Tuesday, April 28, 2009

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அனுமதி மறுப்பு



சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்டின் இலங்கை விஜயத்துக்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய வெளிவிவகராச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் ஆகியோர் நாளை இலங்கை வரவிருப்பதாக பிரித்தானியா கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையைத் தாம் நிராகரிக்கவில்லையெனவும், ஒரே நேரதத்தில் பலநாடுகளின் உயர்மட்டக் குழுவினரைக் கையாள முடியாதெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியிருப்பதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனாலும், திட்டமிட்டபடி தான் இலங்கைக்குச் செல்லப்போவதாக சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

“என்னை அனுமதிக்க முடியாதென இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். நான் ஒரு அனுமதி வழங்கக்கூடாத நபரல்ல. ஏனைய நேரங்களில் நான் வரவேற்கப்பட்டுள்ளேன். எனவே, இலங்கை செல்வதில் உறுதியாகவுள்ளேன்” என சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை வழமைக்கு மாறான வகையில் அமைந்துள்ளது எனவும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் பல்வேறு இராஜதந்திரிகள் வரும் பட்சத்தில் அவர்களின் தேவைகளைக் கவனிப்பதில் தாம் சவால்களை எதிர்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

நன்றி ஐஎன்எல் லங்கா

No comments:

Post a Comment