன ஒரு சிறு சிறு உதவிகளை செய்ய வேண்டும். புலம் பெயர்நாடுகளில் எவ்வளவு திறமையுள்ளவர்கள் எம்மத்தியில் இருக்கின்றனர். அனைவரும் தங்களின் சாணக்கியத்தில் ஒரு துளியளவாவது இவர்களுக்கு செலவிட வேண்டும். இவர்களெல்லாம் சேர்ந்தோ தனித்தனியாகவோ அவர்களது கவலைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்னும் இரண்டோ அல்லது ஐந்தோ வருடத்தில் உலகமே பார்த்து திகைக்கும் வண்ணம் அந்த மக்களை இந்த புலம் பெயர் சமூகம் பட்டை தீட்ட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பாhத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களை ஆற வைத்து அமரவைத்து உட்கார வைத்து மனிதனாக்க அரசுக்கு குறைந்தது பத்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம். நிச்சயமாக எடுக்கும். அதற்கிடையில் முக்கால் வாசிப்பேர் பைத்தியமாகி விடுவார்கள்.
இனி அடுத்த அடுத்த மாதங்களில் ஊர்பார்க்க, உறவினர்கள் பார்க்க என புலம் பெயர் மக்கள் புறப்படத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். அங்கு போய் தமது வித்துவ திறமைகளை பேசாமல் நவின விளையாட்டு சாதனங்கள், நவின கல்வி உபகரணங்கள், நவீன தொழிற் பயிற்சி இயந்திரங்கள், புத்தகங்கள் என எடுத்துச் சென்று அவர்களை திணறடிக்க வேண்டும். அவர்களும் நம்மைப் போல் சுதந்திரமாக பேச, கதைக்க அனுமதிக்க வேண்டும். நவீன உலகில் அவனை உலகின் முதல் பிரஜையாக மாற்றிக் காட்ட திட சங்கற்பம் பூண வேண்டும். நாம் இங்கு நிம்மதியாக உறங்க. உண்ண தன்னையே இழந்த அந்த அப்பாவிகளுக்கு குட்டி குட்டி கோயில்கள் கட்டி கும்பிட்டு விட்டு வர வேண்டும்.
அண்மையில் கேகல்லவில் உள்ள அரநாயக்கா என்ற சிங்கள கிராமத்துக்கு சென்றிருந்தேன்.
ஒரு 72 வயது சிங்கள தாய் ஒரு வீட்டின் முன் கிராம்பை ஒரு பாயில் பரவி துளாவிக் கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு கண்ணும் தெரியாது. அவருக்கு அருகில் இரண்டு, மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. சிறிது தூரத்தில் ஒரு பெண் விறகு தறித்துக் கொண்டிருந்தார். அந்த தாயின் இரண்டு மகன்கள், மற்றும் மகளின் கணவன் ஆகியோர் யுத்தத்தில் இறந்து விட்டனர். இன்னும் ஒரு மகன் இருகால்களுமின்றி வீட்டுக்குள் இருந்தார். இந்த தாய்க்கோ அவரது மகளுக்கோ யாழ்ப்பாணம் என்றால் எந்த திசை என்றும் தெரியாது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்டியை சேர்ந்த ஒரு தமிழ் வர்த்தகர் வந்து அவரிடம் உள்ள கிராம்பை பணம் கொடுத்து வாங்கிச் சென்றார். குழந்தைகள் இரண்டும் மூக்கைசிந்திக் கொண்டு 'தாத்தே கமணக்கியா'(அப்பா பிரயாணம் போயுள்ளார்) என்று சொல்லிக் கொண்டிருந்தன.
இப்படி சிறிலங்கா முழுதும் நேரடியாக சகலதையும் இழந்த ஒரு லட்சம், மறைமுகமாக உறவு
களை இழந்த ஒரு ஐந்து லட்சம், இவர்களை அண்டி வாழ்ந்த உறவுகள் ஒரு பத்து லட்சம் என ஒரு மனிதப் பேரவலத்தை அரசு சந்திக்க வேண்டியுள்ளது. இவர்களது எண்ணங்களை மாற்றி, சிந்தனைகளை திருப்பி, பாதைகளை வகுத்து அவர்களை புத்தி ஜீவிகளாகவும், எதிர்கால சிறிலங்காவின் சிந்தனைச்சிப்பிகளாகவும் மாற்ற சிந்திக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல. மொத்த பாவங்களுக்கும் பிள்ளையார் சுளிகள் போட்ட. போட்டுக் கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
17-4-2009
0 comments :
Post a Comment