Monday, April 6, 2009

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அச்சுறுத்தல் நிலை- ரவூப்ஹக்கீம்.



இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய கட்சிகளின் அரசியல் பிரசாரம் செய்வதால் ஜனநாயக ரீதியாக அரசியல் செய்வோருக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து காணப்படுவதால் மக்களுக்கு மட்டுமல்ல அரசியல் கட்சிகளுக்கும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் காரணமாக இன்று நாம் சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றிணைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தில் வெற்றியடையும் வகையில் நாம் செயற்பட வேண்டும். இந்தப் போராட்டமானது வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல நாடு முழுவதற்குமே இன்று தேவையாகவுள்ளது.

மேல்மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சின்னத்திலேயே ஜனநாயக மக்கள் முன்னணியும் போட்டியிடுகிறது.

நாளை ஏழாம் திகதி சுமார் 200க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள் பிரதான எதிர்க்கட்சியுடன் இணைந்து சுதந்திரத்துக்கான மேடை என்ற அமைப்பை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளன. நாமும் இதில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

தேர்தல் சட்டங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இன்றைய அரசாங்கம், யுத்த நிலை தொடர்பான உண்மை நிலையினை மக்களுக்கு வெளிப்படுத்தாது மறைத்து வருகிறது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் முடிந்தால் பொதுத் தேர்தல் ஒன்றினை அரசாங்கம் நடத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment