Monday, April 6, 2009

சிந்திக்காத புலித்தரப்பும் சந்திக்காத சமர்களமும். -கிழக்கான் ஆதம்-



நல்லஅரும் பெருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார்? நாட்டில் ஆணை
சொல்லவரும் அரசியலார் செந்தமிழ்நா டிதுவென்றும் தெரியார் போலும்!
வல்லவரும் பெரியநிலை வாய்த்தவரும் என்செய்தார்? இன்ப வாழ்வின்
எல்லையறிந் தும்திருந்தாத் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்று.

(புரட்சிக் கவி பாரதிதாசன்-தமிழியக்கம்)

விடுதலைப் போர் நிறைவு பெறும் நிலையில் ஊடகப் போர் ஒன்றிக்காக புலிகளின் அமைப்புக்கள் தங்கள் பணங்களை விரயம் செய்கின்றனர். களத்தில் மிகவும் அடிவாங்கி தங்கள் கோவணத்தையும் இலங்கை அரசு உருவியுள்ள நிலையில் களமாற்றம் நிகழும் என தொலைக்காட்சியில் ஜோசியக் கார்ர்கள் போல் தமிழ் புத்திஜீவிகளாக தங்களைக் காட்டும் சில பத்திரிகையாளர்கள் கட்டியம் கூறுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.

உலக அரங்கில் இருக்கும் அனைத்து களநில ஆய்வாளர்களைவிடவும் தாங்களே மிகவும் துள்ளியமாக ஆய்வுகள் செய்து கூறுவதாக தங்களுக்கு வழங்கப் பட்ட கட்டளையை அப்படியே இவர்கள் எழுத்தில் வடித்து வெளியிடுவதானது புலம் பெயர் தேசங்களில் உள்ள தங்கள் ஆதரவாளர்களின் உடைந்துபோன உள்ளங்களை ஒட்டவைப்பதற்காகும்.

உலகத் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திசாலிகள் அனைவரும் ஒரு பக்கமாக ஓட இந்தப் புத்திசாலிகள் எதிர்பக்கம் ஓடுகின்றனர். தங்களின் நலன்களை மட்டும் சிந்திக்கும் இவர்களின் வரட்டு வாதங்களும் ஆய்வுகளுமே இன்று பல இலட்சம் மக்களை உயிரை கையிலெடுத்து பையில் பாதுகாக்க வேண்டிய நிலையில் வன்னியில் வைத்துள்ளது. இந்த நிலையும் ஆக்கபூர்வமாக எதையும் சிந்திக்காமல் பத்து வருடத்திற்கு முன்னால் உள்ள புலிகளை கற்பனையில் பார்த்துக் கொண்டு செயற்படும் இவர்களின் செயற்பாடுகளை என்னவென்று சொல்வது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் “பாரிய இராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றல் பத்தாயிரம் இரானுவத்தினர் தப்பியோட்டம்” என செய்தி எழுதிய அவர்களின் பத்திரிகைகள் இன்று இராணுவத்தினரின் பெரு எடுப்பிலான போர் இடம்பெறும் போது “மருதமுனையில் வைத்து பொலிஸ் பயிற்சிக் கல்லூரி அத்திச்சகர் பள்ளி வாயலுக்கு செல்லும் போது சுட்டுக் கொலை புலிகள் உரிமை கொரியுள்ளனர்” என செய்தி வெளியிடுவதானது அவர்களின் தாக்குதல் பலத்தையே கோடிட்டு காட்டுகிறது. அதுவும் அவர்களின் நேரடிக் கட்டளையில் நடந்ததாக தெரியவில்லை கிழக்கில் இருக்கும் சில நோண்டிப் புலிகள் நிராயுதபாணியாக கடவுளைத் தொழ பள்ளிவாயலுக்கு சிவிலுடையில் சென்று கொண்டிருந்த ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வீர வசனம் பேசுகின்றனர். ஏன் களமுனைக்கு செல்லும் இராணுவத் தளபதிக்கோ அல்லது இராணுவத்தின் செயலருக்கோ இவ்வாறான ஒரு தாக்குதலை வேண்டாம் அவர்கள் செல்கின்ற வழியில் அல்லது செல்லவிருக்கும் இடத்திற்கு ஒரு செல் தாக்குதல் நடத்தியிருந்தாலும் அதை வீரம் எனலாம். அங்கே புலிகளின் தளபதிகள் கண்ணீரும் கம்பலையுமாக கட்டளை வழங்க இங்கே வரட்டு கெளரவம் இவர்களுக்கு.

அப்பாவி மக்கள் மீதே இராணுவம் தாக்குதல் நடத்துவதாக கூறும் இவர்கள் அப்படியானால் அப்பாவி மக்களா அவ்வளவு ஆயுதங்களையும் வெடி பொருற்களையும் விட்டுச் செல்கின்றனர். தங்களிடம் இருப்பதை காப்பாற்றி கொண்டு செல்லக் கூட துப்பறிருக்கும் புலிகளை காப்பாற்ற இவர்கள் எவ்வளவு வீர வசனங்களை எழுதினாலும் அவைகளை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இவ்வுலகில் தயாராகவில்லை.

யுத்த சூனிய பிரதேசங்களில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அவர்கள் படும் தூன்பங்களில் இருந்து மீட்கப் படுவதற்கான தங்கள் பணிகளை மேற்கொள்வதை விடுத்து புலிகளை காப்பாற்ற முற்படும் இவர்களை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. அங்கே இவர்கள் காப்பாற்ற எதுவும் மீதமும் இல்லை புலிகளில் ஆகவே மக்களை விடுதலை செய்ய ஆவண செய்து நல்லதோரு அரசியல் திட்டத்திற்கு பங்களிப்பதே புத்திசாலித்தனமானது.

ஒரு சிறு குழந்தைகூட விளையாடும் போது விழுந்து விட்டால் அழும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால் தனாக எழும்பி தன்னை சரிசெய்து கொண்டு ஓடி வரும் ஆனால் இந்தப் புலிகளின் ஆதரவாளர்கள் எத்தனைமுறை விழுந்து கொண்டு அழுகின்றனர் யாரும் உலகில் அவர்களை அரவணைக்க வரப்போவதில்லை என்று தெரிந்தும் எழுந்து தாங்களாகவே சுதாகரித்துக் கொள்ளும் ஒரு சிறு குழந்தையின் புத்தி கூட இவர்களுக்கு இல்லை.

புலிகள் மாவிலாற்றை மறைத்து யுத்த்திற்கு அழைப்பு விடுத்தபோது அண்ணர் தொடங்கிட்டார் இனி தமிழ் ஈழத்தின் மீதி முற்பதுவீதமும் மீட்கப்பட்டு தமிழீழம் மலர்ந்துவிடும் என ஒரு அரசையும் அதன் இராணுவத்தையும் கணக்கிலெடுக்காத இவர்கள் இனி இராணுவம் நச்சுவாயுத் தாக்குதல் நடத்தியே புலிகளை பிடித்தாகவே கதை அளப்பர். அவர்களுக்கும் அவர்களின் ஆய்வாளர்களுக்கும் இதை தவிர வேறு எந்த கதையும் சொல்லி தங்களின் தொல்வியை ஒப்புக் கொள்ள சாட்டுப் போக்கு இல்லை.

இலங்கை அரசும் இராணுவம் அசூர வேகத்தில் தங்களை மீளமைத்துத் கொண்டிருந்த காலத்தில் இவர்களின் களநிலை ஆய்வாளர்கள் ஏதேதோ கதையெல்லாம் கூறி புலிகளின் ஒரு பிடி மண்னையும் சிங்களம் பிடிக்க முடியாது என கட்டியம் கூறிக் கொண்டிருக்க அமெரிக்க இலங்கைக்கான தூதுவரோ புலிகள் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்தால் மிகவும் வலிமை வாய்ந்த இலங்கை இராணுவத்தை எதிர் கொள்ள வேண்டிவரும் எனக் கூறியிருந்தார்.

அவைகளையெல்லாம் கவனிக்காது தங்களது வாழ்கையை வளப்படுத்திக் கொள்வதற்காக மட்டும் புலிகளை புகழ்ந்து உண்மைக்கு புறம்பாக ஆய்வுகள் எழுதும் ஆய்வாளர்கள்தான் புலிகளின் இந்த நிலைக்கு காரணம். தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிக்குள் இருந்து கொண்டு மட்டும் தங்களின் ஆயுதங்களையும் பலத்தையும் மட்டும் பார்த்து ஆய்வுசெய்யும் இந்த ஆய்வாளர்கள்தான் இன்று வன்னியில் சிக்கியுள்ள அவ்வளவு மக்களின் உயிர்களுக்கும் பொறுப்பு.

தங்களைச் சூழப்போகும் மிகப்பெரும் கருமேகத்தை காணமுடியாத இவர்களுக்கு இருப்பது கண்களா? என்று ஒரு சாரார் அன்று கேள்வி தொடுக்க இவர்களோ உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தை வென்றவர்கள் புலிகள் என தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருந்தனர்.

புலிகள் இதுவரை எந்த பேருவாரியான இராணுவ முன்னெடுப்புக்களையும் தங்கள் பலத்தால் மட்டும் வெற்றி கொள்ள வில்லை. அவர்கள் இராணுவத்துக்குள் தங்களுக்கு சாதகமாக இருந்த சில அதிகாரிகள் மற்றும் தங்களால் விலைக்கு வாங்கப் பட்ட நபர்களின் உதவிகள் மற்றும் குள்ளநரித்தனமான அரசியல் வாதிகளின் உதவிகளுடனேதான் தங்கள் வெற்றியை பிரபாகரன் ஈட்டினார்.

தற்போதைய அரசு முதலில் அந்த வழிகளை மூடிவிட்டதால்தான் கிலி பிடித்தது புலிகளின் தலைமைக்கு உடனே புலம் பெயர்தேசத்தில் உள்ள தங்களின் முகவர்களை செயற்பட வைத்து உலக நாடுகள் முழுவதிடமும் மற்றும் அவர்களால் முன்னால் வெற்றி கொள்ளப்பட்ட உலகின் மூன்றாம் இராணுவ பலம் பொருந்திய நாடான இந்தியாவிடமும் உயிர் பிச்சை கேட்கின்றனர். மட்டுமல்லாது சாதுரியமாக தங்களை நம்பி வந்த மக்களுக்கும் தங்களின் சுயமான முகத்தையும் காட்டிவிட்டனர்.

இன்றைய தகவல்களின் படி பல புலிகளின் முன்னனி தலைவர்கள் சடலங்களாக கிடப்பதை இலங்கை அரசு ஒளிப்பட்மாக வெளியிட்டுள்ளது இதற்கு அவர்கள் என்ன சொல்வார்கள் என்றுதான் தெரியவில்லை.

தற்போது அவர்களின் இணையத்தளங்களின் செய்திகளைப் பார்க்கும்போது இன்னும் இந்தியாவிலும் மற்றும் இதர தேசங்களிலும் பலரை தற்கொலை செய்ய வைத்து பலியாக்கப் போவதும் புலப் படுகிறது இன்னும் சில நாட்களின் அவ்வாறான செய்திகளே அவர்களின் செய்தித் தளங்களை அலங்கரிகப் போகின்றன.

புலிகளினதும் அவர்களின் பினாமிகளினதும் சிந்தனைகள் இவ்வாறு அடிவாங்கிக் கொண்டதற்கு பிரதான காரணம் அவர்கள் சிங்களவர்கள் என்ற ஒரு சாராரை மட்டும் சிந்தப்பதாகும். அவர்கள் இலங்கை அரசை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இலங்கை அரசு என்பது பல்லின மக்கள் அமைப்பு என்பதையும் அங்கு பல கோணங்களின் சிந்திக்கும் சிந்தனாவாதிகளும் கூட அவர்களின் சிந்தனைகளை அப்படியே கூறிவிடும் அவர்களின் முலைகளும் அரசுடன் இருக்கிறது என்பதை மறந்து விட்டனர். இவ்வாறு எதிரியை சாதாரணமாக எடை போட்டதற்கான பலனை இப்போது புலிகளும் அவர்களின் பினாமிகளும் அனுபவிக்கின்றனர். எனலாம்.

இனி இந்த புலி சிந்தனாவாதிகளின் சிந்தனை யெல்லாம் யாரையாவது அப்பாவி மக்களை எதையாவது சொல்லி உசுப் பேத்தி பலியிடுவதாகவே இருக்கப் போவது மட்டுமல்லாது. உலகம் கண்டுகொள்ளாத அந்த புலிவாத அரைத்த மாவையே உயிர் பழிகளுடன் அரைக்கப் போகின்றனர். அதுவும் உலகில் யாருடைய கதவுகளையும் தட்டப் போவது இல்லை இவர்கள் சொல்வது அனைத்தையும் கேட்டுவிட்டு அந்த அமைப்புக்கள் புலிகள் பயங்கரவாத இயக்கம் அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசிடம் சரணடைய வேண்டும் என்ற உண்மையையே கூறப் போகின்றன.

“செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி” (திருவள்ளுவர்)


No comments:

Post a Comment