மோதல் நிறுத்தம் நீடிக்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை வலியுறுத்து
தற்காலிக மோதல் நிறுத்தத்தைத் தொடர்ந்தும் நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை வகித்துவரும் செக்கோஸ்லாவாக்கியா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இரண்டு நாட்கள் தற்காலிக மோதல் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டதை வரவேற்றிருக்கும் செக்கோஸ்லாவாக்கியா, இந்த மோதல் நிறுத்தம் தொடர்ந்தும் நீடிக்கப்படவேண்டுமெனக் கூறியுள்ளது.
“மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது” என அந்த நாடு குறிப்பிட்டுள்ளது.எனவே, பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனிதநேய உதவிகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மோதல் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட வேண்டுமென செக்கோஸ்லாவாக்கியா விடுத்துள்ள அறிக்கையில் கோரிக்கை முன்வைத்துள்ளது.
13,14ஆம் திகதிகளில் தற்காலிக மோதல் தவிர்ப்பைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகம் வரவேற்றிருந்தது.
அதேநேரம், விடுவிக்கப்படாத பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கும் செக்கோஸ்லாவாக்கியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரும் மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனிதநேயச் சட்டங்களுக்கும் மதிப்பளித்து நடக்கவேண்டுமென வலியுறுத்தியிருக்கும் செக்கோஸ்லாவாக்கியா, இலங்கையில் மோதல்களை நிறுத்தி பொதுமக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான எந்த உதவியையும் செய்யமுடியும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் அறிவித்திருப்பதையும் வரவேற்றுள்ளது.
இதேவேளை, 13, 14ஆம் திகதிகளில் வடபகுதியில் தற்காலிக மோதல் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டபோதும் அங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அரசாங்கம் இதனை உறுதிப்படுத்தவில்லை.
Thanks INL Lanka
0 comments :
Post a Comment