Friday, April 17, 2009

அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது: இந்தியா கண்டிப்பு.


இலங்கை ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. கோல்கத்தாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து கடும் கவலை தெரிவித்தார்.

ராணுவத்தின் தொடர் தாக்குதலால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். எனவே அப்பாவி மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதைத் தடுக்க இலங்கை அதிபர் ராஜபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடைபெறும் சண்டையில் அப்பாவி மக்கள் இடையில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. பொது மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரணாப் கேட்டுக்கொண்டார்.
அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே இந்தியா பல முறை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக நமது கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்கெனவே இலங்கை அரசிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். சண்டை நடக்கும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் பத்திரமாக வெளியேற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார் அவர்.

தொடர்ந்து ராணுவத் தாக்குதல் நடைபெற்றால் அப்பாவிகள் அதிக அளவில் உயிரிழப்பது தவிர்க்க முடியாது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்தியஸ்தம் இல்லை: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரணாப் கூறினார். மத்தியஸ்தம் செய்ய நாம் தயாராக இல்லை. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம் என்றார் அவர்.
நன்றி தினமணி

No comments:

Post a Comment