Tuesday, April 21, 2009

போர்குற்றங்களை விசாரணை செய்ய ஐ.நா ஆணைக்குழு அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்



விடுதலை புலிகளிற்கு இலங்கை இராணுவத்தினரிற்கும் இடையே இடம்பெறும் மோதல்களின் போதான போர் குற்றங்களை விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழு அவசியமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம்அவசரக் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகளிற்கு விடுத்துள்ள இறுதி அறிவிப்பு , மோதல்களில் சிக்கியுள்ள பொதுமக்களிற்கானதல்ல. மோதலில் ஈடுபடும் இரு தரப்பும் பொதுமக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனின் அதிகளவு பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும்" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலயத்திற்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை அரசாங்கத்துக்கும் இந்த நிலை தொடரக்கூடாது என உணர்த்துவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு சில மணி நேரமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

"தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களைப் படுகொலை செய்வது போர்க் குற்றங்களாகக் கருதப்படும் என்பதையும், இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள், தளபதிகள் உட்பட அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அனைத்துலகம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com