புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தென்றல் வானொலிக்கு அளித்த பேட்டி.
அடையமுடியாத ஒரு இலக்குக்காக தங்களது பெருமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காக தொடர்ந்து போராடி அம்மக்களை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதை புலிகள் தவிர்க்க வேண்டும்.. - புளொட் தலைவர் சித்தார்த்தன்
கேள்வி: புதுக்குடியிருப்பு பிரதேசம் முற்றாக கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கிழக்கு மோதலில் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் பலர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: புதுக்குடியிருப்பு கைப்பற்றப்பட்டவுடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பாதுகாப்பு பகுதி தவிர்ந்த ஏறக்குறைய முற்றிலுமே படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பாதுகாப்பு பகுதியில் பல்லாயிரம் மக்கள் எமது கணிப்பில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் மக்கள் வரையில் சிக்கியுள்ளனர். இனியாவது அம்மக்களை வெளியில் வர அனுமதித்து அம்மக்கள் சாவுகள் காயங்கள் அழிவுகளை எதிர்நோக்குவதை தவிhப்பதற்கு புலிகள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தொடர்ந்தும் அடையமுடியாத ஒரு இலக்குக்காக தங்களது பெருமையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காக தொடர்ந்து போராடி அம்மக்களை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதை புலிகள் தவிர்க்க வேண்டும். எங்களது வேண்டுகோள் எல்லாம் உடனடியாக அம்மக்களை விடுவித்து இடம்பெயர்ந்து செல்வதற்கு என்ன விலை கொடுத்தாவது அவர்கள் செய்ய வேண்டுமென்பதே எமது வேண்டுகோள்.
கேள்வி: நேற்று முன்தினம் வன்னி சென்றுள்ளீர்கள், வவுனியா வைத்தியசாலை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளீர்கள். மனிதக் கேடயங்களாக புலிகளால் தடுத்து வைத்து செல்லவிடாமல் தாக்குதல் மேற்கொண்டபோது காயப்பட்டவர்களே அங்கு வந்திருந்தனர் வன்னியிலிருந்து வந்துள்ள மக்களின் அவலங்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்: நாம் முதற்தடவையல்ல இம்முறை அங்கு சென்றபோது ஆயிரத்துக்கும் அதிகமான காயமடைந்த நோயாளிகளும் அவர்களைப் பார்க்க 2ஆயிரம் மக்களும் வைத்தியசாலையில் இருந்தார்கள். அந்த வைத்தியசாலையில் ஆகக் கூடியது 350 அல்லது 400 நோயாளிகளை பராமரிக்கும் அளவு வசதியே உள்ளது. இருந்தாலும் அங்குள்ள வைத்திய அதிகாரிகள் சிற்று}ழியர்கள் தாதியர் இவ்வளவு கஸ்டங்களுக்கு மத்தியில், தம்மால் இயன்றளவு முயன்று அவர்களை பராமரிப்பதிலும் ஆறுதல் கூறுவதிலும் தமது முழு கவனத்தையும் செலுத்தியிருப்பதை பாராட்ட வேண்டும்.
எமது அமைப்பைப் பொறுத்தமட்டில் நாம் தொடர்ந்து அங்கு நோயாளிகளுக்கு எங்களால் இயன்றளவுக்கு சிறிதளவு உதவிகளை வழங்கி வருகிறோம். பலர் ஒரு காலை இழந்துள்ளனர். சிலர் இருகால்களையும் இழந்துள்ளனர். சிலர் கைகளை இழந்துள்ளனர். அவர்களைப் பார்க்கிற போது புலிகள் முன்னெடுத்து வந்த யுத்தம் ஒரு நியாயமானதாக தெரியவில்லை. ஆடைய முடியாத ஒரு இலக்கு. 87ம்ஆண்டே இதனை மற்றைய இயக்கங்கள் நன்றாக உணர்ந்ததன் காரணத்தினால் தான் அந்த இலக்கை நாம் மாற்றினோம். தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு சரியான அதிகாரப் பரவலுடன் சமமாக வாழவேண்டுமென்ற அந்த இலக்கை கொண்டு வந்ததற்கு காரணமே அடைய முடியாத ஒரு இலக்கை நோக்கி போராடி மக்களை அழிவுப்பாதையில் கொண்டுசெல்லக் கூடாது என்பதற்காகவே.
போராட்டமென்றால் நிச்சயம் அழிவுவரும். ஆனால் அழிவுதான் போராட்டமென்று நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க முடியாது. அந்தமக்களை பார்ப்பதற்கு என்னுடன் ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதுவிட்டார். எமக்கும் இவர்களைப் பார்த்துப் பார்த்து மனதில் காயமிருந்தாலும் கதறி அழமுடியாவிட்டாலும் இந்த வகையிலான இழப்பை தவிர்த்துக் கொள்ள புலிகள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே எமது கோரிக்கை.
கேள்வி: முப்பது வருடங்களாக போராடி புலிகள் தமிழ் மக்களுக்காக எதனைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்?
பதில்: முப்பது வருடங்களாக போராடி அழிவைத்தான் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்று நான் கூறமுடியும். இந்தமக்களுக்காக இம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து 87ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிறகுகூட தொடர்ந்தும் ஒரு தீர்வு 13வது திருத்தத்திலே அது முழுமையான ஒரு தீர்வு இல்லாவிட்டாலும் அது ஒரு தீர்வின் ஆரம்பமாக நாம் கருதினாலும் கூட அதனை பிரபாகரன் கூட டில்லியில் ஏற்றுக்கொண்டு வந்திருந்தார். அதை ஒரு ஆரம்பமாகக் கருதி இதைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்காமல் முப்பது வருடமாக போரை முன்னெடுத்ததன் மூலம் உண்மையில் தமிழ்மக்களுக்கு ஒரு அழிவைத்தான் கொண்டுவந்து விட்டிருக்கின்றார். தமிழாகளுடைய வீரம், பண்டைக்காலத்து வீரம், ராஜராஜசோழனின் வீரம் இன்று காணுகிறோம் என்று கூறலாம். ஆனால் இதுவெல்லாம் அந்தப் போர்ப் பூமியிலிருந்து அந்நியப்பட்டு மிகமிக து}ரத்தில் இருக்கின்ற அந்த மக்களுடைய கற்பனைகள். ஆனால் அங்கு யுத்தபூமியில் சிக்கியுள்ளவர்களின் நிலையோ வேறு.
நேயர் கேள்வி: தமிழ் மக்களின் கஸ்டத்தைப் பார்த்து பிரபாகரன் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவாரா?
பதில்: நிச்சயமாக பிரபாகரன் பேச்சுவார்த்தை மேடைக்கு வரமாட்டார். கடந்த காலங்களிலே அவருக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் எதையுமே தமிழ்பேசும் மக்களுடைய நன்மைக்காக அவர் பாவித்ததில்லை. அது இந்திய இலங்கை ஒப்பந்தமாக இருந்தாலென்ன? அதற்குப் பிறகு வந்த எந்தவொரு பேச்சுக்களாக இருந்தாலென்ன அவர் தன்னுடைய இயக்கத்தின் வளர்ச்சிக்கே அந்தப் பேச்சைப் பாவித்துள்ளாரேயொழிய, அவர் பேச வருகின்ற போது எப்போது எல்லாம் புலிகள் அமைப்பு பலவீனமாக இருந்ததோ அந்த நேரத்திலே தான் சமாதான உடன்படிக்கைகள் அல்லது யுத்த நிறுத்தங்களையெல்லாம் பிரகடனப்படுத்தி பேசுவதாகக் கூறி அந்தப் பேச்சுவார்த்தைக் காலங்களிலெல்லாம் அவர்களுடைய இயக்கத்தை வளர்ப்பதற்கான அல்லது பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தாரேயொழிய வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுடைய நன்மையைக் கருதி அவர்களுக்கு ஒரு தீர்வு எடுக்கவேண்டும் என்ற நோக்கில் அவர் இவற்றுக்கெல்லாம் இணங்கியதில்லை.
அடைய முடியாத இலக்கை, இவற்றை மனதிற் கொண்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்று நாமெல்லாம் கூறியபோது நாமெல்லாம் துரோகிகள் என்று கூறி மற்றைய இயக்கங்களை அல்லது அரசியல் கட்சிகளை சேர்ந்த அண்ணன் அமிர்தலிங்கம் போன்றவர்களையெல்லாம் கொன்றொழித்து இன்று தமிழ்மக்களை நட்டாற்றிலே விட்டிருந்தாலும் பரவாயில்லை, அழித்து ஒழித்திருக்கின்ற நிலைமைய நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலைமையிலும் கூட தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதனை அவர்கள் நிச்சயமாக நிறுத்தி இனியாவது அங்கிருக்கும் மக்களைப் பாதுகாக்க அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவே எமது கோரிக்கை.
நேயர் கேள்வி: கிழக்கை பிடித்துள்ளோம் என்று அரசாங்கம் கூறுகிறது. கிழக்கின் தற்போதைய நிலையென்ன?
கிழக்கைப் பொறுத்தமட்டில் இன்று முழுமையான அமைதி திரும்பவில்லை. நிச்சயமாக வேண்டத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. எஸ்.பி ஜமால்டீன் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார். அவர் மன்னாரில் பொலீஸ் அதிகாரியாக இருந்த காலங்களில் அங்கு தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னாலான முழு முயற்சிகளையும் எடுத்துள்ளதை கண்டுள்ளேன். அவர் போன்ற பல உத்தியோகத்தர்கள், பல தமிழர்கள், இளைஞர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கு யார் பொறுப்பு என்பதை எவருமே கூறுவது மிகவும் கஸ்டமான விடயம். புலிகளும் செய்யலாம், உள் முரண்பாடுகளால் நடைபெறலாம், இன்னார் தான் செய்தார் என்று கூற முடியாத நிலையிலுள்ளது. யுத்த காலங்களில் இவ்வாறான பிரச்சினை இருக்கும். கிழக்கை இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும் முற்று முழுதான அமைதி ஜனநாயகம் பன்முகத்தன்மை எல்லாம் வடகிழக்கில் உருவாக்கப்பட்டு உண்மையான ஜனநாயகம் மலர்கிறபோது மக்கள் பிரச்சினையின்றி கொலைகள் தவிர்ந்து வாழும் நிலை உருவாகுமென்று நம்புகிறேன்.
நேயர் கேள்வி: மிக விரைவில் ஒரு பாராளுமன்ற தேர்தல் ஒன்று எதிர்பார்க்கப்படுகின்றது. சித்தார்த்தன் இதன்போது என்ன நிலைப்பாட்டை எடுப்பார்? அரசுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் கருணா அவர்கள் மேற்கொண்ட மாதிரி செய்யப் போகிறாரா அல்லது ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி சுகு, புளொட் கூட்டமைப்பில் போட்டியிட்டு தனித்துவத்தைப் பேணுவாரா?
பதில்: எங்களைப் பொறுத்தமட்டில் கடந்த மாகாணசபைத் தேர்தலில் திருமலையில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மட்டக்களப்பில் மூன்று கட்சிகளுமாக கிழக்கு மாகாணசபைத் தமிழர் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற பெயரில் ரீ.டி.என்.ஏ என்ற பெயரில் போட்டியிட்டோம். அக்கட்சி இன்று ஜனநாயக தமிழர் தேசிய கூட்டணி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு அதற்கென குத்துவிளக்குச் சின்னம் பெற்று அதுவொரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக திரு.ஆனந்தசங்கரி அவர்கள் அதனுடைய செயலாளராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே நிச்சயமாக நாம் எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் தான் (டீ.ரி.என்ஏ) போட்டியிடுவோம். அரசுடன் சேர்ந்து போட்டியிடுவது என்ற கதையிருந்தாலும் எம்மைப் பொறுத்தமட்டில் அப்படியான எந்தவொரு நிலைப்பாடும் எண்ணப்பாடும் இன்று எம்மிடமில்லை. நிச்சயமாக இந்த டீ.ரி.என்.ஏயில் தனித்துவமாகவே போட்டியிடுவோம். இன்று நாம் மூன்று கட்சிகள் இருந்தாலும் வேறெந்த கட்சியோ எங்களது நோக்கங்களை கொள்கைகளை எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய கட்சிகள் கூட்டிற்குள் இணைவதற்கு வரவேற்கிறோம். இணைத்துக் கொண்டு பரந்தளவில் கூட்டமைப்பை அமைத்துப் போட்டியிடுவோம்.
நேயர் கேள்வி: இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமென நம்புகிறீர்களா?
பதில்: இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்ற ஒரு தீர்வை முன்வைத்து அதை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று முன்நடத்தப் படுவதென்பது நடக்க முடியாத காரியமென்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அந்தப் பெரும்பான்மை நிச்சயமாக இந்த அரசிடமில்லை. அது மட்டுமன்றி இன்றிருக்கும் சூழலில் சர்வகட்சிக்குழு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
நான் நம்புகிறேன் இலங்கையில் இரு பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐ.தே.கட்சியும் மனம் ஒருமித்து தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வினை வைக்க வேண்டுமென்று விரும்பினாலேயொழிய இந்நாட்டில் தமிழ்மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு நிச்சயமாக கிடைக்காது. இவ்விரு கட்சிகளும் என்று தமது மற்றைய எல்லா விடயங்களிலும் பேதங்கள் இருந்தாலும் தமிழ்மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், இப்பிரச்சினையை நீடிக்க விட்டால் இந்நாட்டில் அமைதி கிடைக்காதென்பதை உணர்ந்து இவ்விரு கட்சிகளும் சரியான தீர்வினை என்று முன்வைக்கிறார்களோ அப்போதே தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காணமுடியுமென்பதை தெளிவாக நம்புகிறேன்.
நேயர் கேள்வி: இறுதி யுத்தமென்று அரசு கூறுகிறது. இது சாத்தியப்படுமா?
பதில்: அரசாங்கம் கூறுகிறது இறுதி யுத்தமென்று, இன்று புதுக்குடியிருப்பு கைப்பற்றப்பட்டதுடன், பல மூத்த புலிகளின் தளபதிகள் பலியாகியுள்ளனர். கடந்த காலங்களைப் போலல்லாது ஓரளவுக்கு புலிகளை மிகவும் பலவீனமான நிலைக்கு இந்த அரசு கொண்டு சென்றுள்ளது என்பது உண்மை. ஆனால் தொடர்ந்தும் புலிகள் இயக்கத்தில் இருக்கின்ற அனைவரும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதல்ல கருத்து, அந்த புலியிஸம் அழிக்கப்பட வேண்டும் என்பது தான் எமது நோக்கம். தொடர்ந்தும் அமைதி இந்நாட்டில் இருக்குமா இல்லையா என்ற கேள்வி பலர் மத்தியிலுள்ளது. நான் நம்புகிறேன் நிச்சயம் ஒரு அமைதி உருவாகுமென்று. அதற்கு தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு சரியான தீர்வைக் கண்டு தமிழ்பேசும் மக்களும் இந்நாட்டில் தாங்களும் ஒரு பங்கு என்பதை உணரக்கூடிய விதத்தில் அந்த மக்களை நடத்த வேண்டும். நடத்துகின்ற போது நிச்சயமாக ஒரு அமைதி உருவாகும் என்று தெரிவிப்பதுடன் அது நடக்குமென்றே நான் நம்புகிறேன்.
நேயர் கேள்வி: இடம்பெற்றுவரும் மோதலில் இரு தரப்பினரிடைய ஒரு தரப்பு வெற்றிகளைக் குவிக்கிறது இந்நிலையில் மறு தரப்பால் முன்வைக்கப்படும் தீர்வு அந்த தரப்பை பாதிப்பதாக இருக்கும். சிறுபான்மை தமிழர்களுக்கான தீர்வு பாதகமாக அமைந்தால் அதற்கு எவ்வாறான அழுத்தம் கொடுக்கவுள்ளீர்கள்?
பதில்: இந்த யுத்தமானது அரசைப் பொறுத்தமட்டில் தமிழ்மக்களுக்கு எதிரான ஒரு யுத்தமென்று எடுத்துச் செல்லவில்லை என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதுவொரு புலிகளுக்கு எதிரான யுத்தம். இதை அங்கிருக்கின்ற படையினர் புலிகளின் பகுதியிலிருந்து தப்பிவரும் மக்களை பராமரிக்கின்ற விதம், அவர்களை பாதுகாப்பாக இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு கொண்டு செல்கின்ற விதம் இவற்றை நேரடியாக பார்க்கிறோம். நன்றாகப் பழகுகிறார்கள். இந்த நிலைமைகளை பார்க்கிறபோது நிச்சயமாக அங்கு போர்புரியும் படையினர் நிச்சயம் அது புலிகளுக்கும் படையினருக்குமிடையிலான யுத்தம் என்றுதான் பார்க்கின்றனரே தவிர தமிழ்பேசும் மக்களுக்கெதிரான யுத்தமாக பார்க்கவில்லை. இது மாத்திரம் இப்பிரச்சினைகளை தீர்த்துவிடும் என்று நாம் நம்பவில்லை. புலிகளின் கோரிக்கைகளை எந்த அரசும் நிறைவாற்றாது. தனிஈழம் என்ற இந்தக்கோரிக்கையை.
இன்று ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்துள்ள அல்லது மாற்றுக் கட்சிகளாக இருக்கிற எம் போன்ற கட்சிகளின் கோரிக்கைகளை நிச்சயமாக அரசினால் நிறைவேற்ற முடியும். நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே வடகிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்கள் தாங்களே தங்களுடைய அலுவல்களை பார்க்கக் கூடிய விதத்திலான அதிகாரப் பரவலாக்கலையே. 13வது திருத்தச் சட்டத்தின்மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்த வகையில் சுமுகமான நிலை உருவாகுமென்று நாம் எதிர்பார்க்கலாம்.
கேள்வி: தமிழ் மக்களுக்கு இப்போராட்டம் எதைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இன்று அது பூச்சியமாக தெரிகிறது? இதுபற்றி?
பதில்: பூச்சியமென்பதைப் பார்க்கிலும் இப்போராட்டம் நிச்சயமாக ஆகக் குறைந்தது 13வது திருத்தத்தையாவது எடுத்துக் கொடுத்திருக்கிறது. அங்கு ஒரு சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இப்பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டுமென்ற அழுத்தத்தை எல்லா அரசுகளுக்கும் அது கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த நன்மைகள் எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கின்றபோது நாம் இழந்தது மிகவும் அதிகமே. 87ம் ஆண்டே இந்த 13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு சிறிது சிறிதாக அதைப் பலப்படுத்தியிருக்கலாம் அதைவிடுத்து 87ம் ஆண்டில் இந்திய இராணுவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு பிறகுதான் உண்மையிலேயே மிகப்பெரிய அழிவு நடந்திருக்கிறது.
புலிகளை எடுத்துக் கொண்டால் அன்று அவர்களுடைய 600போராளிகளே இறந்துள்ளனர். இன்று 30ஆயிரம் பேருக்குமேல் உயிரிழந்துள்ளனர். அது மட்டுமல்ல நாட்டைவிட்டு ஓடிய தமிழ்மக்கள் அன்று சொற்பம். இன்று ஏறக்குறைய ஒரு மில்லியனுக்குமேல் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் நாட்டைவிட்டு நிரந்தரமாக ஓடியுள்ளனர். இவ்வளவு அழிவுகளுக்குப் பிறகும் நாம் மீண்டும் இந்த 13வது திருத்தத்திற்கே வந்துள்ளோம். இந்த 13வது திருத்தமே இன்று அமுல்படுத்தப்படப் போகிறது. யதார்த்தம் அதுதான் அதுவே இன்று அமுல்நடத்தப்படப் போகின்றது.
எந்தவொரு தீர்வும் இன்று பாராளுமன்றத்திற்கு செல்லமுடியாது என்பதே யதார்த்தம். ஏனென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. ஆகவே அதைத்தான் அமுல்படுத்த வேண்டிய ஒரு கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. அதைத்தான் நாங்களும் ஏற்றுக்கொண்டு ஒரு தற்காலிக தீர்வாக ஏற்று செயற்படுகிறோம். அதனால் தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டோம்.
நேயர் கேள்வி: இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணசபைகள் தற்போது பிரிக்கப்பட்டுள்ளது தற்போதிருக்கும் நிலையில் அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடென்ன? இதில் முஸ்லிம்களின் நிலையென்ன?
பதில்: வடகிழக்கு இணைப்பானது தற்காலிகமாக இணைக்கப் பட்டது. தமிழ் கட்சிகளைப் பொறுத்தமட்டில் எம்மைப் பொறுத்தமட்டில் நாங்கள் வடகிழக்கு இணைந்தே இருக்க வேண்டுமென்பதில் மிகவும் தீவிரத்தைக் காட்டியவர்கள். அதை ஒரு கோரிக்கையாகத் தொடர்ந்து வைத்து வந்தவர்கள். அந்த தற்காலிக இணைப்பு நிரந்தர இணைப்பாக்கப்பட வேண்டுமென்பதையும் விரும்பியவர்கள், ஆனால் இன்று அது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. அதுவொரு அரசியல் தீர்வாக பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றால்தான் மீண்டும் இணைக்க முடியுமென்பதை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பிரகடனத்தின் மூலம் அதனை இணைத்தது தவறு என்றுதான் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆகவே இதனை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.
ஒன்றை மறந்துவிடக் கூடாது, கிழக்கு மாகாணசபை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கிருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படக் கூடிய விதத்தில் ஒரு சரியான தீர்வு கொண்டுவரப்பட வேண்டும். சர்வகட்சி மாநாடு அல்லது அந்த கட்சிகள் எல்லாம் கூடி ஆராய்ந்து சரியான தீர்வு காணப்படவேண்டும். ஆனால் இன்றும் எங்களது நிலைப்பாடு வடகிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்பதுதான், ஆனால் முஸ்லிம் மக்களுக்கும் ஒரு சரியான தீர்வு வைக்கப்பட வேண்டும். எமது கட்சியைப் பொறுத்தமட்டில் ஆரம்பம் தொடக்கமே 80களின் தொடக்கத்திலேயே நாம் தெளிவாக கூறி வருகிறோம், முஸ்லிம் மக்களுக்கு ஒரு சரியான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும், தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும், அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதை மிகத் தெளிவாக கூறி வருகிறோம்.
ஆகவே அவர்களுடன் கலந்துரையாடி எது வடகிழக்கில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களுக்கு உகந்த தீர்வை, அதனை நிச்சயமாக கொண்டுவர வேண்டும். ஆனால் எமது கட்சியைப் பொறுத்தமட்டில் வடகிழக்கு இணைந்த ஒரு அமைப்புக்குள் தான் ஒரு சரியான தீர்வு வரலாம் என்று நாம் நம்புகின்றோம்.
கேள்வி: புலிகள் யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமெல்லாம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. புலிகளுடைய எதிர்காலம் மற்றும் புலிகளின் பிரமுகர்களாக பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்காலங்கள் எப்படி இருக்கப் போகிறது?
பதில்: இதிலே ரி.என்.ஏ. புலிகள் இவர்களுடைய எதிர்காலம் என்பதைக் காட்டிலும் நான் பார்ப்பது தமிழ் மக்களுடைய எதிர்காலம். ரி.என்.ஏக்கும் புலிகளுக்கும் எதிர்காலம் என்று கூறினால் புலிகளைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய சக்தி முழுதும் இராணுவத்திலேயே இருந்தது. இராணுவ ரீதியாக அவர்கள் தோற்கடிக்கப்படுகின்ற போது அவர்கள் ஒரு பலவீனமாக இயங்குவது அவர்களுக்கு மிகவும் கஸ்டமாக இருக்குமென்று தான் நான் நம்புகிறேன். முற்று முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ ரீதியாக வளர்க்கப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கமாகும்.
ரி.என்.ஏவைப் பொறுத்தமட்டில் ரி.என்.ஏ புலிகளுடைய பினாமியாக, புலிகளால் தெரிவுசெய்யப்பட்ட, புலிகள்தான் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய ஏகப்பிரதிநிதிகள் என்பதை சொல்வதற்காகவே வந்த ஒரு அமைப்பு. இப்போது நிச்சயமாக அறிகிறேன் ரி.என்.ஏயிலிருந்து சிலர் திரு.பசில் ராஜபக்சவுடனும் அரசுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் சிறிது சிறிதாக ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் என்ற அந்தக் கோசத்தைக் குறைத்துக் குறைத்து மற்றவளமாக வந்து திரு.ராஜபக்ச அவர்கள் இந்தப் பிரச்சினையை தீர்;க்கப் போகிறாரென்று சொல்லுகின்ற ஒரு நிலைமை உருவாவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
கேள்வி: அண்மையில் ரீ.என்.ஏயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரான வினோ என்றழைக்கப்படுபவர் அரசாங்கம் வன்னியில் நடத்தும் நலன்புரி நிலையங்கள் தொடர்பில் திருப்தியான கருத்தை தெரிவித்திருந்தார். அதுபோல் வன்னி எம்.பி கிஷோர் அரசாங்கத்தில் சேரப்போகின்றார் என்று இணையத்தளத்தில் செய்திகள் வந்துள்ளதே?
பதில்: ஒப்பீட்டு ரீதியாக அகதி இந்த முகாம்களில் வாழுகின்ற மக்கள் பயமின்றி நிம்மதியாக சில வேளைகளில் டென்டுகளில் தங்குவது கஸ்டம், அதை ஏற்றுக்கொள்கிறேன். அன்று பங்கர்களில் வாழ்ந்த மக்கள் இங்கு இவ்வாறு தங்கியுள்ளனர். எனவே இவர்கள் நிச்சயமாக நல்ல இடங்களுக்கு மாற்றப்பட வேண்டுமென்பது வேறு விடயம். ஆனால் 50ஆயிரம், 60ஆயிரம் மக்கள் ஒரேயடியாக வந்தபோது இந்த வகையான இடங்களிலேயே முதற்கட்டமாக அவர்களைத் தங்கவைக்க வேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்நிலை மாற்றப்பட வேண்டும். அந்த ரீதியில் வினோ அவர்கள் சொன்னது உண்மை. அவர் உண்மையான விசயத்தையே சொல்லியிருக்கின்றார். அவர் புலிகளே ஏகப்பிரதிநிதிகள் என்று இன்னும் கருதியிருந்தால் அதைச் சொல்லியிருக்க மாட்டார்.
நேயர் கேள்வி: முல்லைத்தீவிலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களாகிய நாம் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்லலாமா?
பதில்: நிச்சயமாக இவர்கள் அகதி முகாம்களிலோ இடம்பெயர்ந்த இடங்களிலோ இருக்க முடியாது. இவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு செல்லவேண்டும். இதற்கான முழுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களை முழுமையாக நாம் அரசுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்போம். இருபது வருடங்களாக வெளியில் உள்ளீர்கள். இன்னும் ஒரு குறுகிய காலம் காத்திருந்தீர்களேயானால் நீங்கள் பிறந்த மண்ணுக்கு செல்லக்கூடியதாக இருக்கும்.
நேயர் கேள்வி: புலிகள் அமைத்த கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்..எப், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்தும் எதையும் மக்களுக்குச் செய்யவில்லை. இன்று சித்தார்த்தன் கூறியதுபோல் முக்கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பதாக, அதில் ஈ.பி.ஆர்.எல்.எப் நாபா அணி, ஆனந்தசங்கரி ஆகியோர் உள்ளடங்கியிருப்பதாக, இந்த கூட்டமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?
பதில்: ரி.என்.ஏ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதுவொரு நிச்சயமாக தேர்தலுக்காக புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு. அவர்களுக்கான வேலைத்திட்டம் புலிகள்தான் தமிழ்மக்களுடைய ஏகப்பிரதிநிதிகள் என்று தெரிவிப்பது மாத்திரமே. அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட கூறப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு இருக்கின்ற ஒரே வேலை புலிகள் தமிழ் மக்களுடைய ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுவது. இதைத்தவிர வேறொன்றுமில்லை அங்கு. அதுதான் அவர்களுடைய அடிப்படையான கொள்கை. அவர்களே அதை கூறியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தையாக இருந்தாலென்ன, வேறெந்த விசயமாக இருந்தாலும் புலிகள்தான் முன்னெடுத்துச் செல்வார்கள். இதைத்தவிர அவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எவற்றிலுமே புலிகள் கூறுவதைத் தவிர்த்து எதுவுமே கூறியதில்லை.
அண்மையில் கூட ஜனாதிபதி இன்றைய நிலைமைகள் பற்றி பேச வரும்படி அழைத்தபோது அவர்கள் ஒரு காகிதத்தை எழுதிவிட்டு அங்கு செல்லவில்லை. அது அவர்களது பிரச்சினை. இருந்தாலும் அந்தக் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. இன்று வன்னியில் இருக்கும் குழப்பம் காரணமாக அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் என்ன செய்வது என்ற கட்டளை கிடைக்காத நிலையில் இரண்டிற்கும் இடையாக ஒரு தபாலை எழுதிவிட்டு இருந்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் நான் எப்படிக் கருதுகிறேன் என்றால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற நீங்கள் இன்று தமிழ்மக்கள் இவ்வளவு து}ரம் மிகப்பெரியளவில் அழிவுகளை சந்தித்திருக்கின்ற போது, நீங்கள் கூறுகிறீர்கள் மக்கள் முகாம்களில் கஸ்டப்படுகிறார்கள் என்று, உங்களைப் பார்க்கவிடவில்லை என்று கூறுகிறீர்கள், இவற்றையெல்லாம் ஜனாதிபதியிடம் கூறி, ஜனாதிபதி ஒரு சரியான பதிலை அல்லது ஒரு சரியான நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் இதை நீங்கள் சர்வதேச உலகத்திற்கு எடுத்துச் செல்வீர்களானால் நிச்சயமாக சர்வதேச உலகம் அதை மிக அக்கறையாகப் பார்க்கின்ற நிலைமையை உருவாக்கியிருக்க முடியும்.
அதைவிடுத்து நீங்கள் சொந்த தேவைகளுக்காக, சொந்தக்காரர்களுக்காக ஜனாதிபதி அவர்களையும், பசில் ராஜபக்ச அவர்களையும் சந்தித்து உங்களுடைய வேலைகளை சாதிக்கின்ற நீங்கள், குறைந்தது அப்படியாவது இந்த மக்களுடைய பிரச்சினைகளையும் ஓரளவாவது பார்த்தீர்களேயானால் நிச்சயமாக இந்த மக்களுக்கு ஏதோ செய்கிறீர்கள் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.
எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் கூறவில்லை. நாங்கள் ஏதோ பெரியளவில் சாதித்துவிடப் போகிறோம் என்று, தமிழ் மக்களுக்கு ஈழத்தைக் கொண்டுவந்து விடப்போகின்றோம் என்று. அங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பேசியதைப் பார்த்தீர்களானால், அங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார், இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமானால் நாற்பதாயிரம் சவப்பெட்டிகள் வடக்கிலிருந்து தெற்கிற்கு வருமென்று. இப்படியெல்லாம் நாங்கள் கூறிக் கூட்டுச் சேரவில்லை. நாம் கூறுகிறோம் எங்களால் ஆன அளவு முயற்சிகளை மேற்கொண்டு மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்ய பாடுபடுவோம்.
நாம் தேர்தல்களுக்காக கூட்டுச் சேரவில்லை. தேர்தல் வருவதற்கு நீண்ட காலமிருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களாக இந்த கூட்டு இயங்கி வருகிறது. அண்மையில்தான் மாகாணசபைத் தேர்தலுக்காக நாம் அதனை ஒரு பதிவுசெய்த ஒரு கட்சியாக பங்கேற்று போட்டியிட்டோம். எங்களைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து அம்மக்களுடன் மக்களாக நின்று மூன்று கட்சிகளில் ஏதேனுமொரு கட்சி தொடர்ந்து நின்று எங்களான உதவிகளை செய்து வருகின்றோம்.
நாம் ஒரு கொள்கை உடன்பாட்டிலேதான் சேர்ந்திருக்கிறோமேயொழிய வருங்கால தேர்தலுக்காக ஒரு கூட்டு வைக்கவில்லை. தேர்தல் வரும் போகும். அந்த தேர்தல்களில் நாம் போட்டியிடலாம். அந்த தேர்தல்களில் கடந்த காலங்களைப் போன்று தமிழ் தேசியம்தான் முக்கியமென்று மக்கள் வாக்களிக்கலாம். இதுவொன்றும் எமக்கு பிரச்சினையில்லை. எம்மைப் பொறுத்தமட்டில் நாம் மக்களுடன் நிற்கிறோம். மக்களுக்கு எங்களால் இயலுமானவற்றை செய்து வருகிறோம். இப்பிரச்சினைகளை அரசுக்கு பகிரங்கமாக எடுத்துக் கூறுகிறோம். நேரடியாக சந்தித்து கூறுவதுடன் செய்யக் கூடியதை செய்து கொண்டுதான் இருக்கிறோம். செய்து கொண்டிருப்போம்.
கேள்வி? புலிகளுடைய எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது.. காடுகளில் இருந்து தாக்குதல் நடத்துவார்களா என்ன செய்யப் போகிறார்கள்? பிரபாகரன் எங்கிருக்கிறார்?
பதில்: பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்கு பலர் கூறுகின்றனர் அவர் இன்னும் யுத்த பூமியிலேயே தங்கியிருப்பதாக. சிலர் நம்புகிறார்கள் அவர் பல மாதங்களுக்கு முன்னரே யுத்தபூமியை விட்டு சென்று விட்டார் என்று. அப்படி கூறுபவர்களில் நானும் ஒருவன். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அவர் யுத்தம் புரிவதற்கு அல்லது வாழ்வதற்கு இருக்க வேண்டும் என்று நம்புகின்றார். அவர் இங்கிருந்து போயிருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்பதுதான் எனது தனிப்பட்ட சொந்த உள்ளுணர்வு கூறுகின்றது. புலிகளுடைய எதிர்காலம் எப்படியிருக்குமென்றால் பலர் வேறிடங்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அல்லது இன்று பிடிக்கப்பட்டுள்ள காடுகளுக்குள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. புலி தலைமை இவர்களை வைத்து நடத்துவதற்கு எவ்வளவு சாத்தியமிருக்கிறது அல்லது தொடர்ந்தும் தமிழ் மக்கள் எவ்வளவு து}ரம் இவர்களுக்கு ஆதரவளிப்பார்கள் அல்லது இந்தத் தமிழ்மக்கள் ஆதரவளிக்காத ஒரு தன்மையை வருங்காலங்களில் சிங்கள அரசுகள் செய்யுமா? இதன்மூலம் மக்களை புலிகள்பக்கம் செல்லவிடாது இந்நாட்டில் ஒரு அமைதியை கொண்டு வருவதற்கு, தமிழ்மக்கள் அமைதியாக வாழுகின்ற ஒரு நிலையை உருவாக்குகின்ற பட்சத்தில் புலிகளுடைய தேவைகள் இல்லாமற் போகின்றபோது புலிகள் மக்களுடன் தாமாகவே கலந்து கொள்ளும் நிலை வரும்.
கேள்வி: இன்னும் புலிகளை நம்பும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களுக்கும் தாங்கள் கூற விரும்புவது,
பதில்: ஒரு விசயம், யுத்தபூமியில் வடகிழக்கில் வாழும் பெரும்பான்மை மக்கள் புலிகளை தொடர்ந்து நம்புகின்றார்கள் என்று நான் கருதவில்லை. நிச்சயமாக இருக்கிறார்கள். இவ்வளவு மிகப்பெரிய இயக்கத்திற்கு மக்களுடைய ஆதரவு இல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆனாலும் வடகிழக்கில் வாழுகின்ற மக்கள் சிறிது சிறிதாக புலிகளிடமிருந்து வெளியில் வருகின்றனர். கடந்த காலங்களை அவர்கள் நிச்சயமாக தாம் விட்ட தவறுகளை உணர்கின்றனர். புலிகளுக்கு தாம் கொடுத்த ஆதரவினால் முகம் கொடுத்த அழிவுகளைப் பார்க்கின்றனர். அடையாள முடியாத ஒரு இலக்குக்காக தொடர்ந்தும் புலிகள் தங்களைப் பலியிடுகிறார்கள் பலியிடுவார்கள் என்பதை நம்புகிறார்கள். இதையெல்லாம் நாம் கடந்த காலங்களில் அவர்களுக்கு கூறியபோது அவர்கள் அதை செவிமடுக்கவில்லை. எங்களை துரோகமாக பார்த்தார்கள். இப்போது உண்மைத் தன்மையை அவர்கள் உணர்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதுவேறு இங்குவாழ்ந்து கஸ்டத்தை அனுபவிக்கின்ற மக்கள் வேறு.
வெளிநாட்டில் வாழுகிற புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறுபவர்களைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் இன்று இதுவொரு மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது. இன்று இந்த வணங்காமண் என்று ஒன்று வெளிக்கிடுகின்றது. கிட்டத்தட்ட மூன்று மாதமாக இது வெளிக்கிடுகிறது. ஆனால் இதற்காக சேர்க்கப்படுகின்ற பணம், வணங்காமண் என்கிறார்கள், அரசாங்கத்திடம் உத்தரவு கேட்கிறோம் என்கிறார்கள், இதுவெல்லாம் இம்மக்களைக் குழப்பி இந்தக் காசுகளை அங்கிருக்கக் கூடிய மக்களிடமிருந்து எவ்வளவு து}ரம் வறுகி எடுக்க முடியுமோ அவ்வளவுக்கு வறுகி எடுப்பதற்கான முயற்சிகளாகவே இவற்றை பார்க்கிறேன். புலிகளை ஆதரிக்கின்ற அங்கிருக்கின்ற ஒருவராவது ஈழம் வந்தால்கூட இங்கு வரமாட்டார்கள் என்பதை நான் மிகத் திண்ணமாக நம்புகிறேன். ஆகவே அவர்களுக்கு இதுவெல்லாம் மிகப்பெரிய வியாபாரமாக வந்துவிட்டது இன்று. ஆகவே அவர்கள் மிகப்பெரிய அளவில் புலிகள் அற்றுப் போகின்றபோது போராட்டத்தில் அக்கறை கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்தக் காசுகளுடன் சந்தோசமாக வாழ்வதற்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என்றுதான் நான் நம்புகின்றேன். நன்றி.
XIII
0 comments :
Post a Comment