Monday, April 27, 2009

விடுதலைப் புலிகளுக்குப் பொதுமன்னிப்பு: அரசாங்கம் நிராகரிப்பு

விடுதலைப் புலிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களுடன் பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்லவேண்டுமென இணைத்தலைமை நாடுகளின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கா தலைமையில் கூடிய இணைத்தலைமை நாடுகள் இலங்கை விடயம் பற்றிக் கலந்துரையாடியதுடன், விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றபோதும், யுத்த சூனியப் பிரதேசத்தில் எஞ்சியிருக்கும் மக்கள் முற்றாக வெளியேற்றப்படும்வரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படாது என தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

“இது பிரபாகரனின் இறுதி நேரம். அவரும், வருடைய போராளிகளும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையவேண்டும். மோதல்கள் பெருமளவில் முடிந்துவிட்டது. யுத்த சூனியப் பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்” என குலுகல்ல கூறினார்.

விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் ஒருபோதும் அரசியல் பேச்சுவார்த்தைக்குச் செல்லாது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் அழுத்தம் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாக்கிப் பேசியுள்ளார்.

இந்த சர்வதேச நாடுகள் தமது வேலைகளைப் பார்க்கவேண்டும், அரசாங்கம் ஒருபோதும் இராணுவ நடவடிக்கைகளை கைவிடாது எனக் கூறியிருந்தார்.

நன்றி ஐஎன்எல் லங்கா

No comments:

Post a Comment