யாருடைய நெருக்குதலாலும் போர் நிறுத்தம் செய்யவில்லை: ராஜபட்ச
கொழும்பு, ஏப். 18: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாருடைய நெருக்குதல் காரணமாகவும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல முன்னணி நாடுகள் இலங்கையை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜபட்சவின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இலங்கை விடுதலைக் கட்சியின் கூட்டம் சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அப்போது அதில் அவர் பேசியதாவது:
இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உலக நாடுகள் பலவும் இலங்கையை வற்புறுத்தி வருகின்றன.
இந்த வாரத் தொடக்கத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டையொட்டி இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அரசு அறிவித்தது. சண்டை நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை மீட்பதற்காக இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி அப்பகுதியிலிருந்து மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெளியேறவில்லை. 815 பேர் மட்டுமே அரசின் பாதுகாப்புப் பகுதிக்கு வந்துள்ளனர்.
ஆதலால் சர்வதேச நாடுகளின் முடிவுகளுக்கு கட்டுப்படுவதா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டிய உரிமை மக்களிடம் மட்டுமே உள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்து சில அரசியல்வாதிகள் இலங்கை மீது அவதூறான பிரசாரத்தை பரப்பிவருகின்றனர். இதுதொடர்பாக சர்வதேச நாடுகளிடம் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவருகின்றனர். அரசின் கொள்கை மீது முடிவு எடுப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை.
அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படும். அதுவும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருந்தால் மட்டுமே எடுக்கப்படும். நாடு எப்போதும் ஒற்றுமையாக ஒருமைப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்பதையே மக்கள் விரும்பிவருகின்றனர்.
நாட்டைத் துண்டாடுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டவர்களிடமிருந்து நாடு தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது என்றார்.
நன்றி தினமணி
0 comments :
Post a Comment