Tuesday, March 31, 2009

விடுதலைப்புலிகள் கேரளாவுக்கு வந்தார்களா? கொச்சி அருகே கடற்கரை நெடுகிலும் தீவிர தேடுதல் வேட்டை

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஒரு கடற்கரை கிராமத்துக்கு படகில் விடுதலைப்புலிகள் வந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, ஆலப்புழை - கொச்சி இடையே கடற்கரை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
படகில் 15 பேர்கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் செர்தாலா அருகே உள்ள தைக்கால் என்ற கடற்கரை கிராம பகுதியில் நேற்று ஒரு படகு வந்தது. அதில், விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடை அணிந்த 15 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அது தொடர்பாக, ஆலப்புழை போலீஸ் நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 3 மணிக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொச்சி நகரை இலக்காக கொண்டு விடுதலைப்புலிகள் வந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் பரவின. கடற்படை தளமான கொச்சியை விடுதலைப்புலிகள் தாக்க கூடும் என்று மத்திய உளவுத் துறை இலாகாவும் கேரள போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது.

வாகனங்கள் சோதனை உடனே, கொச்சி நோக்கி செல்லும் சாலையில் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபிரகாம் தலைமையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. செர்தாலா-கொச்சி நெடுஞ்சாலையில் போலீசாருடன் இணைந்து கமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, செர்தாலா பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில், ``சில வீடுகளுக்கு இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் வந்தனர். அவர்கள் தமிழில் பேசினார்கள். ஆடைகள் இருந்தால் தருமாறு கேட்டனர்'' என்று தெரிவித்தனர். திருச்சூரில் செய்தியாளர்களை சந்தித்த மாநில உள்துறை மந்திரி கொடியேறி பாலகிருஷ்ணன், ``கேரள கடற்கரையில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. விடுதலைப்புலிகள் ஊடுருவுவதற்கான சாத்தியம் உள்ள அனைத்து பாதைகளுமே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.

கடற்படை உஷார்

இது தவிர, கொச்சி அருகே கடற்கரை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை தொடருகிறது. கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள், வான் வழியாக கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன. கடலோரத்தில் உள்ள பகுதிகளில், கடலோர காவல் படைக்கு சொந்தமான படகுகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.

இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. ஜேக்கப் புன்னோஸ் கூறும்போது, ``ஆலப்புழை முதல் கொச்சி வரை உள்ள பகுதிகளில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. அது குறித்து உறுதி செய்யப்படாத வரை, அந்த தகவல் சரியானதா அல்லது தவறானதா என்று எங்களால் கூற முடியாது'' என்றார்.

Thanks Thinathanthi.

No comments:

Post a Comment