போர் இடை நிறுத்தம் அல்லது தணிவை ஏற்படுத்த ஐ.நா. மீண்டும் கோரிக்கை
பொதுமக்கள் தங்கியுள்ள பகுதியில் ஏற்படக்கூடிய இரத்தக் களரியையைத் தவிர்க்கும் வகையில் போர் இடை நிறுத்தம் அல்லது போர் தணிவை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்புக்காக, தற்காலிக மோதல் இடைநிறுத்தம் குறித்த பேச்சுகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு வலயம் மீதான தனது இறுதி நடவடிக்கையை அரசு இப்போதைக்கு ஆரம்பித்துவிடக்கூடாது என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.
லண்டனில் "த கார்டியன்" பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ள ஜோன் ஹோம்ஸ், பெருமளவு மக்கள் குவிந்துள்ள சிறிய பகுதியில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் சர்வதேச அளவில் அரசின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதா இல்லையா என்பதை மக்கள் தாங்களே தீர்மானிக்க அனுமதிக்குமாறும் விடுதலைப் புலிகளைக் கேட்டுக்கொண்டுள்ள அவர், இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: லண்டன் தமிழ் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் சந்தித்துக்கொண்டுள்ள அதேவேளை, இலங்கையின் வடபகுதிக் கடற்கரையோரங்களில் இரத்தக்களரி ஏற்படுவது அதிகளவு சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவம் விடுதலைப் புலிகளை மிகச் சிறிய பகுதிக்குள் தள்ளியுள்ளது. இதன் காரணமாக எவ்வித துப்பாக்கிப் பிரயோகமோ அல்லது ஷெல்வீச்சோ தவிர்க்கமுடியாதபடி பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியுள்ள ஒரு இலட்சத்து 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் வரையிலான மக்களுக்கு மத்தியில் இழப்புகளை ஏற்படுத்தும்.
இரு தரப்பினதும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சரியான புள்ளி விபரத்தையும், தாக்குதலை மேற்கொண்டது யார், எப்போது என்பதையும் உறுதி செய்வது சாத்தியமற்றதாகவுள்ளது. பொதுமக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி மறுப்பது தெளிவான விடயம். எனினும் பலர் தப்பியுள்ளனர். இறுதிப் போருக்கு இரு தரப்பும் தயாராகலாம் என நான் அச்சமடைகிறேன். இது மிக மோசமான நிலைமையாகும். நீண்டகால, முழுமையான யுத்த நிறுத்தத்துக்கு இணங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
பாதுகாப்பான விதத்தில் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒரேவழி, தற்காலிக மனிதாபிமான அமைதி நிலையே. இதன்போது மனிதாபிமான பணியாளர்களும் நிவாரணப் பொருள்களும் மோதல் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அங்கிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். இரு தரப்புக்கும் இதனைச் செய்ய வேண்டிய கடப்பாடுள்ளது. மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேற அங்குள்ள மக்கள் விரும்பவில்லை என்றும் அவர்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் தம்முடன் வந்துள்ளனர் என்றும் மேலும் அரசால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என அஞ்சுகின்றனர் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். எனினும் தப்பியோடும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் மீன்பிடியை மட்டுப்படுத்தியுள்ளனர் என்றும் மக்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தக்கூடிய படகுகளை சேதப்படுத்தியுள்ளனர் என்றும் பொதுமக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாகப் போர்புரிய நிர்ப்பந்திக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.
மோதலில் சிக்கியுள்ள மக்கள் தாங்கள் தொடர்ந்து தங்கியிருக்கவா அல்லது வெளியேறவா விரும்புகின்றனர் என்பதை அவர்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். இதனை விடுதலைப் புலிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். விடுதலைப் புலிகள் உண்மையிலேயே தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுள்ளனர் என்றால் பொதுமக்களின் தேவையற்ற இந்தத் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவவேண்டும்.
மோதல் நடைபெறும்போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அரசு பின்பற்ற வேண்டும். தற்காலிக மோதலைத் தவிர்ப்பதற்கான பேச்சுகள் இடம்பெறும் வேளையில் இறுதித் தாக்குதலொன்றை மேற்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும். சிறிய பகுதியில் பெருமளவு மக்கள் அடைபட்டுள்ள நிலையில் இராணுவ நடவடிக்கையென்பது பெருமளவு பொதுமக்களுக்கு உயிரிழப்புகளையும் காயங்களையும் கொண்டுவரலாம். அரசு நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் ..
மேலும் சர்வதேச ரீதியில் அரசின் நம்பகத்தன்மையை அது பாதிக்கும் மேலும் நல்லிணக்கம் காணவேண்டிய தேசிய குழுக்களுடனான நம்பிக்கையும் பாதிக்கப்படும். இவ்வாறான முக்கியமான தருணத்தில் சுதந்திர மனிதாபிமானப் பணியாளர்கள் மேலும் உதவிகளைக் கொண்டுவர அனுமதிக்கப்பட வேண்டும். நிலைமையை மதிப்பிடவும் மக்களுக்குத் தமது விதியைத் தாமே தீர்மானிக்கவும் அனுமதிக்க வேண்டும். விநியோகங்கள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்களுக்கான அனுமதி வழங்கப்படாத பட்சத்தில் நோய்கள், சிகிச்சையளிக்கப்படாத காயங்கள் மற்றும் பட்டினியால் பலர் இறக்கலாம். அரசு தங்களை மோசமாக நடத்தும் என பாதுகாப்பு வலயத்தில் உள்ள பல பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர் என்பதை அரசு ஏற்றுக்கொள்வதன் மூலம் நெகிழ்வுப் போக்கை வெளிப்படுத்த வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். சர்வதேச தராதரத்திற்கு அமைய உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் நடத்தப்படவேண்டும்.
0 comments :
Post a Comment