Thursday, April 2, 2009

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு இன்று முதல் தொலைபேசி வசதிகள்

வவுனியா நிவாரணக் கிராமங்களில் இன்று முதல் தொலைபேசி வசதிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சும் இணைந்து தொலைபேசி இணைப்பு வசதிகளை செய்துகொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் இந்த தொலைபேசியைப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்களது உறவினர்களுடன் தொடர்புகொள்ள வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த பொதுமக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரண உதவிகள், வசதிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு, கொள்ளுப்பிட்டியிலுள்ள மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் தகவல் தருகையில்:

புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 62,212 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலர் உணவு, சுகாதாரம், கல்வி, தற்காலிக வசிப்பிடம், மாதிரிக் கிராமம் உள்ளிட்ட சகல வசதிகளும் சிறப்பாக அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, இந்த நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமது உறவினர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் தற்பொழுது தொலைபேசி இணைப்புகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிலையங்களுக்கும் இரண்டு தொலைபேசிகள் என்ற அடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 15 நிவாரண நிலையங்களுக்கும் இந்த தொலைபேசி இணைப்பு இன்று முதல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.
Thankas Thinaharan

No comments:

Post a Comment