Wednesday, April 29, 2009

இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம்.



இலங்கையில் யுத்த அனர்த்தங்களுள் சிக்குண்டு தவிக்கும் மக்களின் நலன்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இலங்கைவந்துள்ள இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் நேற்று வவுனியா சென்றுள்ளனர். வவுனியா சென்றடைந்த குழுவினரை வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா வரவேற்றார்.

அக்குழவில் இங்கிலாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் பிரான்ஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேர்ணாட் ஹொக்னர் அமைச்சர்களான றிசாட் பதுர்தீன், றோஹித்த அபயகுணவர்த்தன, மஹிபால ஹேரத் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் பாலித ஹோகன்ன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

குழுவினர் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள உலக உணவு நிலையம், கூட்டுறவு சங்கக்கடைகள் என்பவற்றை பார்வையிட்டதுடன் அம்முகாம்களில் உள்ள மக்களுடன் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் பேசி அம்மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டனர். அங்கு வந்திருந்த சர்வதேச அமைச்சர்களுடன் பேசிய இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் மக்கள் தாம் புலிகளின் பிடியில் இருந்தபோது அனுபவித்த துன்ப துயரங்களையும் புலிகளின் பிடியில் இருந்து தப்பிவந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களை அடைந்தபோது தாம் பாராமரிக்கப்பட்டவிதம், தமக்கு அளிக்கப்படுகின்ற உதவிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

அத்துடன் பிரான்ஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வைத்திய நிலையத்திற்கு சென்ற பிரான்ஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தமது வைத்தியப்பிரிவினர் அங்கு பணியாற்றுகின்ற விதத்தைப் பார்வையிட்டதுடன் வைத்தியகுழுவுடன் பேசி அங்குள்ள குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.












No comments:

Post a Comment