சமூகச் சீர்கேடுகளே! நாட்டினது பேரவலம். -புரட்சிதாசன் அகமட்-
மானிட வாழ்க்கை முறையானது ஏனைய உயிரினங்களிலிருந்தும் வேறுபடுகின்றது. இறைவன் ஒரு வித்தியாசமான படைப்பாகவும் புனிதமான நோக்கத்திற்காகவும் மனித உயிர்களை சிருஸ்டித்திருக்கிறான் என்றால் மிகையாகாது. ஆனால் இந்த மானிடர்கள் தாங்கள் விரும்புகின்றதன் பிரகாரம் தாங்களது வாழ்க்கை வசதிகளை தங்களுக்கேற்ற விதத்தில் வடிவமைத்து தான்தோன்றித் தனமான
முறையில் வாழ்கின்ற கேவலமான நிலையையே இன்று நமது சமூதாயத்தில் காணமுடிகிறது. இறைவன் மனிதர்களுக்கென்று சில விசேட சக்திகளையும் அம்சங்களையும் வழங்கியிருக்கிறான்.
அதாவது கதைத்தல், சிரித்தல், சிந்தித்தல், பகுத்தறிதல் போன்றவைகளாகும். இந்த விசேட குணங்களை மிகவும் பிரயோசனமான முறையிலிலும் ஆரோக்கியமான முறையிலும் பயன்படுத்த தவறுவதன் விளைவாகவே சமூகச் சீர்கேடுகள் அவனால் தோற்றுவிக்கப்படுகிறது.
இன்றைய உலகில் யாரும் சரியான வழிகளிலும் நேரான முறையிலும் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முற்படுவதில்லை. காரணம் அவர்களுக்கென்ற சரியான வழிகாட்டியான மதங்களை பின்பற்றாததேயாகும். நான்கு மதங்களும் நல்வழியையே சொல்கிறது எனினும் அதன் பிரகாரம் யாரும் நடக்க முற்பட முனைவது முயற்கொம்பாகும்.
மனிதர்களின் குணங்கள் அவர்கள் நடத்தைகள் எல்லாம் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது அவ்வாறான வித்தியாசம் காணப்படினும் எந்த ஒரு மனிதனும் தனக்கென்ற சிலகொள்கைகளையும் நல்ல தன்மைகளையும் கடைப்பிடிப்பானாயின் நிச்சயம் அவன் என்றும் வழி தவறமாட்டான் என்பது திண்ணம்.
மனித குணம் சிறந்ந முறையில் செயல்பட மதங்களின் போதனையை சிறப்பாக பின்பற்ற வேண்டும். நல்ல சிந்தனையிலும் சமூகத்திற்கு உதவுகின்ற சிறந்த மனபான்மையையும் தன்னகத்தே கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு சமூகத்தில் பலதரப்பட்ட இனங்கள் அவர்களுக்குள் தங்களுக்கென்று சரி கண்ட தீர்மானத்தின் பிரகாரமும் மதங்களின் அனுசரனையுடனும் வாழலாம். ஆனால் அவர்களால் அடுத்த இனத்திற்கு அநியாயம் தொந்தரவு இம்சை கஸ்டம் விளைவிப்பது அனுமதிக்க முடியாததொன்றாகும்.
ஒவ்வொறு மனிதனுக்கும் தான் வாழ்வதற்குரிய வாழ்வாதார உரிமையுண்டு இந்த உரிமையை ஏனைய இனத்தாலோ மதத்தாலோ அல்லது சமூகத்தாலோ தடைப்படுத்தவும் முடியாது இடையூறுபடுத்தவும் கூடாது.
இவ்வாறான உரிமையினை தவறான வழியில் பயன்படுத்த விளைவதன் பிரகாரமே சமூகச் சீர்கேடுகள் தலை தூக்குகின்றன. சமூகங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அப்பிரதேச வாழ் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் மட்டும் விட்டுக் கொடுப்புடனும் சகிப்புத் தன்மையுடனும் புரிந்துணர்வுடனும் தாராள மனப்பான்மையுடனும் வாழப்பழகுதல் வேண்டும்.
இந்நான்கு விடயங்களும் ஒரு மனிதனிடம் காணப்படுமாயின் அம்மனிதன் அச் சமூகத்தில் ஒரு தலைசிறந்த மானிடனாக வாழ்வான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
பலதரப்பட்ட இனங்கள் ஒன்றுடனொன்று இணைந்து வாழுகின்றபோது சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புண்டு. இவ்வாறான சீர்கேடுகள் தலை தூக்குகின்ற போது அவ்வினங்களின் கலாச்சார நடவடிக்கைகள் வேறுபடும் நிலையினை ஏற்படுத்த முனைதல் வேண்டும்.
ஒவ்வொறு இனமும் தங்களது கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏனைய இனங்கள் இதனால் பாதிப்புறுமா? அல்லது இம்சைபடுவார்களா? துன்பம்நேருமா? பிரிவினையை ஏற்படுத்துமா? என்றெல்லாம் சிந்திக்க முற்பட வேண்டும் ஏனென்றால் அவ்வாறான உயரிய சிந்தனை நிச்சயம் அச்சமூகத்தை ஒரு சிறந்த பாதுகாவலனாக்கும் என்பது கண்கூடு.
நாம் தினமும் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளுக்கும் இம்மைசைகளுக்கும் முகம் கொடுத்தவண்ணமிருக்கிறோம். இதற்கெல்லாம் பிரதான காரணம் நன்கு திட்டமிடப்படாத ஒரு சமூதாய அமைப்பே எனலாம்.
மானிட ஜீவன்களுக்கு சிறப்பான விசேடமான தன்மைகளை வழங்கியும் அதனை சிறப்பாக செயற்படுத்த முற்படாமை ஒரு வருந்தத்தக்க செயலாகும் நான்கு இனங்கள் வாழ்கின்ற இந்த இலங்கையில் இரண்டு மொழிகளே பேசப்படுகிறது ஆனால் இதற்குள் எத்தனை குழப்பங்கள் பிரிவினைகள் ஒவ்வாத தன்மைகள் காலாச்சார சீரழிவுகள் போன்றன பெரும் ஆதிக்கத்தினை செலுத்துகின்றது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
நாகரீகமான இந்த உலகத்தில் அநாகரீகமான செயல்களும் அருவருக்கத்தக்க செயற்பாடுகளும் நிறைந்து காணப்படுகிறது. எந்தவொரு மனிதனும் இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழவே முடியாது.
ஆகக் கூடியது நூறுவருடங்கள் ஒரு மனிதன் வாழ்வான் என்று வைத்துக் கொண்டோமானால் அதற்குள் அவன் எத்தனை குழப்பங்களையும் பிரச்சினைகளையும் தீங்குகளையும் ஏற்படுத்துவான் என்பதனை நாம் நன்கு கவனிக்க வேண்டும் விசேடமாக சிருஸ்டிக்கப்பட்ட இந்த மானிட ஜென்மங்கள் திருப்தியற்ற நிலையில் பிறந்து திருத்தியற்ற நிலையிலேயே மரிக்கின்றது இந்த உலகில் கடைசி வரையிலும் யாராவது பூரண திருப்பதியுடன் வாழ்ந்து மரித்தார் என்று யாராவது கூறுவாறாயின் அது நிச்சயம் பொய்யாகும். அது நிதர்சனமும் அன்று.
மனிதன் தனது வாழ்கையை சீரான வழியில் நடாத்தி செல்வதற்கு போதுமென்ற திருப்பதியிருக்க வேண்டும் மேலும் வெட்கப் படுதல் தாழ்வு மனப்பான்மை திருப்தியற்ற நிலை போன்றவைகள் முற்றாக தன்னகத்திலிருந்து களையப்படல் வேண்டும்.
ஒரு மனிதன் எந்நிலையிலும் இன்னொரு மனிதனுக்கு தீமைசெய்ய முற்படவோ முயலவோ கூடாது என்றும் உதவிசெய்யும் மனப்பான்மை இல்லாவிட்டாலும் உபத்திரமாவது செய்யும் எண்ணம் கூட வரவே கூடாது.
சமூதாயத்தில் கெட்ட பழக்கங்களும் விழுமியங்களும் அறவே அல்லாது இருக்க அச்சமுதாய அமைப்பு முறை ஒரு கட்டுக் கோப்பானதாக அமைய வேண்டும்.
சமூதாய விழிப்புணர்ச்சி அறிவுரைகள் கல்வி வசதிகள் கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றை தெளிவான முறையில் நமது சமூதாயத்திற்கு வெளிக்கொணர செய்தல் வேண்டும். சமூகச் சீர்கேடுகள் உருவாவதற்கு பிரதான காரணங்கள் மனிதன் தன்னைப்பற்றி தான் அறியாததும் நன்கு விளங்காததுமேயாகும்.
இன்றைய சமூதாய அமைப்பில் அத்தியாவசியமில்லாத வெறுப்பூட்டக் கூடிய கெட்ட பழக்கங்களான புகைத்தல் மதுப்பழக்கம் விபச்சாரம் மற்றும் களியாட்ட விழாக்கள் மலிந்து காணப்படுகின்றது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு பொதுவான அமைப்பு அல்லது மத சார்பான இயக்கங்கள் முன்வருதல் வேண்டும்.
இதனுடைய தீமைகளால் அச் சமூகம் எவ்வாறு சீர்கெடுகிறது என்பதனையெல்லாம் நாம் கருத்திலெடுக்க வேண்டும் இவ்வாறான தீயபழக்க வழக்கங்களை தொடர்ந்து செய்யாமலிருக்க விழிப்பூட்டல் மேலும் சீர்திருத்தம் கொண்டுவரப்படல் வேண்டும்.
உதாரணமாக இன்றைய மழையக மக்களின் வாழ்கை நிலையினை நாம் கூர்ந்து அவதானிப்போமாயின் மிகவும் சீர்கேடான நிலையில் அவர்களது அன்றாட வாழ்கையை நடாத்தி வருவதை அவதானிக்க முடியும்.
இதற்கு பிரதான காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள் மேலும் இவ்வாறான தீங்கான காரியங்களில் இருந்து விடுபடுவதற்குரிய விழிப்பூட்டல் நடவடிகைகளை மேற்கொள்ள முன்வராததேயாகும் கூலிக்கு மாரடிக்கும் இந்த கொத்தடிமை சமூதாயம் மிகவும் கெட்ட நடவடிக்கைகளுக்காக தங்களை பழக்கப்படுத்திக்கொண்டதை மட்டுமல்லாது தானும் கெட்டு தனது பின் சந்த்தியினரையும் அதாள பாதாளத்திற்கு இட்டுச் செல்வதற்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இன்று எங்கு பார்த்தாலும் மழையகம் முழுவதிலும் மதுக்கலாச்சாரம் தாண்டவமாடுகிறது. பகல் வேளைகளில் தனது உடலை மிகவும் வருத்தி தொழில்புரிந்துவிட்டு இரவு நேரங்களிலும் நிம்மதியான ஒய்வினைப் பெறாமல் மதுக் கடையினில் தனது ஊதியத்தை ஊனமாக்கி நாசம் செய்கின்றனர் இதனால் தனது குடும்பமும் தானும் பசி பட்டினியை எதிர் நோக்குவதுடன் ஈற்றில் நோய்க்கும் அடிமையாகி நிர்க்கதியாகி இறக்கும் நிலையையே இது தோற்றுவிக்கும்.
எனவே இந்நிலைகளில் இருந்து மீள்வதற்கும் இதனை அறவே இல்லாது ஒழிக்கவே சமூக விழிப்பூட்டல் குழுக்களை ஏற்படுத்த முயலவேண்டும். ஒரு குற்றம் நடைபெறுவதற்கு இரண்டு கெட்ட பழக்கங்கள் உசாத்துணையாக இருக்கின்றது புகைத்தல், மதுப்பழக்கம் இரண்டுமே மிகவும் கெட்ட பழக்கங்களாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறான கேவலமான பழக்கவழக்கங்கள் தொடர் சமூகச் சீர்கெடுகள் விழைவித்திருப்பது மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
மட்டுமன்றி சமூகச் சீர்திருத்த செலவுகளையும் அதிகரிக்க வாய்பேற்படுத்துகிறது. தற்போது இலங்கை அரசாங்கத்தினால் அமுல் படுத்தப்படுகின்ற புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு எதிர்ப்பு பிரச்சாரங்கள் தண்டனைச் சட்டங்கள் மிகவும் வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் நிமித்தம் இச் செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்கியுள்ளது மட்டுமன்றி கலாச்சார சமூக சீர்கேடுகளையும் அதிகரிகத்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை கவனிப்பதென்கென்று அரசினால் மாதாந்தம் பலகோடி பணங்களை வீணாகச் செலவு செய்கிறது ஈடாக சிறந்த நன்மை கிடைத்ததாக எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை இது ஒரு வேதனைக்கும் கவலைக்குமுரிய விடயமாகும்.
ஒரு கெட்ட நடவடிக்கைக்கு சோரம் போகின்ற எந்த வழி முறைகளும் அல்லது அந்த வழிமுறைகளால் வேறு வழிகளில் வருமானம் பெறலாம் என்று கருதினாலும் அது பெரும் தவறாகும். இவ்வாறான தவறு சமூகத்தையும் நாட்டையும் பொருளாதார ரீதியிலும் பெரும்பான்மையாகவும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஒரு சமூகம் சீரழிவிருக்கும்போது அச்சீரழிவுக்குரிய காரணங்கள் திறம்பட இனம் காணப்பட்டு அதனை சீர்செய்ய தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் அப்போதுதான் அச்சமூதாயமும் நாடும் விழிப்புணர்வு பெற்று வெற்றி பெறுவதோடு அபிவிருத்தியும் காணும். VIII
0 comments :
Post a Comment