Saturday, April 11, 2009

தவிக்கும் மக்களுக்குத் தரும் டப்பா (தொலைபேசி) உதவிகளும்.. அதற்குத் தம்பட்டம் அடிக்கும் தலைவர்களும்.. ஐயஹோ..! ஐயஹோ..!!


(அண்மையில் புலம்பெயர்ந்த தேசங்களிலிருந்து வன்னிமக்களை மீட்கப் புறப்பட்ட மாமனிதர்களுக்கும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் பார்வைக்கு..) –கட்டுரை-


இலங்கைத் தமிழர் நிலைகண்டு இவ்வுலகமே கண்கலங்கி, மனம் வெதும்பி, மாற்றான் மனப்பாங்கு எதுவுமின்றி, எதிர்பார்ப்புகள் சிறிதுமின்றி அம்மக்களுக்கு தேவையான சேவைகளையெல்லாம் செய்து கொண்டும், செய்வதற்கு இன்னும் முயற்சித்துக் கொண்டும் இருக்கின்றது. வன்னிப் பகுதிகளிலிருந்து எண்ணிலடங்காத் துன்ப துயரங்களுடன் ஓடோடி வந்து முறிந்த கைகளுடனும், உடைந்த கால்களுடனும், கந்தலாகிப் போன உடலங்களுடனும், இரத்தக் கறைகள் படிந்த ஆடைகளுடனும், அடங்கி ஒடுங்கிப் போன உள்ளங்களுடனும் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் அப்பாவித் தமிழர்களின் நிலைகண்டும் இன்னல்நிலை உணர்ந்தும் சகலரும் உதவி செய்து கொண்டிருக்கின்ற இத்தருணங்களில், நம்மவர் கூட்டமொன்று அண்மையில் ஆகாய விமானமேறி, அழகாக கோட் உடுத்தி, அகங்கார நடைபோட்டு ஆடி அசைந்து வந்து, அல்லலும், அவதியும், உளறலும், குமுறலும் என்று பரிதவித்து தாங்கள் அடுத்து என்னசெய்வதென்று கூடத் தெரியாமல் தவித்திருக்கும் அத்தமிழர்களைப் பார்வையிட்டு, அவர்களுக்கு தொலைபேசி வசதிகளை செய்து கொடுத்தனராம். அதையும் ஊர் முழுக்கவும், உலகம் நகைக்கவும் சொல்லியும் திரிந்தனராம்.

இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், இத்தொலைபேசி வசதியை அவர்கள் செய்யவில்லை நாங்கள் தான் செய்து கொடுத்தோம் என்று உரிமை கோரிக் கொண்டிருக்கிறதாம் இன்னும் சில அரசியல் தலைமைகளும்..
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமல் இருப்பதும், வெட்கப்படக் கூடாதவைக்கு வெட்கப்படுவதும் வெட்கப்படக் கூடிய சங்கதிகளே தான் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காலாகாலமாக துன்ப துயரங்களைத் தவிர சொத்து என்று எதையுமே பெற்றிராது, வறுமையில் வாடி, வதங்கி கொண்டிருக்கும் அம் மக்களுக்கு அதுவும் எம்மக்களுக்கு என்னதேவைகள் இருக்கின்றது என்று பார்த்து பார்த்து செய்து கொடுக்க வேண்டிய இச்சந்தர்ப்பங்களில், சிறு உதவியொன்றை செய்ததும், அதையும் ஊர் முழுவதும் சொல்லித் திரிவதற்கென்றே செய்தும் இருப்பதானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

இத்தனை காலமும் புலிகளுக்குப் பயந்து எங்கே இருந்தார்கள்? என்று கூடத் தெரியாதவர்கள் இப்போது மட்டும் வெளியே வந்து கொண்டு ஒரு டப்பா உதவியைச் செய்து விட்டு தமிழர்கள் மீதான முழு அக்கறையினையும் கொண்டிருப்பவர்கள் நாங்கள் தான் என்று தம்பட்டம் அளித்துக் கொண்டிருப்பது எந்த ஊர் நியாயமோ தெரியவில்லை.
முகாம்களிலுள்ள தமிழர்களுக்கு எத்தனையோ உதவிகள் “வெய்ட்டிங் லிஸ்டில்” பல காலமாக இருந்து கொண்டிருக்க, செய்திருக்கும் ஓர் உதவியை ஊர் முழுக்க கூறித் திரிந்து கொண்டிருப்பதும், அதனை நாங்கள் தான் செய்தோம்… நாங்கள்தான் செய்தோம் என்று பலர் போட்டா போட்டி போட்டுக் கொண்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருப்பதும் அவமானமான நிகழ்வுகளேயன்றோ. இத்தகைய உதவிகள் செய்வது கடமை என்பதற்கும் அப்பால் தர்மங்கள் என்று கூட அறியாமலா? இவர்கள் இந்தக் கத்துக் கத்தித் திரிகின்றனர். இவர்கள் இவ்வாறு செய்த உதவிகளை ஊரெல்லாம் புலம்பித் திரிந்து புகழ் தேட நினைப்பதினால் கிடைக்கின்ற புண்ணியம் கூட பெறுமதியின்றிப் போகின்றதல்லவா..

தன்னலமற்ற தர்மங்கள் பற்றியும், பொய்மையில்லா வாய்மைகள் பற்றியும் உணர்த்துவதற்கு சைவநெறியில் எத்தனையோ சம்பவங்கள் இவர்களுக்குத் தானே சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றன. அரிச்சந்திரன் கதையும், புறாவொன்றிற்காகத் தன் தசையையே கூறுபோட்டுக் கொடுத்த வள்ளலின் கதையும், தன்னுடைய தேரை முல்லைச் செடியொன்றின் செழிப்பிற்காக கொழுகொம்பாக கொடுத்து விட்டு மூட்டு வலிக்க நடந்து சென்ற நல்லவன் கதையும் இன்றும் இவ்வுலகில் உலவிக் கொண்டிருக்க, இத்தமிழ் தலைவர்களால் எப்படித்தான் இவற்றையெல்லாம் மறந்து செய்த உதவிகளை சொல்லித் திரியவும், செய்யாதவைகளை செய்ததாக நாக்கூசாமல் சொல்லித் திரியவும் முடிகின்றதோ என்று சிந்திக்கின்ற போது இவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
இவர்கள் இவ்வுதவிகளைச் செய்வதற்கான வசதி வாய்ப்புகளைப் பெற பயன்பட்டவர்கள் தற்போது இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற அப்பாவித் தமிழர்களேயன்றோ. அத்தமிழர்களின் இருப்பையும், அவர்களின் துன்ப துயரங்களையும், அவர்களின் உயிரிழப்புகளையும் கூறித்தானே இத்தலைவர்களும், இப்புலம்பெயர் தமிழர்கள் பலரும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எந்த மனதை வைத்து மறந்துவிட்டு இவ்வாறு புறந்து தள்ளுகின்றார்களோ தெரியவில்லை.

இப்போதும் கூட அப்பாவித் தமிழர்களைப் பயன்படுத்தி எதையாவது பெற்றுக் கொள்ளத்தான் இவைகளைக் கூடச் செய்கிறார்களே தவிர, இது எங்களது கடமை என்ற உள்உணர்வுடன் செய்யவே இல்லையென்பது இவர்களது பேச்சுக்களினால் திண்ணமாகின்றது. கொடுத்தால் கிடைக்கும் என்று ஞானிகள் சொன்ன வேதவாக்குகளை காற்றிலே விட்டுவிட்டு, கொடுத்து விட்டுச் சொல்லிக் காட்டினால் தான் “வாக்குகள்” நமக்குக் கிடைக்கும் என்னும் நப்பாசைகளில் தான் இவர்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமக்குத் தேவையான புகழையும், வாக்குகளையும், அரசியல் அந்தஸ்த்துக்களையும் பெற்றுக் கொள்ளுவதற்காகவே தர்மவான்கள், சமூகசேவகர்கள் வேடம் போடுகின்ற இவர்கள் ஈற்றில் பலர் முன்னிலையில் கேலிக்குரிய நபர்களாகி, முகம் வெழுக்க வெட்கப்பட்டு ஓடியொழியும் நிலைவரும் என்பதை இவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்ளுவது சாலச் சிறந்ததாகும். இல்லாவிட்டால் தாங்கள் செய்த உதவிகளுக்குப் பதிலாக இழிநிலையினைப் பெற்றுக்கொள்ளவே இவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் என்பதும் உறுதி.

அப்பாவித் தமிழர்களை விற்று அரசியல் செய்ததும், அப்பாவித் தமிழர்களை வைத்து நிதி திரட்டியதும், அப்பாவித் தமிழர்களைக் கொன்று போராட்டம் செய்ததும் என்று அவரவர் பாட்டுக்கு அப்பாவித் தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளையாக பயன்படுத்தியது போதும். தமிழர்களுக்காக தமிழர்களுக்காக என்று இத்தனை நாளும் உங்களுக்காகத் தானே எல்லாவற்றையும் செய்து கொண்டீர்கள். தமிழர் தமிழர் என்று உம்மைத்தானே பார்த்தும் கொண்டீர்கள். நீங்கள் தமிழர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மனிதனாகவாவது இருந்து கொண்டு அப்பாவித் தமிழர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன.

முகாம்களிலே முடங்கிக் கிடக்கின்ற அப்பாவித் தமிழர்கள் எங்களுக்கும் உறவுகளுண்டு, எம்மை ஆதரிக்கவும் தமிழ் சொந்தங்கள் உண்டு, எமது இன்னல்களைக் களைவதற்கு எங்களுக்கும் பல நல்ல உள்ளங்கள் உண்டு என்று உங்கள் உதவிகளை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற போது, நீங்கள் அவ்வுதவிகளை அரசியல் முதலீடாகவே மேற்கொள்வது போல், சொல்லித் திரிவதும், ஆளாளுக்கு உரிமை கோரி சண்டை செய்வதும் அவர்களது உள்ளங்களில் எந்தளவு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஏன் உங்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

முகாம்களில் முடங்கிக் கிடக்கின்ற தமிழர்கள் எம் சமூகத்தவர்கள், அவர்கள் எங்களது கலாச்சாரத்தின் காவலர்கள், அவர்களே எங்களது உறவுகள் அவர்களை ஆதரிக்க வேண்டியதும், அவர்களது வறுமைகளிலிருந்து அவர்களை எழுப்பிவிட வேண்டியதும் நாங்கள்தான். இத்தனை நாள் புலிகள் அவர்களை புண்ணாக்கியது போல், நீங்களும் அவர்களை நோகடிக்க வேண்டுமா? எடுப்பார் கைப்பிள்ளையாக பயன்படுத்தப் பட்டதன் மூலம் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட அத்தமிழர்களின் சுமைகளைப் பாதியாக குறைப்பதிலுள்ள சந்தோஷம் உங்களுக்கு வேறு எதிலாவது கிடைக்க முடியுமா? அந்த ஆத்மதிருப்தி உங்களுக்கு வேறு எச்செயலினாலாவது கிடைக்கும் என்று எண்ணுகிறீர்களா? எமக்காக வாழ்வதையும், எமக்காக செய்பவற்றையும் விட நாம் சார்ந்திருக்கின்ற சமூகத்திற்காகவும், எனக்கென்ற எண்ணமில்லாது மற்றவர்களுக்காகவும் செய்கின்ற சேவைகளே உயரிய தர்மத்தின் வேண்டுதல்கள் என்பதை விளங்கிக் கொள்வீராக!
பஞ்சத்தினையும், பட்டினியையும், அநாவசியமான துர்மரணங்களையும் தினம் தினம் கண்டு நொந்து வெந்து போயிருக்கும் மனித உள்ளங்களுடன், எம் சமூகத்துடன் இரண்டறக் கலந்து சேவை செய்யப் பாருங்கள் அப்போது நீங்கள் தான் செய்தீர்கள் என்று சண்டையிட வேண்டியதுமில்லை, மற்றவர்கள் செய்யவில்லை நாங்கள் தான் செய்தோம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டியதுமில்லை.

தர்ம சிந்தனை இயல்பாகவே குடி கொண்டிருக்கும் அற்புத மனிதர்களின் பார்வை பட்டாலே, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்குள் மகிழ்ச்சிப் பிரவாகம் கொந்தளிக்கும் என்பதை உணர்ந்து கொள்க. ஆதலால் இனிமேலாவது, நீங்கள் செய்கின்ற உதவிகளை அரசியல் முதலீடுகளாக செய்யாது, உளசுத்தியுடனும், தர்ம சிந்தனையுடனும் செய்யுங்கள் அவர்கள் உங்களைக் கைகூப்பி வணங்குவார்கள், கடைசிவரை உங்களை நினைத்திருப்பார்கள், உங்களைத் தலைவர்களாகவே ஆக்கிவைப்பார்கள்.

ஏனெனில் “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம். உய்வில்லை, செய்நன்றி கொன்ற மகற்கு” என்னும் குறளறிந்த தமிழர்கள் அவர்கள். அதுவல்லாமல், நீங்கள் செய்வதும், செய்து விட்டுச் சொல்லித் திரிவதும், செய்யாமலேயே உரிமை கொண்டாடுவதும், மற்றவர்களும் செய்யாதபடி குதர்க்கம் செய்வதும் என்று அரசியல் வேலை செய்தால், அதற்குத் தகுந்தபலனை அம்மக்களின் உள்ளக்குமுறல் மட்டுமல்ல, காலமும் கடவுளும் கூட உங்களுக்கு காட்டித் தரும் என்பது திண்ணமாகும்.

வவுனியாவிலிருந்து.. தமிழ்வேந்தன்
Thanks Athirady

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com