வவுனியா நிவாரணக் கிராம மக்கள் உறவினர், நண்பர்களை சந்திக்க அனுமதி
புதுவருடத்தை முன்னிட்டு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை
வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை வெளியில் உள்ள தமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்கு நேற்று (12) முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 65 ஆயிரம் பொதுமக்கள் வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களினால் இவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்-சிங்கள புத்தாண்டை தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த ஒழுங்குகளை மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது. சகல நிவாரணக் கிராமங்களிலும் விசேட வரவேற்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு நண்பர்கள் உறவினர்களினரிடையே புதுவருட பரிசில்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் என்பன பரிமாறவும் இதனூடாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பண்டிகையை முன்னிட்டு மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சும் இராணுவமும் இணைந்து அங்குள்ள சிறுவர்களுக்கு பரிசில்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை அன்பளிப்புச் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் கூறினார்.
பல வருடங்களாக புலிகளின் பிடியில் இன்னல்களுக்கு மத்தியில் புதுவருட பண்டிகையை கொண்டாடிய மக்கள் இம்முறை முதற்தடவையாக தமது உறவினர்களுடன் நிம்மதியாக பண்டிகை கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு பண்டிகைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது தொடர்ந்தும் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கும் வகையில் விசேட அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டம் கட்டமாக சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அதுவரை மக்கள் பொறுமைகாக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Thanks Thinakaran
0 comments :
Post a Comment