Thursday, April 23, 2009

நான் நீ நாம். -வம்சிகன்-



உயிரா பிணமா
வலியது சொல்!

சொந்தப் பிணத்தைச்
சுமந்துகொண்டு
மறுபிறப்பின் நம்பிக்கையில்
இன்னுமொரு
கருவறை நோக்கிக்
கண்ணீரில் நீந்தி
வருபவர்கள்மீதும்
கொலைச்சுவர்
ஏன்?

ஒவ்வொரு பிணத்தைத்
தாண்டியபோதும்
உனது இலக்கும்
பிணமானதை
உணரவேயில்லை.

உயிர்.. ஆயிரமாயிரமாய்
உருவாக்கும்!

உயிரைப் பறிக்கும்போது
ஓலங்களுக்கிடையில்
வெறும் பிணத்தை மட்டுமே
உன்னால்
உருவாக்க முடியும்!

அழுகிற முகத்தில்
சிதம்பியிருக்கும் சோகம்
திராவகமாய்த்
தகிக்கிறது!

நெஞ்சினில் உதைத்த
பிஞ்சுப் பாதம்
அசையாது போன நிமிடம்
நின்றே போனது
இவனது உலகம்!

காட்டுத் தீயை
கண்ணீரால்
நனைக்க முயன்று
தோற்றுப்போய்
அழுகைக்குள்
அடைக்கலமாகும்
மனிதன்!

மடியினில் உயிரையும்
மனதினில் பிணத்தையும்
சுமந்தபடி..

இந்த
வைரத்தைப் படிமப்படுத்த
எத்தனையாயிரம் கனவுகளை
அந்தச் சுரங்கம்
பத்து மாதங்களுக்குள்
அடுக்கடுக்காய் அழுத்தியழுத்திப்
புதைத்திருக்கும்?

சுட்டுவிரல் அசைவில்
உனக்குச் சுவாசம் தரும்
மரங்களையே
வெட்டுவதேன்?

ஆயுதங்களைக்
கீழே போடு!
மறந்தே போ!
அறிவேந்து!

ஒரு நாள் வாழ்க்கையில்
அழகைப் பூக்கும்
பூக்காடு
பூமி முழுதுமாய்க்
கொட்டிக்கிடக்கிறது!!



-வம்சிகன்-
2009-04-22

No comments:

Post a Comment