Monday, April 13, 2009

இலங்கை இனப்பிரச்சினை விவகாரங்களில் தலையிடும் வாய்ப்பை நோர்வே இழந்துள்ளதாக இலங்கை அரசு அறிவிக்துள்ளது.



நேற்றுமுன்தினம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இலங்கை அரசை யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு செல்லுமாறு நோர்வே அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்த புலி ஆதரவாளர்கள் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நாடாத்தி அதன் கட்டிடத்திற்கும் தளபாடங்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தனர்.

இவ்விடயத்தில் நோர்வே அரசு இலங்கைத் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அதன் தார்மீக கடமையில் இருந்து தவறியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை அரசு, நோர்வே எதிர்வரும் காலங்களில் இலங்கை உள்விவகாரங்களில் தலையிடுவதையோ அன்றில் அனுசரணையாளராக செய்படுவதையோ முற்றாக தடைசெய்துள்ளது. இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகம் ஒஸ்லோவில் தாக்குதலுக்கு உள்ளானது தொடர்பாக அமைச்சகத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு இலங்கைக்கான நோர்வே தூதுவர் ரோர் ஹார்ற்றன் அவர்கட்கு இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகல்லாகம அழைப்பாணை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வன்னியில் யுத்த சூனிய பிரதேசத்தினுள் முடங்கியுள்ள புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனை நோர்வே அரசு தொடர்பு கொண்டு பேசியுள்ளது. நடேசனுடன் பேசிய நோர்வே அரசு தாம் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தி தருவதாக புலிகளுக்கு உறுதி வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட புலிகளின் முன்னணித் தலைவர்களை நாட்டுக்கு வெளியே எடுப்பதற்கும் அவர்கள் இணங்கியதாக தெரியவருகின்றது.

எது எவ்வாறாயினும் இவ்விடயங்களை இலங்கை அரசு அறிந்திருந்தும் அவற்றிற்கு எதிராக எந்த நடவடிக்கைளையும் மேற்கொண்டிருக்கவில்லை. மாறாக பிரபாகரன் நாட்டைவிட்டு தப்பிச் சென்று இலங்கை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுபட்டால்போதும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்ததையே அவதானிக்க முடிந்திருந்தது. ஆனால் இன்று புலிகளின் அளவு கடந்த வன்செயலால் மேலும் நிலைமைகள் சிக்கல் ஆக்கியுள்ளதை உணர முடிகின்றது.

No comments:

Post a Comment